Sep 1, 2011 in Social | 0 comments
கடந்த இருபத்தி ஓராம் திகதி இரவு கலக்கக்காரர்களினால் படுகொலை செய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் நிலைய அதிகாரி நவரத்ண பண்டார அவர்களின் மரணமும் அதனைத் தொடர்ந்து சில பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்தும் புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை
மனிதாபிமானமற்ற இந்த செயலின் காரணமாக எல்லா மக்களுடனும் சகவாழ்வுடனும் நட்புறவுடனும் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம் பொது மக்களுக்கும் குறிப்பாக புத்தளம்வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். இந்த துரதிருஷ்டவசமான மரணம் புத்தளத்தில் வாழும் சமாதான விரோத கலகக்காரர் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயலாகும். இந்தக் கொலையினை கேள்விப்பட்ட புத்தளம் வாழ் முஸ்லிம்கள் கவலைக்கும் மன வேதனைக்கும் உட்பட்டனர். கொலையாளிகளை சட்டத்திடம் பிடித்து கொடுப்பதற்கு சிவில் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு உதவுமாறு புத்தளம் பெரியபள்ளிவாசலினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை புத்தளம் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொண்டனர். மரணம் சம்பவித்து ஓரிரு தினங்களில் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்தது என்பதையும் இவ்விடம் கூறிவைக்க வேண்டும். இவ்வாறான பின்னணியில் ஒரு சிலரின் பாதகச் செயலின் குற்றத்தை புத்தளம் வாழ் முஸ்லிம்கள் அனைவர் மீதும் சுமத்துவது நியாயமற்றது என்பதையும் பொறுப்புடன் கூறுகின்றோம். இலங்கையின் வரலாற்றில் எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்களின் அரச விசுவாசத்திற்கு வரலாறே சாட்சியாகவுள்ளது. அதுபோல சுதந்திர போராட்டத்தின் போது முஸ்லிம் தலைவர்கள் ஆற்றிய பணி சிறப்பானது. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் சேர்ந்து தேசிய அபிவிருத்திக்காக முஸ்லிம்கள் ஆற்றிய கடமைகளுக்கான சான்றுகள் எங்கும் காணக்கூடியதாக உள்ளன. வரலாற்றின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை கைப்பற்றும் முயற்சியில் முஸ்லிம்கள் ஈடுபட்டதில்லை. குறிப்பாக 30 வருட போரின் போது பயங்கரவாதிகளுடன் கூட்டுசேரவில்லை என்பதுடன், பயங்கரவாதிகளினால் விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அரவணைப்பளிப்பதையும் இங்கு குறிப்பிடவேணடும்.
மேலும் வருடந் தோறும் நடாத்தப்படும் பெருநாள் விளையாட்டுப் போட்டிகளைக் கூட நிறுத்திவிட்டு, எமது பெருநாள் மகிழ்ச்சியை வணக்க வழிபாடு சார்ந்த விடயங்களுடன் மட்டுப்படுத்திக் கொண்டோம்.
இவ்வாறான சகவாழ்வு வரலாற்றுக்கு உரிமை கூறும் புத்தளம்வாழ் முஸ்லிம்கள் பற்றியும், அவர்களின் பக்திக்கும் அன்புக்கும் பாத்திரமான சமய ஸ்தாபனங்கள் பள்ளிவாசல்கள் குறித்தும் ஏனைய இனத்தவரின் மனங்களில் குரோதமும் துவேசமும் தூண்டப்படும் விதத்தில் செய்திகளை பிரசுரிக்கின்றதையிட்டு எமது கடும் விசனத்தையும் எதிர்ப்பையும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றோம். இலங்கைவாழ் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் விதத்திலான அடிப்படைகளற்ற செய்திகளை வெளியிடுவதிலிருந்து விடுபட்டு பொறுப்புடன் செய்திகளை வெளியிடுமாறும் அனைத்து செய்திப் பத்திரிகைகள் மற்றும் இணையத்தள சஞ்சிகை ஆசிரியர்களிடன் இம் மக்கள் ஒன்றுகூடலின் போது, பொறுப்புணர்வுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி புத்தளம் ஒன்லைன்.கொம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.