Friday, February 10, 2012

டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகிய இருவரும் மக்கள் முன்- இஸ்லாம் மார்கம் மற்றும் ஹிந்து மதம் சார்பாக விவாதம்.

பெங்களூல் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் "Art of Living" என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது. புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் இந்த விவாத அரங்கம் நடந்தது. "மக்கள் உரிமை" வார இதழுக்காக நமது சிறப்பு செய்தியாளர் ஜன்னா மைந்தன் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட இந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அவர் இங்கே மக்கள் உரிமை வாசகர்களுக்கு வழங்குகிறார்.
- ஆசிரியர் (மக்கள் உரிமை வார இதழ்)


டாக்டர் ஜாகிர் நாயக் 1965ல் பம்பாயில் பிறந்தவர். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர். பிறகு முழுநேர இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக தனது மருத்துவத் தொழிலை தியாகம் செய்தார். Islamic Research Foundation என்ற அழைப்புப் பணி நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சவூதி அரேபியா, தென்ஆப்பிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவற்றில் உரையாற்றி உள்ளார். சமீபத்தில் 'Peace TV' என்ற பெயரில் 24 மணிநேரமும் இஸ்லாத்தை இயம்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கியுள்ளார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தமிழகத்தில் உள்ள பாபநாசத்தில் 1956ல் பிறந்தவர். இவர் 1982ல் Art of Living (வாழும் கலை) என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பு 144 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. யோகாசனத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு நலப்பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. 25,300 கிராமங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய அரசு சாராத அமைப்பாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிறுவியுள்ள அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பெங்களூர் பிரபல பேலஸ் மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல மாநாடுகளை, கருத்தரங்குகளை, கண்காட்சிகளை தன்னகத்தே அமைத்துக் கொண்ட சிறப்பு, பேலஸ் மைதானத்துக்கு உண்டு. ஆனால், அந்த சனிக்கிழமை மாலை ஒரு புதிய வரலாற்றை அந்த மைதானம் அரங்கேற்றி கொண்டிருந்தது. ஒளிவிளக்குகள் அந்த மாலைப் பொழுதை வெளிச்சமாக்கியிருந்தன. அமர்வதற்கு இடமின்றி வி.ஐ.பி. பாஸ்கள் பெற்றவர்கள் கூட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான கிரேன்களில் வீடியோ கேமிராக்கள் மேலும் கீழும் நகர்ந்து கொண்டே படம்பிடித்து உலகம் முழுவதும் காட்சிகளை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆம் இஸ்லாமிய அழைப்புப் பணி வரலாற்றில் முதன் முறையாக இந்தக் விவாத அரங்கம் நேரடியாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள Peace தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.

நமது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழியைச் சேர்ந்த உமர் ஷரீப் தலைமையில் பெங்களூரில் இயங்கும் 'டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட்' நிறுவனம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

முதன்முறையாக இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான டாக்டர் ஜாகிர் நாயக்கும், உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடையே பிரபலமாக இருக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும் இந்த விவாதத்தில் எப்படி வாதங்களை எடுத்துரைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரது உள்ளத்திலும் பொங்கியெழுந்த வேளையில் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த டாக்டர் முஹம்மது நாயக், முதலில் விவாத நடைமுறைகளை எடுத்துரைத்தார். டாக்டர் ஜாகிர் நாயக் விவாதத்தை தொடங்கி வைத்து முதலில் 50 நிமிடங்கள் உரையாற்றுவார் என்றும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்கள் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார் என்றும் அவர் அறிவித்தார். இதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுவார் என்றும் முஹம்மது நாயக் தெவித்தார். இதன்பிறகு இரண்டு அறிஞர்களும் திரண்டிருக்கும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை ஆரம்பித்தார்.

ஹிந்து வேதங்களும் திருக்குர்ஆனும் சொல்லும் கடவுள் கொள்கை ஒன்றே!
                                                                     - டாக்டர் ஜாகிர் நாயக்

திருக்குர்ஆனின் 3வது அத்தியாயமான ஆலஇம்ரானின் 64வது வசனத்தை பீடிகையாகப் போட்டு தனது கருத்துக்களை தொடங்கினார் டாக்டர் ஜாகிர் நாயக். அந்த வசனம்: "(நபியே! அவர்களிடம்) "வேதத்தை உடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: "நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறி விடுங்கள்."

"
திருக்குர்ஆன் பொதுவான விஷயத்தின் பக்கம் மக்கள் ஒன்றுசேர வேண்டும்" என்று கூறுகிறது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மற்றும் ஹிந்து மதத்தை கடவுள் பற்றி கூறப்பட்டுள்ள விஷயங்களில் பொதுவானதைப் பற்றி அறிய முற்படுவோம் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜாகிர் நாயக், "முதலில் ஹிந்து என்றால் யார்? முஸ்லிம் என்றால் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்" என்று தனது உரையைத் தொடங்கினார்.

ஹிந்து என்ற பதம் பூகோளம் தொடர்பானது; சிந்து நதிக்கு அப்பால் உள்ள பகுதிகளில் வாழ்வோருக்கு ஹிந்து என்ற பெயர் உண்டு. இதேபோல் சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்களுக்கும் இந்தப் பெயர் உண்டு. மிக அதிக எண்ணிக்கையிலான வரலாற்று ஆய்வாளர்கள், அரபுகள்தான் முதன் முதலில் ஹிந்து என்ற பதத்தைப் பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார்கள். இந்தியாவிற்கு முஸ்லிம்கள் வருவதற்கு முன்பாக ஹிந்து என்ற பதம் அறியப்படாத ஒன்றாக இருந்தது என்று மதங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Religions) 6-ம் பாகம் கூறுகிறது. ஜவஹர்லால் நேருவும் இந்தப் பதம் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டதுதான் என்று கூறுகிறார். 19-ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக ஆங்கிலேயர்கள் இந்தப் பதத்தை பயன்படுத்தினார்கள். இந்தியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர் அல்லாத பல இன மக்களை அடையாளப்படுத்துவதற்காக அவர்கள் இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார்கள். ஹிந்து மதம் என்று குறிப்பிடுவதை விட 'சனாதான தர்மம்' என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். சுவாமி விவேகானந்தர் கூட ஹிந்துக்களை 'வேதாந்திகள்' என்று அழைப்பதே சரியானது என்று குறிப்பிட்டுள்ளதை டாக்டர் ஜாகிர் நாயக் கோடிட்டுக் காட்டினார்.

'
இஸ்லாம்' என்றால் சாந்தி, அமைதி என்று பொருள். அல்லாஹ்வுக்கு அடிபணிவதின் மூலம் கிடைக்கும் அமைதிக்குத்தான் 'இஸ்லாம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சாந்தியைத் தேடிக் கொள்ளக் கூடியவர்களுக்கு 'முஸ்லிம்கள்' என்று பெயர் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெளிவுபடுத்தினார்.

அடுத்ததாக, புனித வேதங்கள் என்பதற்கான விளக்கங்களை அவர் அளித்தார். ஹிந்து மதத்தைப் பொருத்தவரை, வேதங்களை இருவகையாக பிரிக்கலாம். முதல் வகை ஸ்ருதிகள், இரண்டாம் வகை ஸ்மிருதிகள். ஸ்ருதிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று வேதங்கள், மற்றொன்று உபநிஷத்துகள். ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்ம வேதம் ஆகியவை நான்கு வேதங்களாகும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர், "வேதங்கள் பல கோடி ஆண்டுகள் பழமையானவை" என்று கூறுகிறார்கள். ஆனால், வேறு சிலர் அவை 4,000 ஆண்டுகள் பழமையானதுதான் என்று குறிப்பிடுகிறார்கள். வேதங்கள்தான் மிகப்புனிதமானது என்றும், வேதங்களுக்கும் மற்ற ஹிந்து புனித நூல்களுக்குமிடையே முரண் ஏற்படும்போது வேதங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
உபநிஷத்துகளுக்கு 'குருவின் அருகில் அமர்ந்து பெற்றவை' என்று பொருள். 700க்கும் மேற்பட்ட உபநிஷத்துகள் உள்ளன. ஆனால், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 18 உபநிஷத்துகளைத் தொகுத்து 'உபநிஷக் கோட்பாடுகள்' என்ற நூலை தொகுத்தளித்தார்.

ஸ்மிருதி என்றால், 'கேட்பது, நினைவில் கொள்வது' என்று பொருள். ஸ்மிருதிகள், ஸ்ருதிகளை விட புனிதத்தன்மையில் தாழ்ந்தவையாகும். அவை இறைவனின் வார்த்தைகளும் அல்ல என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாகும். ஸ்மிருதிகளுக்கு 'தர்ம சாஸ்திரங்கள்' என்றும் பொருள் உண்டு. புராணங்களும் இதிகாசங்களும் ஸ்மிருதிகளில் அடங்கும். பிரபலமான இதிகாசங்கள் இரண்டு உள்ளன. அவை இராமாயணமும், மகாபாரதமும் ஆகும். பகவத் கீதை, மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளில் உள்ளவற்றில் வேதங்கள் தான் ஆதாரப்பூர்வமானதாகும் என்று டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்து புனித நூல்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார்.

அடுத்து, இஸ்லாமியப் புனித நூல்களைப் பற்றிய ஒரு பார்வையை டாக்டர். ஜாகிர் நாயக் தனது உரையில் எடுத்துரைத்தார்.

உலகில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். இந்த வழிகாட்டுதல்களில் இறுதியாக வந்தது 'திருக்குர்ஆன்' ஆகும். திருக்குர்ஆன் மனிதகுலம் முழுவதற்கும் வந்த ஒரு வழிகாட்டியாகும். திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அருளப்பட்டதாகும். ஆனால், திருக்குர்ஆனைப் பொருத்தவரை, அது அனைத்து மக்களுக்கும், எல்லா காலகட்டத்திற்கும் அளிக்கப்பட்ட ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர். ஜாகிர் நாயக் இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் 14:1, 14:52 மற்றும் 39:41 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டினார். திருக்குர்ஆனுக்கு அடுத்ததாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. நபிகள் நாயகத்தின் சொல், செயல், மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கி இருக்கும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்திருக்கின்றன என்று கூறினார்.

தனது உரையின் அடுத்தக் கட்டத்தில், கடவுள் கொள்கையைப் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் எடுத்துரைக்க ஆரம்பித்தார். "இந்த பரிமாற்றத்தை நான் சொல்வதும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சொல்வதும் வேதங்களில் சொல்லப்பட்டவைக்கு இசைவாக அமைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

சாதாரண ஹிந்துக்களிடம், கடவுளர்கள் எத்தனை? என்று கேட்டால் 'ஆயிரக்கணக்கான கடவுளர்கள் உள்ளனர்' என்று கூறுவார்கள். 'உலகில் உள்ள அனைத்தும் கடவுள்' என்று சொல்வார்கள். சூரியன், சந்திரன், மரம், செடி, கொடி, பிராணிகள், விலங்குகள் முதலியவற்றையும் கூட கடவுள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற கற்றறிந்த ஹிந்துக்களைக் கேட்டால், 'கடவுள் ஒன்றுதான்' என்று சொல்வார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை 'கடவுள் ஒன்றுதான்; உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது' என்று சொல்வார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடவுள் கொள்கையில் உள்ள முக்கிய வேறுபாடு, உலகில் உள்ள அனைத்தும் கடவுள் என்று ஹிந்துக்கள் சொல்கிறார்கள், ஆனால் முஸ்லிம்களோ, உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடுகிறார்கள். இதை மிக சுருக்கமாக டாக்டர் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் தனக்கே உரிய பாணியில், இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு (') ஒரு மேற்கோள் புள்ளிதான் என்று விளக்கினார். அதாவது, முஸ்லிம்கள் (Everything is God's) என்று சொல்கிறார்கள், ஆனால் ஹிந்துக்கள் (Everything is God) என்று குறிப்பிடுகிறார்கள் என்றார். இந்த சிறிய வேறுபாட்டைக் களைவதற்கான முயற்சியை மேற்கொண்டால், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒருமைப்பாடு ஏற்பட வழிபிறக்கும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்தார். இதைக் களைவதற்கான வழி வேதங்களில் உள்ளது என்று சொன்ன அவர், பல்வேறு ஹிந்து வேதங்களை மேற்கோள் காட்டி, அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் தன்மைகளும், திருக்குர்ஆன் சொல்லும் கடவுளின் தன்மைகளும் ஒன்றுபோல் இருப்பதை சுட்டிக்காட்டி, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் டாக்டர் ஜாகிர் நாயக்.
சந்தோக்கிய உபநிஷத், யஜுர் வேதம், ரிக் வேதம், பிரம்மசூத்ரா என்று பல ஹிந்து புனித நூல்களில், 'கடவுள் ஒன்றுதான்; கடவுளுக்கு பெற்றோர் இல்லை; கடவுளுக்கு ஒப்பாக யாதுமில்லை' போன்ற இஸ்லாம் கூறும் ஏகதெய்வ கொள்கை உள்ளதை ஆதாரங்களுடன் டாக்டர் ஜாகிர் நாயக் சமர்ப்பித்தார்.

பகவத் கீதை: 'சிந்தனையைப் பறிகொடுத்தவர்கள் தான் சிலைகளை வணங்குகிறார்கள்'
பகவத் கீதை: 'நான் யாராலும் பெற்றெடுக்கப்படவில்லை'
யஜுர் வேதம்: 'கடவுளுக்கு நிகராக படைக்கப்பட்டவைகளை வணங்குபவர்கள் இருளில் நுழைகிறார்கள்'
ரிக் வேதம்: 'கடவுள் ஒருவர்தான்; அவனையே வணங்க வேண்டும்; அவனையே புகழ வேண்டும்'

இவ்வாறு எண்ணற்ற மேற்கோள்களைக் காட்டிய டாக்டர் ஜாகிர் நாயக், 'ரிக் வேதத்தில் கடவுளுக்கு அளிக்கப் பட்ட பேர்களில் ஒன்று பிரம்மா. பிரம்மா என்றால், படைப்பாளன் என்று பொருள், இதற்கு அரபியில் சொல்ல வேண்டு மென்றால் 'ஃகாலிக்' என்று குறிப்பிடலாம் என்று தெரிவித்தார். இதேபோல், இன்னொரு பெயரான விஷ்ணுவுக்கு 'ரட்சகன்' என்று பொருள். இதை அரபியில் 'ரப்பு' என்று குறிப்பிடலாம் என்றார்.

சுருக்கமாக வேதங்கள் சொல்லும் கடவுள் 'ஏகன்' என்றும், அவன் இணை, துணையற்றவன் என்றும் ஆதாரங்களோடு விளக்கிவிட்டு, திருக்குர்ஆன் சொல்லும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக திருக்குர் ஆனின் 112வது அத்தியாயமான சூரத்துல் இக்லாஸை மேற்கோள் காட்டினார் டாக்டர் ஜாகிர் நாயக்.

கடவுள் என்று ஏற்றுக்கொள்வதற்கு நான்கு சோதனைகளை திருக்குர்ஆன் வைத்துள்ளது. அவை, 1. கடவுள் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் 2.தேவையற்றவனாக இருக்க வேண்டும் 3). எவரையும் பெற்றெடுத்திருக்கக் கூடாது, எவராலும் பெற்றெடுக்கப்பட்டிருக்கவும் கூடாது, 4. ஒப்பாக யாரும் இருக்கக் கூடாது.

இந்தியாவில் சிலர் பகவான் ரஜ்னிஷை கடவுள் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த சோதனைகள் எதிலும் ரஜ்னிஷ் வெற்றிபெறவில்லை. ரஜ்னிஷ், மத்தியப் பிரதேசத்தில் 11-12-1931ல் பிறந்து 19-01-1990ல் மரணமடைந்ததார் என்பது உண்மை. அமெக்க அரசு அவரைக் கைது செய்து சிறையில் வைத்தபோது, மெதுவாக சாகவைக்கும் நஞ்சு அவருக்கு கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 21 நாடுகள் அவருக்கு விசா அளிப்பதற்கு மறுத்துவிட்டன. கடவுளுக்கு இத்தகைய நிலை ஏற்படுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கேட்டுக் கொண்டார்.

கடவுளை அல்லாஹ் என்று முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். இந்தப் பதமும் தனித்தன்மை வாய்ந்தது. இந்தப் பதத்தை பன்மையாக்க முடியாது, மேலும் எந்தவகையிலும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் தன்மையுடையதாக மாற்றவும் முடியாது என்று விளக்கமளித்தார் டாக்டர் ஜாகிர் நாயக்.

"
இந்த விவாத அரங்கிற்கு ஏற்பாடு செய்தபோது, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் தனது உரைகளைப் பற்றியும் நூற்களைப் பற்றியும் எனது கருத்தை அறிய விரும்புவதாகக் கூறினார்கள். அவர் எழுதிய Hinduism and Islam - The Common Thread (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாம் - ஒரு பொதுவான இழை) என்ற நூலையும் அவரது வீடியோ பேச்சு ஒன்றையும் நான் பார்த்தேன். அதில் உள்ள பல விஷயங்களில் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில், பல விஷயங்களில் நான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளேன்" என்றார் நாயக்.

"
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது ஆதாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை நான் முற்றிலுமாக வரவேற்கிறேன். அதேபோல், ஆழமாக அதைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கும் நான் உடன்படுகிறேன். Similarities between Hinduism and Islam (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாத்திற்கு பொதுவானவை) என்ற தலைப்பில் நானும் ஒரு நூலை எழுதியுள்ளேன்" என்றார் டாக்டர். ஜார் நாயக்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், இரண்டாவது பக்கத்தில், "ஹிந்துக்கள் பல கடவுள்களை வணங்குவதாக எண்ணம் பொதுவாக நிலவுகிறது; ஆனால், ஒரே கடவுள்தான் உண்டு. 33 கோடி தேவர்களும், தேவதைகளும் இருப்ப தாகச் சொன்னாலும் ஒரே பரமாத்மா தான் உண்டு. ஒளியில் ஏழு நிறங்கள் சேர்ந்தாலும் கூட ஒரே வெள்ளை நிறம் தான் வெளிப்படுகிறது. இதுபோன்றுதான் ஹிந்துக்களின் கடவுள் கொள்கை" என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதை டாக்டர் ஜாகிர் நாயக் மேற்கோள் காட்டினார்.

ஒளியைப் பற்றிய ஸ்ரீஸ்ரீரவிசங்கன் மேற்கோள் சிந்தனைக்குப் பொருத்தமானதல்ல என்று சொன்ன டாக்டர் ஜாகிர் நாயக், ஒவ்வொரு நிறமும் வெவ்வேறானவை என்றும், அவை அனைத்தும் வெள்ளை நிறம் உடையதல்ல என்றும், இந்த ஏழு நிறத்தில் ஒன்று இல்லை என்றாலும் வெளிச்சமில்லை என்றும் தெளிவுபடுத்தினார். எனவே, பல கடவுளர்கள் இருந்தாலும் அனைத்தும் ஒன்றைத்தான் சுட்டிக் காட்டுகிறது என்று சொல்லப்படுவதை டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார்.

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் இருக்கின்றன. இந்த பாகங்கள் தனித்தனியாக மனிதனாக முடியாது. அனைத்துப் பாகங்களும் ஒன்றுசேர்ந்தால் தான் மனித உடலாகும். இதேபோல் வெவ்வேறு பொருட்கள் கடவுளாக முடியாது என்று டாக்டர் ஜாகிர் நாயக் வாதிட்டார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், 'ஹிந்து மதத்தில் ஒரு கடவுளுக்கு 108 பெயர்கள் உள்ளன. இது இஸ்லாத்தில் கடவுளுக்கு அளிக்கப்பட்டுள்ள 99 பெயர்களைப் போன்றுள்ளது' என்று எழுதியுள்ளதையும் டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். கடவுளுக்கு 99 பெயர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே கடவுளைத் தான் சுட்டிக் காட்டுகின்றன என்பதை உதாரணத்தோடு அவர் விளக்கினார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், வழிபாட்டு முறைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ள கருத்துக்களையும் டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். ஒரு நபருடைய படம் அந்த நபராக முடியாது, ஒரு நபருடைய விசிட்டிங் கார்டு அந்த நபராக முடியாது. இதேபோல் சிலை தெய்வீகத்தன்மையின் அடையாளமாக விளங்க முடியாது என்பதை 'யஜுர்' வேதத்தை மேற்கோள் காட்டி (யஜுர் வேதம் 33:3:7) டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். யஜுர் வேதத்தின் இந்த வசனம், கடவுளுக்கு இணைதுணை இல்லை என்றும், ஒப்பாகவும் இல்லை என்றும் பறைசாற்றியுள்ளது. எனவே, சிலைக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்று கருதி கடவுளுக்கு நிகராக்குவது யஜுர் வேதத்திற்கு எதிரானது என்று டாக்டர் ஜாகிர் நாயக் வாதிட்டார்.

"
நான் ஒருவரிடம் பணம் கேட்டிருந்தேன். அவர் பணத்துடன் தனது விசிட்டிங் கார்டையும் அனுப்பி வைத்தார். நான் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அவரது விசிட்டிங் கார்டுக்கு நன்றி சொல்வது அறிவுப்பூர்வமானதாக அமையாது. ஹிந்து சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் 'சிலை வழிபாடு தவறு' என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு உயர்நிலை உணர்வு ஏற்படும்போது, கடவுளை வணங்கு வதற்கு சிலை தேவையில்லை என்பதை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த உயர்நிலைக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இஸ்லாம் உயர்த்தியுள்ளது. எனவேதான், இஸ்லாத்தில் சிலைவழிபாடு இல்லை என்று டாக்டர் ஜாகிர் நாயக் குறிப்பிட்டார். (அவர் இந்தக் கருத்தை தெவித்தபோது பலத்த கரவொலி மைதானத்தை அதிர வைத்தது)

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், உருவமற்ற கடவுள் வழிபாட்டை இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், இதன் எடுத்துக்காட்டாகத்தான் முஸ்லிம்கள் கஅபாவை வணங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளதையும் ஜாகிர் நாயக் மறுத்தார். முஸ்லிம்கள் ஒருபோதும் கஅபாவை வணங்கவில்லை, கஅபாவை கடவுள் என்றும் முஸ்லிம்கள் எண்ணுவதில்லை. கஅபா தொழுகைக்கான ஒரு திசைதான் என்று தெளிவுபடுத்தினார்.

முதன்முதலாக உலக வரைபடத்தை அமைத்தவர் அல்இத்ரீஸி என்ற முஸ்லிம்தான். அவர் கஅபாவை மையமாக வைத்து உலக வரைபடத்தை அமைத்த போது தென்துருவத்தை மேலேயும், வடதுருவத்தை கீழேயும் வைத்து அமைத்திருந்தார். இதற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேற்கத்திய வரைபடவியலாளர்கள் உலக வரைபடத்தை வரைந்தபோது அவர்கள் வடபுலத்தை மேலேயும், தென்புலத்தை கீழேயும் வைத்து வரைந்தார்கள். ஆனால் அப்போதும் கூட "கஅபா" தான் மையமாக அமைந்தது என்று ஜாகிர் நாயக் விளக்கமளித்தார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில் 26வது பக்கத்தில், கஅபாவில் உள்ள அனைத்து சிலைகளையும் முஹம்மத் அழித்தார் என்றும், ஆனால் மைய கல்லான கருப்புக்கல்லை அவர் அழிக்கவில்லை என்றும் எழுதியுள்ளார். கருப்புக்கல் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிடும் 'ஹஜ்ருல் அஸ்வத்' கல்லை மக்கள் வணங்கியதாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை. எனவே, இந்தக் கல்லை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று கூறுவதும் தவறானது என்று டாக்டர் ஜாகிர் நாயக் விளக்கினார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர், முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளும் 'ஒளு' செய்யும் முறை வேதாந்த பரம்பரையில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், இதற்கு யூத மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தையும் ஜாகிர் நாயக் மறுத்தார். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஒளு செய்யும் முறை இருந்ததை அவர் மேற்கோள் காட்டினார். பழைய ஏற்பாட்டில் மூஸாவும், ஹாரூணும் தமது உடல்களை சுத்தப்படுத்துவதை பற்றிய வசனங்களையும், புதிய ஏற்பாட்டில் பவுல் அடிகள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது உரையின் இறுதியில், வாழும் கலைக்கு சிறந்த வழிகாட்டும் நூலாக திருக்குர்ஆன் விளங்குகிறது என்று சொல்லிவிட்டு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு மேடையிலேயே வழங்கினார் டாக்டர். ஜாகிர் நாயக். மனிதர்களை புரிந்து கொள்வதற்காக கடவுள், மனித வடிவத்தில் வருவதாக பலரும் நம்பிக்கைக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது சரியான நம்பிக்கை இல்லை. டேப் ரிக்கார்டரை நாம் தயாரிக்க வேண்டுமென்றால், நாம் டேப் ரிக்கார்டராக வேண்டிய அவசியமில்லை. டேப் ரிக்கார்டரை தயாரித்துவிட்டு, அதை எப்படி இயக்க வேண்டும் என்ற வழிகாட்டும் நூலை மட்டும்தான் நாம் தயாரிக்க வேண்டும். இதேபோல் மனிதனைப் படைத்த இறைவன், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் நூலை மட்டும்தான் அனுப்ப வேண்டும், அவன் மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான சிறந்த நூலை கடவுளைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது. அந்த சிறந்த நூலாக - இறைவன் அனுப்பிய நூலாக திருக்குர்ஆன் அமைந்துள்ளது.

தனது உரையை திருக்குர்ஆனின் 6வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 108வது வசனத்தை மேற்கோள் காட்டி நிறைவு செய்தார் டாக்டர் ஜாகிர் நாயக். அந்த வசனம்: "அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏசாதீர்கள்; (அப்படி ஏசினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்".

பெரும் கரகோஷத்துடன் டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை நிறைவு செய்தவுடன், அடுத்து ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உரையாற்ற அழைக்கப்பட்டார்.


கடவுளைப் பற்றிய உயர்ந்த கோட்பாட்டை வேதங்கள் எடுத்துக்காட்டுகின்றன!
 
ஸ்ரீஸ்ரீரவிசங்கர்           

"நீங்கள் எல்லா புனித நூல்களையும் படித்தவர்களாக இருக்கலாம். நீங்கள் வாதிடலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால் வார்த்தைகளுக்கு அப்பால்தான் புரிந்துணர்வு அமைந்துள்ளது" என்ற கபீர்தாஸின் கவிதை ஒன்றுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தனது உரையைத் தொடங்கினார்.

Hinduism and Islam - The Common Thread என்று தான் எழுதிய நூலில் பல தவறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். குஜராத் கலவரம் நடைபெற்றபோது ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்தான், தான் அந்த நூலை எழுதியதாக அவர் குறிப்பிட்டார். தனக்கு முழுமையாக திருக்குர்ஆனை தெரியாது, ஆனால் தனது நோக்கம், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பரஸ்பரம் நேசமும் - அன்பும் இருக்க வேண்டும் என்பது தான் என்று அவர் தெரிவித்தார். நோக்கம் முக்கியமானது என்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வலியுறுத்தினார்.

லாஜிக் (தர்க்கத்தை) சார்ந்து நிற்க வேண்டாம் என்றும், வாதங்கள் நம்மை வெகுதூரத்திற்கு அழைத்து செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹிந்துக்களில் பல்வேறு சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. இதேபோல், முஸ்லிம்களிடையே ஷியா, சுன்னத்தி, காதியானி என்று பல சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. பல்வேறு சிந்தனைப் பிரிவுகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளன. இவை அனைத்துக்கும் பொதுவானவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை என்ற வார்த்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், சகிப்புத்தன்மை என்பது மிக வலிமையற்ற பதமாகும். நாம் ஒருவரையொருவர் சகித்துக் கொள்வதற்கு பதிலாக நேசம் கொள்வதற்கு முன்வர வேண்டும். ஒருவர் மற்றொருவருடைய மதத்தை நேசம் கொள்வது மிகமிக அவசியமானதாகும்.
நான் ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஓவியரைப் பாராட்டினேன். ஆனால் ஓவியத்தைப் பாராட்ட மாட்டேன் என்று கூறுவது சரியான நிலைப்பாடாக இருக்காது. இந்த உலகத்தைப் படைத்த கடவுள் படைப்புகளுக்குள் நுழைந்து விட்டார். சூஃபி ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அன்பின் மூலமே நீங்கள் பரம்பொருள் அடைய முடியும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட நாம் கைகுலுக்கிக் கொள்ள வேண்டும். நேசம்தான் அனைத்தையும் மிகைத்து நிற்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார்.

தான் பாகிஸ்தான் சென்றிருந்த போது தன்னிடம் "நீங்கள் ஏன் பல கடவுளர்களை வணங்குகிறீர்கள்?" என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது என்று தெவித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அதற்கான பதிலையும் தெவித்தார். கோதுமை மாவை பிசைந்த பின் அதிலிருந்து ரொட்டியும், சப்பாத்தியும், பூயும், சமோசாவும் செய்யலாம். அதுபோல்தான் அனைத்தும் கடவுளின் லீலைகளாக அமைந்துள்ளன என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் விளக்கினார்.

தனது உரையில், டாக்டர் ஜாகிர் நாயக்கின் அறிவாற்றலை பாராட்டிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஏராளமான ஹிந்துக்கள் இங்கு ஜாகிர் நாயக் கொண்டு வந்துள்ள ஹிந்து வேதங்களை பார்த்திருக்கவும் மாட்டார்கள், படித்திருக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். இந்த வேதங்கள் ஒரு உயர்ந்த கோட்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. ஒரே கடவுள், ஒன்றே குலம் என்பதை நினைவூட்டுகின்றன.

வார்த்தைகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு நாம் வாதம் செய்ய வேண்டாம். வேற்றுமையுள்ள சூழ்நிலையில் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமுதாயமும் தனக்குள்ளேயே பார்த்துக் கொள்ள வேண்டும். தன் சமுதாயத்திற்கு உள்ளே உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் சமுதாய சீர்திருத்தமாகும். வன்முறை இல்லாத போக்கு போதிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார்.

உபநிஷத்துகளிலிருந்து ஒரு கதையை அவர் தனது உரையில் கூறினார். ஒரு தந்தையிடம் மகன், 'கடவுள் எப்படி இருப்பார்?' என்று கேட்கிறான். தந்தை அந்த மகனிடம், 'இந்தக் கட்டடத்தைப் பார்த்தாயா? இதற்கு முன் அங்கு என்ன இருந்தது?' என்று கேட்கிறார். 'வெற்றிடம் இருந்தது' என்று மகன் பதில் சொல்கிறான். 'கட்டடத்தை இடித்துவிட்டால் மீண்டும் என்ன இருக்கும்?' என்று கேட்கிறார் தந்தை. இதற்கு அந்த மகன், 'மீண்டும் வெற்றிடம் தான் இருக்கும்' என்று பதிலளிக்கிறான்.

இந்த தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேறுபாடுகளின் அடிப்படையில் நாம் விவாதங்களை செய்ய முடியாது. கடவுளுடன் செல்லமாக விளையாட வேண்டும். இந்த உருவ வழிபாடுகளெல்லாம் அதுபோன்ற செயல்கள்தான். அவற்றை நாம் முக்கியமானதாகக் கருத வேண்டாம். இவையெல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு தான். நான் இங்கே வந்தபோது நீங்கள் மலர்க்கொத்துகளை கொடுத்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி என்னை மகிழ்வித்தீர்கள். அதுபோன்றதுதான் உருவ வழிபாடும் என்று வாதிட்டார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.

மற்றவர்களின் செயல்பாடுகளை நாம் குறைசொல்லக்கூடாது. அவர்கள் நம்மிடம் கல்வியை நாடி வரும்போது மட்டுமே நாம் விமர்சனங்களை செய்யலாம். நான் யோகாசனத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கின்றேன். அது மதங்களைக் கடந்து அனைவரும் படிக்க வேண்டிய கலையாகும். மூச்சைக் கட்டுப்படுவதுடன் நாம் உள்ளத்தையும் கட்டுப்படுத்த முடியும். மூச்சும் உள்ளமும் ஒருங்கிணைந்தது. நாங்கள் ஈராக்கிற்கு சென்றபோது, ஏராளமானோர் இரவுத்தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் யோகா படித்துக் கொடுத்ததன் மூலம் அவர்கள் மனக்குறைகள் நீங்கின என்று அவர் தெரிவித்தார்.
இறுதியாக அவர், எந்த ஒரு மதமும் வன்முறையை போதிக்கவில்லை. நமக்குள் உள்ள பொதுவான விஷயங்களை நாம் போற்றுவோம். தர்க்கங்களைத் தவிர்ப்போம். அதிகமாக புன்னகைப்போம். கோபப்படுவதை அரிதாக்கிக் கொள்வோம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு 60 நிமிடங்கள் பேசுவதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் 30 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.

வாழும் கலைக்கு வழிகாட்டி திருக்குர்ஆனே...
- டாக்டர் ஜாகிர் நாயக் பதிலுரை

இதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு பதிலளித்து பேசுவதற்கு 10 நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டது.
திருக்குர்ஆனின் 17வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 81வது வசனமான "சத்தியம் வந்தது, அசத்தியம் மறைந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் என்றும் கூறுங்கள்" என்ற வசனத்துடன் தனது பதிலுரையை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கினார்.

"
இஸ்லாத்தில் வாழ்த்தும் முறையே அமைதியை வலியுறுத்துகிறது. அமைதியைப் பரப்புவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அந்த அடிப்படையில், நாம் அனைவரையும் நேசிக்கிறோம், ஸ்ரீஸ்ரீரவிசங்கரையும் நேசிக்கிறோம். (உடனடியாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறுக்கிட்டு, "என்னை நேசிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறினார்) ஜாகிர் நாயக் "எனக்கு வேறு வழி இருந்தாலும் கூட உங்களை நான் நேசிப்பேன்" என்று குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்து பேசினார்.

நாம் யாரை நேசிச்கின்றோமோ அவர்கள் தவறு செய்தால், அவர்களைத் திருத்துவதுதான் நமது நேசிப்பின் அடையாளமாக இருக்கும். ஒரு குழந்தை தனது தந்தையிடம், 'மாடியிலிருந்து நான் கீழே குதிக்கப்போகிறேன்' என்று சொன்னால், அந்தக் குழந்தையின் மீது உள்ள நேசத்தின் காரணமாக தந்தை சும்மா இருக்கமாட்டார். குழந்தையைத் திருத்துவார். அதுபோல்தான் நமது நேசத்திற்குரியவர்கள் தவறு செய்தால் நாம் அவர்களைத் திருத்தவேண்டும். ஒருவர் தவறு செய்தால் நாம் அவரை ஏச வேண்டாம், ஆனால் அவரை திருத்துவதற்கு முயல வேண்டும்.

தர்க்கம் (லாஜிக்) எதற்கும் வழிவகுக்காது என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார். ஆனால், அவரை தர்க்கரீதியாக செயல்படுபவராகவே பார்க்கிறேன். ஆன்மீகத்திற்கு தர்க்கமும், ஆதாரமும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் திருக்குர்ஆனை படித்திருப்பார். அவர் மீண்டும் அதை படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வேதங்கள் சொல்பவற்றை நாம் அறிந்திருக்கிறோம். வாழும் கலைக்கு மிகத்தேவையான உன்னதமான நூலாக திருக்குர்ஆன் விளங்குகிறது. இந்த திருக்குர்ஆன் அடிப்படையில் அமைந்துள்ள வாழும் கலை அமைப்பில் உலகம் முழுவதும் 130 கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில் சேருமாறு உங்களையும் அழைக்கிறேன்." என்று டாக்டர் ஜாகிர் நாயக் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

"
நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் ஆகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்." (3:19) என்ற திருக்குர்ஆன் வசனத்துடன் தனது உரையை நிறைவு செய்தார் டாக்டர் ஜாகிர் நாயக்.

மற்றவர்களை நமது வழிக்கு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்
- ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மறுப்புரை

டாக்டர் ஜாகிர் நாயக் உரை முடிவடைந்தவுடன் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருக்கு மீண்டும் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது பதிலுரையில், "உங்கள் வழிக்கு மாறவேண்டும் என்று யாரையும் நாம் வலியுறுத்தக் கூடாது. தர்க்கத்தையும் நாம் பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களின் நம்பிக்கைகளைப் பற்றி நாம் எந்தக் கருத்தையும் தெவிக்க மாட்டோம். நம்மை நாமே மாற்றிக் கொள்வோம். நிபந்தனையற்ற தெய்வீகத்தன்மையை நாம் அனுபவ ரீதியாகத்தான் உணர முடியும். இங்கு ரஜ்னீஷைப் பற்றிய மேற்கோள் காட்டப்பட்டதற்கு நான் வருத்தப்படுகிறேன். நமக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கின்றது. ஆனால், அந்த வேறுபாடுகளை மதித்து நமக்கிடையே நேசத்தை வளர்ப்பதுதான் முக்கியமானதாகும். நாம் முழு மனிதகுலத்தின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும். மற்றவர்களை நமது வழிக்கு மாற்றக் கூடிய வழிமுறையை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்று முடித்துக் கொண்டார்.

நேரடி விவாதம் இத்துடன் நிறைவு பெற்றது. விவாதத்தின் தலைப்பு "புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்து மதம் மற்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இந்த அடிப்படையில் வலுவாக கருத்து சொல்லாமல் இருந்தது விறுவிறுப்பான விவாதத்தை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அவர் தனது வாதங்களுக்கு ஆதாரமாக வேதங்களை மேற்கொள்ளாமல் உரையாற்றியதும் ஏமாற்றமாக இருந்தது.

விவாத உரைகளுக்குப்பின் இருவரும் திரண்டிருந்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

திருக்குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை சரியானதே!
- ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அளித்த பதில்களிருந்து...

கேள்வி: திருக்குர்ஆன் சொல்லும் கடவுள் கொள்கை சயானதா? தவறானதா?

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: சரியானதுதான்.

கேள்வி: சமீப காலமாக தற்கொலைத் தாக்குதல்களும், பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெறுகின்றது. இந்த தாக்குதலில் ஈடுபடுவோர் ஒரு நோக்கத்துடன் செயல்பட்டு தங்கள் நோக்கத்தை நியாயப்படுத்துகின்றார்கள். இத்தகையவர்களை நாம் நேசிக்க வேண்டுமா? தர்க்க ரீதியாக பதில் சொல்ல வேண்டாம்.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: நான் தர்க்கத்தை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடவில்லை. ஆனால் குதர்க்கம் செய்யக்கூடாது என்றுதான் குறிப்பிட்டேன். நாம் இத்தகையவர்களை கவனிக்க வேண்டும். சிலரை கண்டிப்பதற்காக நாம் தர்க்கத்தை பயன்படுத்தக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். எங்கள் அமைப்பினர் சிறைகளுக்குச் சென்று, குற்றவாளிகளுடன் பழகி, அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களைத் திருத்தும் பணிகளை செய்து வருகிறார்கள்.

கேள்வி: நான் ஒரு மருத்துவமனை கண்காணிப்பாளர். பெங்களூரில் இந்திய விஞ்ஞான நிறுவனத்தில் தாக்குதல் நடைபெற்ற போது பணியில் இருந்தேன். அந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் யாருமில்லை. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்றும், இஸ்லாம் தான் காரணம் என்றும் உடனே செய்திகள் பரப்பப்படுகின்றது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: நான் அரசு, காவல்துறை, செய்தி ஊடகங்கள் சார்பாக கருத்து சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக இஸ்லாத்தின் மீது பழிபோடப்படுகிறது. ஆனால், எனக்கு இதில் உடன்பாடில்லை. இந்த தவறான சித்தரிப்பை அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதன் முதல்படியாக ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும்.

கேள்வி: அனைவரிடமும் அன்பு மட்டும்தான் செலுத்த வேண்டுமென்றால், மகாபாரதத்தில் கிருஷ்ணன் ஏன் அர்ஜுனனை யுத்தத்திற்கு செல்லப் பணித்தார்?

ஸ்ரீஸ்ரீரவிசங்கர்: சண்டையே போடக் கூடாது என்று நான் சொல்லவில்லை. தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, நீதிக்காக சண்டை போட வேண்டும். காவல்துறையினர் அவர்களது கடமையை ஆற்ற வேண்டும். அர்ஜுனன் தனது கடமையை செய்வதற்கு தவறும்போது கிருஷ்ணன் அவரது கடமையை நினைவூட்டுகிறான். இது வன்முறையைத் தூண்டுவதாக அமையாது.

ஹிந்து வேதங்களில் நபிகள் நாயகம்
டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த பதில்களிலிருந்து...

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஹிந்து வேதங்களில் முன்னறிவிப்பு உள்ளதா?

ஜாகிர் நாயக்: ஸ்ரீஸ்ரீரவிசங்கர் எழுதிய நூலில், 26ம் பக்கத்தில் இதைப்பற்றி தெவித்துள்ளார். 'பாவிஷஹார்' புராணத்தில் "ஒரு மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர்) தனது தோழர்களுடன் வருவார். அவர் மணல் நிறைந்த பகுதியிலிருந்து வந்து தீமைகளை அழிப்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வன வேதத்திலும் 'போற்றப்படுபவர்' (முஹம்மது என்பதன் பொருள்) வருவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ரிக் வேதத்திலும் முன்னறிவிப்பு உண்டு.

(
டாக்டர் ஜாகிர் நாயக் மிக வேகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகளை வசையாக சொல்ல, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறுக்கிட்டு, "அப்படியானால் அனைத்து வேதங்களுக்கும் மதிப்பளியுங்கள். அதை காஃபிர்களுடைய நூல் என்று புறந்தள்ளி விடாதீர்கள்" என்று குறிப்பிட்டார்.)

 
"முஸ்லிமல்லாத மக்களிடையே இந்த விவாதம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது"
- நிகழ்ச்சி அமைப்பாளர் பேட்டி

ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையிலான இந்த விவாத அரங்கத்தை ஏற்பாடு செய்த 'டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட்' அமைப்பின் நிர்வாகி உமர் ஷரீஃபை நாம் சந்தித்தோம். பெங்களூரில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

மக்கள் உரிமை: இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

பதில்: எங்கள் டிஸ்கவர் இஸ்லாம் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம்தான் தொடங்கப்பட்டது. எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு இஸ்லாமிய சொற்பொழிவை டிசம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். பிறகு சொற்பொழிவுக்கு பதிலாக ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனடியாக பெங்களூரில் உள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கரை அணுகி கேட்டபோது, அவரும் இதற்கு உடன்பட்டார். பிறகு, டாக்டர் ஜாகிர் நாயக்கையும் அணுகினோம். இருவரும் சம்மதம் தெவித்த பிறகு நிகழ்ச்சிக்கான தேதியை முடிவு செய்தோம். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக 2,000 பேர் மட்டுமே அமரும் உள்அரங்கிற்குள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் பிறகு அது விரிவடைந்து, பெரிய நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 25,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. நாற்காலிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
 
மக்கள் உரிமை: அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் அல்லாத மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி கேட்டவர்கள் கூட அதிகமானோர் முஸ்லிம்களாகத்தான் இருந்தார்கள். ஏன் இந்த நிலை?

பதில்: இல்லை! முஸ்லிம் அல்லாத மக்கள் கேள்வி கேட்க ஆர்வமாக முன்வரவில்லை. திரண்டிருந்த மக்களில் 30 சதவிகிதத்தினர் முஸ்லிம் அல்லாத மக்களாவர்.

மக்கள் உரிமை: நீங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி கருத்துப் பரிமாற்றமா? அல்லது விவாதமா?

பதில்: நாங்கள் முதலில் கருத்துப்பரிமாற்றத்திற்குத்தான் ஏற்பாடு செய்தோம். அதனடிப்படையில் முதலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும், அதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக்கும் தலா 50 நிமிடங்கள் பேசுவதென்றும், அதன்பின் கேள்வி நேரம் வைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடந்த காலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அமைப்பினர் முதலில் டாக்டர் ஜாகிர் நாயக் பேசவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். இதன்பிறகு முதலில் ஜாகிர் நாயக் 50 நிமிடங்களும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்களும், அதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்களும், இதன்பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 3 நிமிடங்களும் பேசுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. எனவே, கருத்துப் பரிமாற்றம் கடைசியில் விவாதமாகவே முடிவடைந்தது.

மக்கள் உரிமை: இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட முஸ்லிமல்லாத மக்களிடையே என்ன கருத்து நிலவுகிறது?

பதில்: இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட பொதுவான மக்கள் மிக நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியதாக எங்களிடம் கூறினார்கள். காவல்துறை அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் இன்னும் பலர் இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினார்கள். தொடர்ந்து எங்களிடம் தொடர்பு கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி அறிய தங்களது ஆவலை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சிஷ்யர்கள், தங்கள் குரு அளவுக்கதிகமாக விமர்சிக்கப்பட்டதாக வருத்தப்பட்டார்கள்.


- ஜன்னாமைந்தன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.