- இச்சந்சந்தர்ப்பத்தில் அவரது நேர்காணல் ஒன்றும் பெறப்பட்டது அதை கீழே பார்க்கலாம்.நேர்காண்பவர் நீராவிப்பட்டி,கிழக்கை வாழ்விடமாகக் கொண்டவரும் சமூகசேவையாளருமான தேசபந்து.தேசகீர்த்தி, சாமசிறி முஹம்மது சுல்தான் பரீத்.( தீவு முழுவதிற்குமான சமாதான நீதவான்)சுல்தான் பரீத் - அஸ்ஸலாமு அலைக்கும் முல்லை முஸ்ரிபா அவர்களே!முல்லை முஸ்ரிபா - வஆலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹுசுல்தான் பரீத் – உங்களது புனைப் பெயரை “முல்லை முஸ்ரிபா” என தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன எனக் கூற முடியுமா?முல்லை முஸ்ரிபா – நான் பிறந்த மண் முல்லைத்தீவு எனது தந்தையின் பெயர் முஸ்தபா,தாயின்;; பெயர் சரிபா ஆதலால் எனது மாவட்டத்தின் முல்லை என்ற முற்பகுதியுடன் தந்தையின் பெயரின் முதற்பகுதியையும், தாயின் பெயரின் இறுதிப் பகுதியையும் இணைத்து “முல்லைமுஸ்ரிபா" எனச் சூட்டிக் கொண்டேன்.சுல்தான் பரீத் - உங்கள் குழந்தைப் பருவம் நினைவிருந்தால் அது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?முல்லை முஸ்ரிபா – குழந்தைப் பருவம் குதூகலமாகவே இருந்தது. வாப்பாவிடம் கார் இருந்தது. கடைஇருந்தது. குடும்பம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.லீலா அக்காவும், பவானி அக்காவும், அரிவரிமட்டை சொல்லித் தந்தது ஞாபகம் இருந்தது. முதலாம் வகுப்பில் முதல் பரிசு பெற்றது ஏழுவயதில் நோன்பு பிடித்தது. கந்தையா அண்ணர் தேத்தண்ணிக் கடை மணிக்கூட்டில் நேரம் பார்க்க பழகியது.மாமரத்து ஊஞ்சலில் பாட்டுப் பாடியது எல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது.சுல்தான் பரீத் – உங்களது நிரந்தர வாழ்விடம் (முகவரி) பற்றி என்ன கூற ஆசைப்படுகிறீர்கள்?முல்லை முஸ்ரிபா – கணுக்கேணி மேற்கு தண்ணீர்ஊற்று முள்ளியளை இதுதான் நிரந்தர முகவரி. அசன் வளவுதான் பிறந்த இடம். இந்த முகவரியை எனது புத்தகங்களில் பதிவு செய்தே வருகிறேன். பிஞ்சுவிரல்களால் முற்றத்து மண்ணில் அகரம் எழுதிய முகவரி தொப்புள்கொடி மண்ணில் முகமும்,மனமும் மறக்கக்கூடியதா?சுல்தான் பரீத் – உங்களது மார்க்கக் கல்வியை யாரிடம்,எதுவரை கற்றீர்கள்?முல்லை முஸ்ரிபா - எங்கள் ஊரில் அப்போது இப்போதும்தான் முழுநேர மதரஸாக்களோ அரபுக்கல்லுரிகளோ இல்லை. மாலை நேர ஓதப்பள்ளிகளே இருந்தன. இவை பள்ளிவாசல் பரிபாலனத்தின் கீழ் நடத்தப்பட்டன. அங்குதான் குர்ஆன்பயின்றேன். முன்னர் சிலர் வெளியார் மதரஸாக்களில் கற்று மௌலவிகளாகி எமது ஊர்களில் கடமையாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்க கல்வி என்ற வகையில் இஸ்லாமிய கலாசாரம் பி.ஏ வரைபடித்துள்ளேன்.சுல்தான் பரீத் -உங்களது பெற்றோர் உங்கள் மீது கொண்டிருந்த அக்கரை அல்லது அன்பு அன்றும்,இன்றும் உங்கள் மனசில் எப்படியான தாக்கத்தை செலுத்தியது,செலுத்துகிறது?முல்ல முஸ்ரிபா – என்மனசின் வரைபடத்தில் பெற்றோர் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நான் பதிவு செய்துள்ளேன். வாப்பா கற்றுத்தந்த நேர்மையும் தர்ம சிந்தையும் உம்மா கற்றுத்தந்த அடக்கமும் பொறுமையுணர்வும் இன்னும் என்னை ஆற்றுப்படுத்தியே வருகின்றன. அவர்கள் இரத்தத்தில் ஊறிய என்நரம்புகளில் உயிர்த்துக்கொண்டிருக்கும் அறிவையும் மனித்ததையும் என் பெற்றோர்தந்த அன்புப்பரிசாகவே நான்அன்றும்இன்றும் பார்க்கின்றேன்.சுல்தான் பரீத் - உங்களது பாடசாலை முதற் பிரவேசம் எப்படி இருந்தது?முல்லை முஸ்ரிபா –வரைபடங்களின் அல்பத்தை திறக்கும் போது ஞாபகத்துரிகை ஐந்தாவது வயதிற்கு வர்ணம்தீட்டுகின்றது. நான் அரிவரியில் சேர்க்கப்பட்ட முதல்நாளின்வரைபடம் உண்மையில் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அரிவரியின் கடைசி நாளின் வரைபடம் என் ஞாபகத்தில் வலியாகவும் வலுவாகவும்உள்ளது. (இது எனது மனசின் வரைபடத்தில் எழுதிய முதல்வரி)சுல்தான் பரீத் – நீங்கள் உங்கள் பெற்றோருக்கு முதற் பிள்ளையா?முல்லை முஸ்ரிபா –இல்லை. கடைசிப்பிள்ளை. சின்னதில் செல்வாக்காக இருந்தாலும் மற்றோருக்கு உதவுவோனாகவும் பின்பு பொறுப்புச் சாட்டப்பட்டவனாகவும் வாழவேண்டியதாயிற்று.சுல்தான் பரீத் – உங்களது பெற்றோர்,சகோதர,சகோரிகளின் பங்களிப்பு உங்களது கல்வி விடயத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி யிருந்தது?முல்லை முஸ்ரிபா –எனது ஆரம்பக் கல்விபெற்றோர் சகோதர்களது முழுமையான ஆதரவுடன்தான் அமைந்தது. நான் முதலாம் வகுப்பில் இருந்து முதலாம் பிள்ளைளயாகவே வருவேன். அதனால் அவர்களுக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது. மூத்ததாத்தா டீச்சராக இருந்த படியால் அவரைப்போல் நானும் டீச்சராகவே வரவேண்டும் என்று சின்னவயசில் ஆசைப்பட்டதுண்டு. அவவும் நானாவும் எனக்கு நிரம்பவே உதவியுள்ளனர்.சுல்தான் பரீத் – உங்களது பாட்டன்,பாட்டி சார்பாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா?முல்லை முஸ்ரிபா –எங்களது குடும்பம் ஒரு மரபுவழிகுடும்பமாகவே இருந்தது. ஒருவகையில் கூட்டுக்குடும்பம். நான் படிக்கும் காலத்திலே பூட்டி, உம்மம்மா,, அப்பா,பெரியம்மா, எல்லோரும் சேர்ந்தே எங்கள் குடும்பம். வாழ்ந்த்து.பூட்டி முத்தும்மாவின் தோற்றம் இன்னும் என் நினைவில் உறைந்துள்ளது.. பட்டணத்தார் எல்லோராலும் அழைக்கப்படும் அவரது பூர்வீகம் யாழ்ப்பாணம்.மீராசாய்பு அப்பா, உம்மம்மா, பற்றியும் என்மனசில் வரைபடம் பற்றியும் எழுதியுள்ளேன். வெள்ளை நெஷனல்சாரத்துடன் நீளக்கை வீசி நடக்கும் உற்சாகமான தோற்றம் உடையவர் அவர். ஆட்டுவியாபாரத்திலிருந்து பாய்வியாபாரம்வரை எல்லாவியாபாரமும் செய்வார். பள்ளியில் தொழுது கொண்டிருந்த போதுநெஞ்சுவலிவந்து சிலநாட்களில் மவுத்தாகிபோனார். உம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன். உம்மம்மா 1987 இல் அகதியானது போது புத்தளத்து முகாமில் வைத்து வபாத்தானார். கடைசிகாலத்தில் கூட அவரை நல்லாய்பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கம் இன்று வரை எனக்குள் இருக்கிறது. அந்த ஏக்கத்தை கவிதைகளில் தணித்திருக்கிறேன்.சுல்தான் பரீத் – உங்களது ஆசான்களில் உங்களுக்கு வழிகாட்டியாக யாராவது குறிப்பிட்டு கூறக் கூடியவர்கள் இருந்துள்ளார்களா?முல்லை முஸ்ரிபா – 1ம் வகுப்பில் ஆசிரியராக இருந்த தாசிம்சேர் முதல் பல்கலைக்கழகத்தில் பேராசானாக இருந்த பேராசிரியராக இருந்த சந்திரசேகரன் வரை எனது ஆசான்களின் பட்டியல் நீளமானது. இவர்களில் முன்மாதிரிகைகள் வழிகாட்டிகள் ஆலோசகர்கள் இருந்தனர்.சுல்தான் பரீத் – உங்கள் பாடசாலை நண்பர்களைப் பற்றிய நினைவலைகளை ஒரு முறை மீட்ட முடியுமா?முல்லை முஸ்ரிபா – பாடசாலை நண்பர்கள் ஆரம்ப வகுப்புகளில் இருந்தே தோன்றி விடுவார்கள். 40, 50 பேராக .இருந்த 8ம் வகுப்பு வரும் போது 8 பேர் மிஞ்சினோம். ரஸீம், ஜிப்ரி, மாஹிர். ஜெனீஸா, சக்கி, றைஹானா, றினோஸா (ரமீஸா) இடையில் இடைவிலகி விட்டார்) எனது முன் வகுப்பு கால நண்பர்களும் பின் வகுப்பு கால நண்பர்களும் உருவாகினர். வகுப்பிலே இளம்பிறை கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது. இப்றாஹிம் சேர் நடத்திய வளர்பிறையில் முதல்கதை எழுதியது. அவரது தண்டனைநாடகத்தில் அன்வர் பாத்திரத்தில் நடித்தது. பின்பு நாங்களே நாடகங்கள் தயாரித்து, ஊர்மேடைகளில் போட்டது. எனநினைவலைகள் நீள்கிறது.சுல்தான் பரீத் – உங்களது உயர்தரக் கல்வியை எப்பாடலையில் கற்றீர்கள்?முல்லை முஸ்ரிபா – எனது உயர் கல்வி வித்தியானந்தகல்லூரியில் அமைந்தது அப்போது எமது பாடசாலையில் உயர்வகுப்பு இருக்கவில்லை. சாதாரண.தர சித்தியடைந்தோர் இங்குவந்தனர். உண்மையில் கற்றலின் பெருமையை இங்குதான் உணர்ந்து கொண்டேன் என்றாலும் அசாதாரண சூழல் பல தடைகளைப் போட்டது.சுல்தான் பரீத் .ஆம் அது வேற்று மதம் சார்ந்த பாடசாலை என்பதால் அங்கு கற்ற மாணவர்களும்,கற்பித்த ஆசிரியர்களும் உங்களுடனும்,சக முஸ்லிம் மாணவர்களுடனும் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?முல்லை முஸ்ரிபா –நல்லநண்பர்கூட்டம்உருவானது. எமது வகுப்பில் இருவர் மட்டும் முஸ்லிம் மாணவர் என்ற போதும் பெருநாட்கள் தமிழ்மாணவர்களால் நிறைந்து மகிழ்வானது. எனது வகுப்பு நண்பர்கள் பற்றிநான் எழுதிய கவிதை பற்றியும் ஞாபகத்தில் வருகிறது. தங்கமான தோழனவன் தங்கேஸ் என்று தொடங்கி அவர்களது பெயர்களையும் குணவியல் புகளையும் வெளிபடுத்தும் நீண்ட கவிதையது. இருத்தலுக்கான அழைப்புத் தொகுயில் வித்தியானந்தாரிககளுக்கு வசம் இழந்த உதயம் ஆகிய கவிதைகளும் உள்ளன.சுல்தான் பரீத் – 1987ல் அசாதாரண சூழலிலும்,1990இல் புலிகளினால் வடமாகாணத்தை விட்டும் முஸ்லிம்களை வெளியேற்றிய போதும் உங்கள் மனதை உருக்கிய சம்வங்கள் பற்றி என்ன கூற விளைகிறீர்கள்?முல்லை முஸ்ரிபா – நான் A/L படித்தகையோடு பல்கலைக்கழக படிப்பில் ஆவல்கொண்டிருந்தகாலம். பொருளாதாரசிக்கலில் தொலைந்து கொண்டிருந்தகாலம் தொழில் ஒன்றுக்கு முகங்கொடுக்க தவிப்புற்றகாலம். சமூக சிந்தனையுடன் செயற்பட்டகாலம். ஆசிரியபரீட்சை எழுதிவிட்டு இருந்தபோது IPKF அமைதிப்படை அமைதியை தொலைத்து விட்டகாலம். அப்போது முதலாவது வெளியேற்றம். நிகழ்ந்த்து. நானும் ஊரும் தவித்ததவிப்பு பெரும் சோகமானது பிறகு 1990 இல் துரத்தப்பட்டு அலைந்து சுழல்வு தொடர்ந்த போது மேலும் வலித்தது அது என் கவிதைஎ ழுத்துக்களை செதுக்கியது.சுல்தான் பரீத் – இடம் பெயர்கப்பட்ட காலத்தில நீங்கள் அகதி முகாம்களில் அனுபவித்த இன்னல்கள் பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?முல்லை முஸ்ரிபா –இந்த அலைச்சல் வாழ்வு அகதி முகாம்களில் முடக்கிய போது எனது மனமும் உயிரும் பட்ட துயர் அடங்காப் பெருங்காயங்களுடன் பெரும் தழும்பானது முகாம்கலாசாரமும் மக்களது திரிபுபட்ட வாழ்வும் மனப்போக்குகளும் வறுமையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற பொழுகளுமாய் வருத்தின ஒன்றா,இரண்டா நூற்றுக்கணக்கான துன்பிய நிகழ்வுகள் ஆட்கொண்டன. இவை அனைத்துமே எனது கவிதைகளில் பங்காகியுள்ளன. எலிக்கூத்து கவிதைமுகாம் இருப்பின் பதிவுதான்.சுல்தான் பரீத் – நீங்கள் தற்பொழுது தலைநகரை நோக்கி நகர்ந்துள்ளீர்கள் அதற்கான காரணம் என்னவென அறிய நானும் ஆசைப் படுகின்றேன்.முல்லை முஸ்ரிபா –யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஆகிவிட்டது. ஊர்த்தாவல் உண்மையில் தலைநகர் நோக்கிய நகர்வு எனது பணி நிமித்தமாக உறுதிப்படுத்தப்பட்டாலும் எனது ஆளுமைபரப்பை விரிவுபடுத்துவதற்கான களமாகவும் ஆகியது. சின்ன வயதில் முளை விட்டிருந்த அறிவிப்பாளன்ஆகவேண்டும் என்ற ஆவல் நிறை வேறியது.சுல்தான் பரீத் – நீங்கள் தேசிய கல்வி நிறவனத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாக அறிந்தேன்.அந்த சந்தர்ப்பம் எவ்வாறு கிடைத்தது.முல்லை முஸ்ரிபா – தேசிய கல்விநிறுவகம் திறந்தபல்கலைக்கழகம் கல்வி வெளியீட்டுத் திணைக்களம், யு.ரி.ஐ கல்வி நிறுவகம், தேசிய உற்பத்தி திறன செயலகம், அரசகரும மொழிகள் திணைக்களம் பணி செய்வது புதியபுதிய அனுபவங்களையும் அறிவுப்பரப்புகளையும் விரிவுசெய்கிறது.சுல்தான் பரீத் – உங்கள் கல்வி நடவடிக்கைகளுடன் ஊடகத் துறையிலும் அடி பதித்துள்ளீர்கள் என்பதை நாடறியும் விடயமாகும். அச்சு ஊடகத் துறையில் தாங்கள் எவ்வாறான பங்களிப்பை செய்துள்ளீர்கள்?முல்லை முஸ்ரிபா – அச்சு ஊடகங்கள் எனது எழுத்துகளுக்கு வாய்ப்பளித்துள்ளன. எங்கள் தேசத்தில் பத்திஎழுத்துத் தொடர் ஒன்றை எழுதியுள்ளேன். விடிவெள்ளியில் சொல் புதிது என்ற ஒரு இலக்கியப் பக்கத்தை தயாரித்து இலக்கியப்பக்கத்தை தயாரித்து வழங்கியுள்ளேன்.சுல்தான் பரீத் – தங்களின் புத்தகவெளியீடு சில வற்றிலும் நானும் கலந்து கொண்டிருக்கின்றேன். அதற்காக சுழலை எப்படி பெற்றிருந்தீர்கள்?முல்லை முஸ்ரிபா – இன்று புத்தகவெளியீட்டுச் சூழல் விரிவடைந்தாலும் கூட ஒவ்வொரு எழுத்தாளரும் முதலில் நூலாகம் செய்வது பின்னர் வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்வது எனசிரமப்படுகிறான். நானும் இதுவரை 5 நூல்களை வெளியிட்டுகிறேன். ஒவ்வொன்றின் வெளியீட்டுக்குப் பின்னாலும் பெரும் உழைப்பும் நம்பிக்கையும் தவிப்பும் இருக்கின்றது. வெளியீட்டுக்காகவே வெள்ளாப்பு வெளிஎன்ற நிறுவகத்தை செயற்படுகிறேன். காத்திரமான நூல்களை வெளியிடவிரும்புவோர் எம்முடன் கைக்கோர்க்கலாம்.சுல்தான் பரீத் – அடுத்து இலத்திரனியல் ஊடகங்கள் குறிப்பாக இலங்கை வானொலியிலும் பணி ஆற்றுவது சம்பந்தமாக தாங்கள் என்ன கூற விளைகின்றீர்கள்?முல்லை முஸ்ரிபா – இலங்கை ஒலிரப்புக்கூட்டுத்தாபனத்தில் 1985 குரல் சேர்த்தேன். 2004 இல் இருந்து பகுதி நேர ஒலிபரப்பாளர் ஆனேன். தேசிய சேவை, முஸ்லிம் சேவை அறிவிப்பாளராக கடமையாற்றுகிறேன். மாணவர்மன்றம், நூல்ஆரம் இலக்கியமஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.சுல்தான் பரீத் – தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் தடம் பதித்துள்ளீர்கள் அவை பற்றி தங்கள் மனதில் பதிந்தவை பற்றியும் அறிய ஆசைப் படுகிறேன். ஒரு சில விடயங்களையாவது கூற முடியுமா?முல்லை முஸ்ரிபா – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர் பணியாளராக செயற்பாடும் பலிக்கவில்லை. எனினும் கவிதை வாசிப்பு, உரையாடல், நேர்காணல் எனசிறிதளவு பங்காற்றியிருக்கிறேன்.சுல்தான் பரீத் – முல்லைத்தீவில் தமிழ்,முஸ்லிம் உறவை கட்டி யெழுப்ப தாங்கள் ஆற்றிய பங்கும்,இனி ஆற்றப் போகின்ற பங்கும் எவ்வாறானது?முல்லை முஸ்ரிபா –எனதுபடைப்புகளின் அடிநாதமாக தமிழ்.-முஸ்லிம் உறவே உதிப்பதை காணலாம். உண்மையில் 90 இற்குபின்னிருந்து குறிப்பாக கவிதைகளில் நான் வலியுறுத்திவந்துள்ளேன்.சுல்தான் பரீத் – நீங்கள் மாணவர்களுக்கு கூறக் கூடிய ஆலோச னைகள் என்ன?முல்லை முஸ்ரிபா – தேடலும் தீராத்தாகமும் நோக்கும் தெளிவாக அமைய வேண்டும். வாசிப்பும் திறனாய்வு சிந்தனையும் புதிய தளங்களை சென்றடைய வழிகளைத் திறந்துவிடும். எனவே மாணவர்கள் காலத்தை ஒட்டிபயணிக்கவேண்டும்.சுல்தான் பரீத் – உங்களது சகல துறைகளிலும் நீங்கள் ஆற்றும் பணிகளுக்கு உங்களின் துணைவியாரின் பங்களிப்பு எப்படிக் கிடைக்கிறது?முல்லை முஸ்ரிபா – குடும்பம் என்கிற வரையறைக்குள் இருந்து கொண்டு துணைவியாகவும் இலக்கிய பணிகளில் மிகப்பெரும் துணையாகவும் இருக்கின்றார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.சுல்தான் பரீத் – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் எற்பாடு செய்யப்படுகின்ற கலாச்சார விழா நிகழ்வை அங்கு வாழ் சமூகம் எப்படி பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென நீங்கள் ஆலோசனையை முன் வைக்க விரும்புகிறீர்கள்?முல்லை முஸ்ரிபா – ஒரு சமூகத்தின் வெளிப்பாடு என்பது கலாசாரத்தின் ஊடானது இந்த கலாசார விழாவை தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் பங்களிப்பினால் செழுமைப்படுத்தவேண்டும். விடுபட்டுபோன சமூக உறவை புரிந்து கொள்ளவும் மீள உறுதிப்படுத்தவும் புதிய சந்த்திக்கு பரிசளிக்கவும் பங்களிகளாக ஆகவேண்டும் எனவிரும்புகிறேன்.சுல்தான் பரீத் – இதுவரைவெளிவந்த உங்களது படைப்புகள் விருதுகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?முல்லை முஸ்ரிபா பாடசாலைகாலத்தில் தொடங்கிஎனது எழுத்துப்பயணம் 1990 களில் தேசிய நிலையை அடைந்து ஈழத்துக்கவிதைப் போக்கில் முக்கிய கவனிப்பை பெருமளவு வெளிப்படமுடிந்தது.இருத்தலுக்கான அழைப்பு (2003) அவாவுறும் நிலம் (2009) சொல்லில்உறைந்துபோதல் (2014) என்மனசின்வரைபடம் (2014) எஞ்சியிருக்கும் சிறகுளால்பறத்தல் (2015) ஆகிய தொகுப்புகள்வெளிவந்துள்ளன. தேசியசாகித்திய விருது வடக்குகிழக்கு இலக்கிய விருது, வடமாகாண இலக்கியவிருது, கொடகே தேசிய விருது ஆகியவிருதுகளை இவைபெற்றுள்ளன. யாழ் முஸ்லிம் இணையத்தின் மூத்தபடைப்பாளர்களது மூத்தபடைப்பாளர் விருது வன்னிசார்ந்தோர்விருது, உலக இஸ்லாமிய இலக்கியமாநாட்டின் இளம் படைப்பாளர்விருது ஆகியவற்றையும் எனது எழுத்துக்கள் பெற்றுள்ளன.சுல்தான் பரீத் – பாடநூல்கள்குறித்து உங்கள் படைப்புகள் வெளி வந்திருப்பது குறித்துகூறமுடியுமா?முல்லை முஸ்ரிபா – தமிழ் மொழியும் இலக்கியமும் பாடநூலில் எனது கவிதை (மீதம்), கட்டுரை (ஈழத்தமிழன்னை தந்தஇருமணிகள்) ஆய்வு (மின்மினிகளால் ஒருதோரணம்) இது தவிர ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். எனது எழுத்துக்கள் பற்றி கல்விக்கல்லூரி மாணவர்கள் ஆய்வுசெய்துள்ளனர். பிரதேசசாகித்திய விழாக்களில் எனது கவிதை நூல்கள் ஆய்வுத்தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன என்பவற்றைக் குறிப்பிடலாம். இறுதியாக எழுது எழுத்துக்களை நேசிக்கும் விமர்சிக்கும் ஆய்வுக்குட்படுத்தும் எனது வளர்ச்சிக்கு உறுதியாக இருக்கும் அனைவருக்கும் நன்றியை பரிமாறுகின்றேன்.சுல்தான் பரீத் – பல சிரமங்களுக்கு மத்தியிலும், 2016 ஆண்டு கரை துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கலாச்சார விழாவை யொட்டி தாங்கள் அளித்த செவ்விக்கு குறித்த கலாச்சாரப் பேரவையின் மலர் வெளியீட்டுக் குழு உறுப்பினர் என்ற வகையில், கலாச்சார பேரவை சார்பாகவும், அதன் தலைவர் பிரதேசச் செயலாளர் திரு சி.குணபாலன் அவர்களின் சார்பாகவும் எமது மனப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.முல்லை முஸ்ரிபா – நானும் தங்களுக்கும், பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழாமுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.சுல்தான் பரீத் – ஜஸாக்கல்லா ஹைரன்.முல்லை முஸ்ரிபா – முபாறக்கல்லாஹ் ஹைரா
Saturday, August 19, 2017
கலைஞர் மற்றும் கல்வியலாளருமான முல்லை முஸ்ரிபா அவர்களை நேர்காணல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.