Thursday, June 23, 2011

மதம், இனம், மொழிகளால் வேறுபட்டிருந்தாலும் மனித உணர்வுகளால் ஒன்றுபட்டுள்ளோம் அமைச்சர் - ரிஷாத்

Thursday, 23 June 2011 15:05Hits: 97
rishad_paduthnவன்னி மாவட்டத்தில் வாழும் மூவின சமூகமும் சகோதர வாஞ்சையுடன் வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியினதும் எங்களதும் எதிர்பார்ப்பாகும்.அதற்காகத்தான் மதம்,இனம்,மொழிகளால் வேறுபட்டிருந்தபோதும் மனித உணர்வுகளால் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


வவுனியா சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் அமைச்சின் கீழ் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் மிளகாய் ஏற்றுமதி கிராம விவசாயிகளுக்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு உரையாற்றுகையில்; இன்று எமது வடமாகாணம் பல அபிவிருத்திகளை கண்டுவருகிறது.இதன் மூலம் மக்கள் பல நன்மைகளை அடைந்துள்ளனர்.கடந்த அசாதாரண சூழலின் போது இப்பிரதேசம் பாதிப்படைந்து காணப்பட்டது.அந்த நிலை தற்போது மாறியுள்ளது.இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.சிங்களவர்,தமிழர்,இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடுகள் அகன்று ஒரேபிரதேச மக்கள் என்றடிப்படையில் தற்போது வாழ்கின்றனர்.

இதன் மூலம் பிரதேசம் அபிவிருத்தி அடைகின்றது.சுயதொழில் முயற்சியின் பால் ஈர்க்கப்படுகின்றனர்.அதன் பொருட்டு எமது அமைச்சின் கீழ் புதிய தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான உதவிகளை வழங்கக் கூடியதாக உள்ளது.இது எமது நாட்டின் உணவு நுகர்வுத் தேவைக்கு பங்களிப்புச் செய்யும் காரணியாகும்.

மிளகாய் ஏற்றுமதி கிராமங்களை போன்று ஏனைய பயிர்ச் செய்கைகளையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவுள்ளோம்.இதன் மூலம் கிராமங்களுக்கான முதலீட்டாளர்களை அழைத்துவரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய ஆணையாளர் எம்.மொஹிதீன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி தினக்குரல்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.