புத்தளம் பெரிய பள்ளி வாசல் CTFராசிக் கடத்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை. இதன் அச்சுப் பிரதிகளை புத்தளம் பிரதேசத்தில் உள்ள எல்லா ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்டுள்ள சமூகநல ஆர்வலர் P.ராசிக் அவர்களை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்!
அன்புள்ள பொதுமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
நாங்கள் முஸ்லிம்கள். சர்வ சக்தனான அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், மறுமை நாளையும் ஆழமாக விசுவாசித்திருப்பவர்கள். இஸ்லாம் கற்றுத் தந்த விழுமியங்களை, பண்பாடுகளை, கலாச்சாரப் பாரம்பரியங்களை, மனிதநேய மாண்புகளை முடிந்த அளவு ஏற்று, பின்பற்றி, வாழும் பிரதேசத்தில் வாழ்பவர்கள் நாம். 1990ம் ஆண்டுக்குப் பின் இப்பிரதேசம் இங்கு வந்த முஸ்லிம் சகோதரர்களால் வளம் பெற்று வலுப் பெற்று நமக்குள் நல்லெண்ணமும், நல்லுறவும் அன்னியோன்னியமும் வளர்ந்துள்ளதை நாம் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.
இப்படி ஒன்றிணைந்து வாழும் இச்சமூகத்தில் யாரும் விரும்பாத ஒரு அநியாயம் சுமார் 8 மாதங்களுக்கு முன் நடந்துள்ளது. CTF நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான P.ராசிக் கடத்தப்பட்டு இன்றுவரை அவரது நிலைமை என்னவென்று அறிய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை நீடிக்கின்றது. இது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் கூறப்பட்டன. அவரது குடும்பத்தாரும், அனுதாபிகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் இன்றுவரை விடிவில்லை.
கடத்தப்பட்ட P.ராசிக் என்பவர் குற்றம் இழைத்தவராய் இருந்தால் நாட்டின் சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தடை ஏதுமில்லை. இருபது வருட சகோதர ஒன்றிப்பு, சமாதான சகவாழ்வு ஆகியவற்றின் பின்பும் இத்தகையதோர் மனிதநேய அனர்த்தம் இடம்பெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது மட்டுமன்றி, பெரும் வியப்பையும், ஆழ்ந்த விசனத்தையும் இப்பிரதேசத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்கடத்தல், கப்பம் கோருதல், கொலை செய்தல் போன்ற மனிதநேய விரோத செயல்கள் இப்பிரதேசத்தின் இஸ்லாமிய பண்பாட்டு விழுமியங்களைப் பாதிப்பதுடன், குறித்த சம்பவம் பற்றிய அலட்சிப் போக்குடன் நாம் இருப்பது சமூகத்தில் மேலும் இப்படியான சம்பவங்கள் நிகழ வழிசமைப்பதாக அமையும். இச்சம்பவம் நவீன ஜாஹிலிய்ய செயற்பாடாகவும் சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்கும் நாசகார செயலாகவுமே நோக்கப்படுகின்றது.
மேற்படி கடத்தல் நிகழ்வு தொடர்பான போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்ற நிலையிலும் கடத்தப்பட்ட ராசிக் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே உள்ளன என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. இக்கொடூரச் செயலை இப்பிரதேசத்தில் வாழும் சகல முஸ்லிம்களும் தனது சகோதரனுக்கு நிகழ்ந்துவிட்ட அநியாயமாகக் கருதி ஒன்றிணைந்து குரல் கொடுப்பது சன்மார்க்கம் வேண்டி நிற்கின்ற சமூகக் கடமையாகும்.
ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நீ உன் சகோதரனுக்கு உதவிடு. அவன் அநியாயக்காரனாக இருப்பினும் சரி. அநியாயம் இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி" அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் இழைக்கப்பட்டவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், அநியாயம் இழைப்பவனுக்கு எவ்வாறு உதவுவது?" என்றார். இந்த வினாவுக்கு ரசூல் (ஸல்) அவர்கள் "அநியாயம் புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்" என்று கூறினார்கள். (புஹாரி-முஸ்லிம்) மேலும், "அநியாயம் இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். அவனது பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை கிடையாது. அநியாயம் இழைக்கப்பட்டவன் பாவியாக இருந்தாலும் சரியே!" என்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
அன்புள்ள சகோதரர்களே! இக்கொடுமையை அறிந்தும் முஸ்லிம்களாகிய நாம் வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது. அநியாயம் இழைத்தவனைப் பற்றி தெரிந்துள்ளவர்கள் அவன் மீது தங்கள் அழுத்தத்தை, செல்வாக்கைப் பிரயோகித்து, கடத்தப்பட்டவரை விடுவிக்க ஆவன செய்யவேண்டும். சுயநலம், குரோதம், நிறுவன உள்வீட்டு முறுகல் இதற்குக் காரணமாய் இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. எனவே, சமூகத்திலுள்ள உலமாப் பெருமக்கள், புத்திஜீவிகள், சமூகநல ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவான அழுத்தத்தை கொடுப்பது அவசியமும், அவசரமுமாகும். இந்த முன்னெடுப்பானது சமூக நல்லிணக்கத்துக்கும், ஒற்றுமையை கட்டிக் காப்பதற்கும் இன்றியமையாதது. அநியாயக்காரனை அறிந்திருந்தும் அவனையும் அவனது செயலையும் மூடிமறைப்பதற்கு முயற்சிப்பவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களே! அவர்களுக்கும் இக்கொடுமையில் பங்குண்டு என்பதை நினைவிற் கொள்வார்களாக.
ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு - அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான்"
(மிஷ்காத்)
கடத்தலுக்கான சதி முயற்சியில் ஈடுபட்டவர்கள், அதற்காக இன்று வரை உதவி வருபவர்கள், விடயமறிந்தும், தடுக்க முடிந்தும், மௌனியாக இருப்பவர்கள் நிச்சயமாக இச்சமுதாயத்தின் துரோகிகள். அவர்கள் அல்லாத பொதுமக்கள் யாரும் இதற்குப் பொறுப்பல்ல என்பதை நாம் புரிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு பங்கம் ஏற்படாது அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இத்தால் வினயமாக வேண்டிக் கொள்கிறோம். இது தொடர்பாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் கடந்த 22.10.2010ல் வெளியிட்ட கண்டன அறிக்கையும் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். இப்பிரதேசத்திலுள்ள சகல ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகங்களும் இது தொடர்பாக ஏனைய விடயங்களில் போன்றே ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்று வினயமாக வேண்டுகின்றோம்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட சமூக அமைப்புக்கள்
நன்றி www.puttalam.net16.net
குறிப்பு- www.puttalam.net16.net இணையத்தள முகவரியில் இது பெறப்பட்டடது.
இதற்கு முதல் இடுகையும்,அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பிற் கருத்துக்களும் மிகவும் சிறப்பாகவுள்ளது. முஸ்லிம் அகதி அதை தனது இணையத்தளத்தில்
பிரதி போட விரும்பவில்லை.நீங்கள் அதைப்பார்த்தால் உண்மைபுரியும்.
நன்றி www.puttalam.net16.net
குறிப்பு- www.puttalam.net16.net இணையத்தள முகவரியில் இது பெறப்பட்டடது.
இதற்கு முதல் இடுகையும்,அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பிற் கருத்துக்களும் மிகவும் சிறப்பாகவுள்ளது. முஸ்லிம் அகதி அதை தனது இணையத்தளத்தில்
பிரதி போட விரும்பவில்லை.நீங்கள் அதைப்பார்த்தால் உண்மைபுரியும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.