அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஜலதோசத்தால் தொண்டை கரகரத்தது. ரம்பம் வைத்து அறுப்பதுபோல ஒரு உபாதை!அண்ண்ன்மாரின் அலட்சியப் பார்வையும், அண்ணிகளின் நையாண்டிப் பேச்சுக்களும் அதைவிடக் கொடுமையாக நெஞ்சுக்குள் இறங்கியிருந்தது!கொஞ்சம் கனைத்துக் கொண்டான்! வெந்நீர் குடித்தால் தேவலாம்போல் இருந்தது.இன்னும் அடுப்பங்காரை விளக்கு எரிந்துகொண்டு தான் இருந்தது. பாத்திரம் பண்டங்களை அம்மா “ஒடுப்பறித்”துக் கொண்டிருக்க வேண்டும். அம்மாவிடம் கேட்டால் கொஞ்சம் வெந்நீர் போட்டுத் தரத்தான் செய்வாள். அவளுக்குச் சிரமம் கொடுக்க அவனுக்கு இஷ்டம் இல்லை.
பாவம் அம்மா! இந்த தள்ளாவயதிலும் அவளுக்கு ஓய்வில்லை. தினமும் இரவு பத்துமணிக்கும் மேலாகிவிடுகிறது படுக்கைக்குச் செல்ல!
‘அவளுக்கு என்ன? கொடுத்து வைத்த மகராசி! நாலு பையங்களைப் பெத்தவ. நாலு மருமகள்களும் அவளை ராசாத்தியாட்டாம் வச்சிகிறாளுக!’ அம்மாவின் வயதொத்த பெண்களின் பொறாமைப் பேச்சுக்கள்!
அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அம்மா தன் மருமக்கமாரைப் பற்றி ‘ஆஹா ஓஹோ’ என்று அவர்களிடம் புகழ்வதால் ஏற்பட்ட பிரதிபலிப்புகள்.
உள் நிலவரம் அவனுக்கல்லவா தெரியும்! இத்தனை மருமக்கள் இருந்து அவளுக்கு என்ன பிரயோஜனம்?
அவனுக்கு நினைவு தெரிய, அவளுக்கு எங்கே ஓய்விருக்கிறது? காலையில் சுப்ஹு பாங்கு சொல்ல எழுந்திருப்பவள் எறும்பைப் போல ஊர்ந்து கொண்டுதான் இருக்கிறாள் – இரவு வெகு நேரம் வரை!
‘ம… ம்..!’ ஆழமான பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
கடைக்குட்டியான அவனுக்கு அம்மா மீது அந்தக் குழந்தைப் பருவத்திலேயே கரிசனம்!
அத்தா ஒரு ‘அவசரக் குடுக்கை!’
பழைய காலத்து விறகடுப்பைப் பற்றவைத்து, பால் காய்ச்சி, காப்பிப்பொடி, சர்க்கரை கலந்து, வடிகட்டி, ஆற்றி – இப்படி எவ்வளவு வேலையிருக்கிறது காப்பி போட! இந்த நியாயம் எல்லாம் அவருக்குப் புரியாது!
‘காபி’ என்றவுடன் ஆவி பறக்கும் காப்பியை அம்மா நீட்டியாக வேண்டும்! கொஞ்சம் சுணங்கினால் போதும்! ‘அதைத் தூக்கி இதில் வீசி, கையைக் காலைச் சுவற்றில் மோதி களோபரப்படுத்திவிடும் பேர்வழி!
பார்ப்பதற்கு சிறுபிள்ளைத்தனமாகத் தெரியும் – அவர் மீது அவனுக்கு ஆத்திரம்கூடவரும். அதற்காக அம்மா மீது அவருக்கு அன்பில்லை என்று சொல்ல முடியாது! அவர்களைப் போன்ற அந்நியோன்யமான தம்பதிகளை அவன் பார்த்ததே இல்லை என்பது தான் அவனது கணிப்பு. மூன்று வருஷத்துக்கு மன்பு அத்தா மெளத்தான போது, திடீரென அம்மா அத்தாவை நினைத்து அழுது அரற்றுவது பல மாதங்கள் நீடித்தது உண்மையல்லவா? ‘ஒரு நாளைக்கி ரெண்டு தடவையாவது அவங்ககிட்ட திடடு வாங்கினாத்தாண்டா எனக்கு தூக்கம் வருது” என்று அம்மா அடிக்கடி சொல்வது அவனுக்குத் தெரியும். ஏதோ அத்தாவுக்கு அப்படி ஒரு பலவீனம்!
மூத்த அண்ணனுக்குத் திருமணம் நடந்தபோது, அவனுக்கு பதினைந்து வயது. திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த மகிழ்ச்சியைவிட, வீட்டுக்கு அண்ணி வந்த பிறகு அம்மாவின் வேலைப்பளு குறையுமே என்பதில்தான் அவனுக்கு உண்மையான மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டும்.
ஆனால் அது கனவாகிப்போன சமாச்சாரம்!
திருமணம் முடிந்த ஒருவாரம்கூட முழுமையாகத் தங்கவில்லை அண்ணி! பணக்காரப்பெண், திடீர் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் கார் வந்து வாசலில் நிற்கும். உடனே அம்மா வீட்டுக்குக் கிளம்பி விடுவாள். அண்ணனும் ரொம்ப பவ்யமாக அவளோடு கிளம்பிப்போய் விடுவான். அம்மாவும் அத்தாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்பார்கள்! என்ன செய்வது? பணக்கார மருமகளாயிற்றே?
கல்யாணமான புதிதில் அப்படி இருக்கிறாள். காலம் செல்லச் செல்லச் சரியாகிவிடும் என்று அம்மாவும் அத்தாவும் பேசிக்கொண்டார்கள். காலம் சென்றது. ஆனால் அண்ணி தன் பழ்க்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. மாமியாரின் வீடு அவளுக்க ஒரு ‘பிக்னிக் ஸ்பாட்’ தான்! நினைத்தபோது வருவாள். நினைத்த நேரத்தில் கிளம்பிவிடுவாள். தேவையென்றால், அண்ணன் தான் மாமனார் வீட்டுக்குச் செல்லவேண்டும்!
அவனுக்கு அண்ணன் மேல்தான் கோபம்! அவனுக்கு அம்மா மீது இரக்கமே இல்லையா?
தங்களின் அடுத்த மகனுக்கு பெண்தேடும்போது அம்மாவும் அத்தாவும் மிகக் கவனமாக இருந்தார்கள். ‘பணக்காரப் பெண்ணாகப் பார்த்ததால்தானே மூத்தவள் வீட்டுக்கடங்கி இருக்காமல் ஓடிஓடிப் போய் விடுகிறாள். ஏழைப்பெண்ணாக இருந்தால் இந்த ‘அகங்காரம் இருக்காதல்லவா?’ என்பது அவர்கள் கணிப்பு!
திருமணமான சில மாதங்கள் அவர்களது கணிப்பு உண்மையாகவே இருந்தது! ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்த மச்சி, மூத்தவளோடு ஒப்பிடும் போது அபூர்வ பிறவியாகவே தோன்றினாள்!
புதுமணக்கோலம் மாறுவதற்கு முன்பே அடுப்பங்கரைக்குள் நுழைந்து எல்லா வேலைகளையும் தானே அள்ளிபபோட்டுக்கொண்டு அவள் பார்த்தபோது எல்லாருமே அகமகிழ்ந்து போனார்கள். அத்தாவின் அதட்டலுக்குப் பதில் சொல்வது மட்டுமே அம்மாவின் வேலையாகிப்போனது. சில சமயங்களில் அனுதாபம் மேலிட அம்மாவே வலியச்சென்று, வேலையைப் பகிர்ந்து கெள்ளவேண்டிய அளவுக்கு ‘மகராசி’ வலையவந்தாள்!
அந்த சந்தோஷம் ஆறு மாதம்கூட நீடிக்கவில்லை. மூத்தவளாவது அவ்வப்போது எட்டிப்பார்த்துக் கொள்வாள்! ஒன்றுமில்லாத பிரச்சினையொன்றைப் பெரிதாக்கி அண்ணனையும் அபகரிததுக்கொண்டு தன் அம்மா வீட்டுக்குச் சென்றவள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டாள்! ஏதோ ஒரு நல்லநாள் பெரியநாள் வரப்போவதில்லை – வந்து எட்டிப்பார்ப்பதில்லை என்று ஆகிப்போனது!
“ஆம்புளப்புள்ள இல்லாத குடும்பம் பாரு! நான்தேன் எம்மகனை புள்ளக்கிப்புள்ளையா போயி இருந்துக்கன்னு அனுப்பியிருக்கேன்” என்று அசடுவழியும் தன் முகத்தை அழுத்தித்துடைத்துக் கொண்டு அம்மா தன்தோழிகளிடம் சொல்லிக்கொள்வாள்!
மூன்றாவது மருகமகள் வீட்டுக்கு வந்தாள்! இது ஒரு வித்தியாசமான ரகம்!
திருமணமாகி ‘மறுவீடு’ சம்பிரதாயத்துக்காக அம்மா வீட்டுக்குச் சென்று வந்ததோடு சரி! அவர்கள் அம்மா வீட்டில் நடக்கும் ‘நல்லது கெட்டது’க்குக் கூட நாலு தடவை வந்து சொன்னால்தான் – அலுத்துச் சலித்துச் சென்று வருவாள்!
சாப்பாட்டு நேரந்தவிற மற்ற நேரத்தில் அறைக்கதவு திறந்திருப்பதை யாரும்பார்கக முடியாது! ‘மருமகளுக்குப் பணி செய்வதே மாமியாரின் கடமை’ என்ற புதிய தத்துவத்தை அமல்படுத்தியவள் அவள். காலையில் கதவைத்தட்டி ‘பெட் காபி’ கொடுப்பதிலிருந்து, இரவு படுக்கைக்குச்செல்லும் போது பால் கொடுத்து அனுப்பும்வரை அம்மாதான் செய்யவேண்டும்! சரியான வம்பி! பேச்சுக்குப் பேச்சு எதிர்ப்பேச்சு பேசும் அந்தப்பேண்ணின் வாய்க்குப் பயந்து அம்மா மெளனமாகிப் போனாள்!
இந்த அவலத்தைப் பார்த்து அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது! அப்போதுதான் அவன் கல்லூரிக்குள் நுழைந்திருந்த சமயம். கொஞ்சம் தைரியமும் வந்திருந்தது. அண்ணன்மாரிடம் அம்மாவுக்காக உரிமைக்குரல் எழுப்பினான்!
ஒருவன் சரித்து மழுப்பினான்: ஒருவன் மெளனமாக இருந்துவிட்டான். ஒருவன் கோபமாகத் திரும்பிக் கத்தினான். ‘உன் வேலையைப் பாரு’ என்று!
அண்ணனமார் எப்படி இவ்வளவு கோழையாகிப் போனார்கள் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘சீ! இப்படியா பெண்டாட்டிதாசர்களாகிப் போவது?’ தன் சகோதரர்கள் பாலிருந்த நம்பிக்கை தகர்ந்துபோனது அவனுக்கு!
அப்போதுதான் அவன் அந்த உறுதியை எடுத்துக் கொண்டான்!
தனக்கென்று வருபவள் எப்படியெல்லாம் தன் தாய்க்குப் பணி செய்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவாள்’ என்று திட்டங்கள் போட்டுக் கொண்டான். அதைப்பார்த்து மச்சிகள் வெட்கித்தலைகுணிய வேண்டும்! அண்ணன்கள் ஆச்சரியப்பட வேண்டும்!
தொண்டைக் ‘கரகப்பு’ அதிகரித்துக் கொண்டே போனது. கனைப்பினால் எல்லாம் சமாளிக்க முடியாது போல் தோன்றியது! கொஞ்சம் வெந்நீரு் குடித்தால்தான் உபாதை குறையும் போலிருந்தது!
அறையைவிட்டு வெளியே வருவதற்கும், அம்மா அடுப்பங்கரையைப் பூட்டிவிட்டுத் திரும்புவதற்கும் சரியாக இருந்தது. தயங்கியபடியே நின்றான்!
“என்ன வாப்பா?”
‘தொண்டை கர கரன்று இருக்குதும்மா! வெந்நீர் வேணும்’
‘வெந்நீர் மட்டும் பத்தாது வாப்பா! ஒனக்குத்னேன்’ மஞ்சள் பால்’ போட்டு எடுத்துக்கிட்டிருக்கேன். வறட்டுப் பொகச்சலுக்கு அதுதேன் கைகண்ட மருந்து! குடிச்சுட்டுத் தூங்கு’
அவன் கண்கள் பனிந்தன. உள்ளுக்குள் உருகிப் போனான்.
அந்த மருந்துப் பால் உள்ளே இறங்கியதும் கொஞ்சம் இதமாக இருந்தது.
‘வாப்பா! நான் சொல்றதக் கேளு! பிடிவாதம் புடிக்காதே!”
‘நீங்க சும்மா இருங்கம்மா! அவளுக்குச் சரியான பாடம் படிச்சுக் குடுக்கனும்’
அவள் விரக்தியாகச் சிரித்தாள்!
‘வாப்பா, உன் நெலமை எனக்குப்புரியுது! அண்ணம்பெண்டாட்டிகளலெல்லாம் அம்மாவுக்கு உதவியா இல்லையேன்னு நீ கோபப்பட்டே! இப்ப ஒம் பெண்ணாட்டியையே ஒன்னாலே கட்டுப்படுத்த முடியலையேன்று கலங்கிப் போயிருக்கே – அது சரிதேன்! இருந்தாலும் பெத்ததாயி நான் சொல்றதக்கேளு!’
‘இது நம்ம மாமியாரு! இவளுக்கு உதவி ஒத்தாசை செய்யிறது நம்ம கடமைன்னு மருமவக்காரிக்கு தன்னாலே தெரியனும்!
நாலு மருமக்க இருந்தும் எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லையேண்ட வருத்தம் இருக்கத்தேன் செய்யுது!
என்ன செய்யிறது? அது நான் வங்கியாந்த வரம்! அதக்காக வாழவேண்டிய வயசுல நீ இப்படி புடிவாதம் புடிச்சுக்கிட்டு அவளைக் கொடுமைப்படுத்துறது இனியும் நான் பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டேன்” அவள் குரலில் கண்டிப்புத் தெரிந்தது.
அவன் மெளனமாக இருந்தான்! அவளே தொடர்ந்தாள் “கோவிச்சுக்கிட்டுப்போன ஒம் பொண்டாட்டி நாளைக்கு இங்க வரப்போறா! நீ ஒண்ணும் சொல்லப் புடாது!’
‘என்னம்மா நீங்க?’
இந்த பாரு வாப்பா! ஒங்கண்ணமாரு மூனுபேரு மேலயும் எனக்கு துளிகோபங்கூட இல்லை. ஒம்மேலதான் கோபங் கோபமா வருது!’
அவன் வியப்போடு நிமிர்ந்தான்!
அவனவன், அவனவன் பொண்டாட்டியோட மனசைப் புரிஞ்சுகிட்டு ஒத்துப்பொறானுக! அவங்க சந்தோசத்தைப் பார்த்து நானும் நிம்மதியா இருக்கேன்! ஆனா, நீயி? கல்யாணம் முடிச்ச நாள்ல இருந்து சதா அவளை நச்சரிச்சுக்கொடடுறே! நானும் சாடைமாடையா சொல்லிப் பார்த்துட்டேன்! நீ கேக்குற மாதிரி இல்லை! இனியும் அதுக்கு நான் உடமாட்டேன்!
அவனால் பேச முடியவில்லை. அம்மாவைப் பார்த்துக் கொண்டே நின்றாள்!
‘நீங்க நாலுபேரும் சந்தோஷமா இருக்கனும். எனக்கு அதுதேன் வேணும்! அவளுக வேலை பார்த்து தரனுங்கிறது இல்லை. அவளுகளுக்கு நல்ல மருமகள்களா இருக்கனும்னு ஆசை இல்லாம இருக்கலாாம். ஆனா எனக்கு ஒரு நல்ல தாயா’ இருக்கணும்னு ஆசையா இருக்கு வாப்பா!
அவன் பிரமித்துப்போய் நின்றான்! இந்த ஒல்லியான அம்மாவுக்குள் இவ்வளவு பெரிய மனசா?.
நன்றி நமக்குள் இஸ்லாம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.