Sunday, September 10, 2017

சிவில் சமூகம் என்பது வறியவர்களின் சக்கரவர்த்திகளல்ல! இ. தம்பையா




 ( இக் கட்டுரை சிவில் சமூகம் என்பதன் பொருளையும் வியாக்கியானங்களையும் நடைமுறைப் பயன்பாட்டையும் பற்றிய விரிவான ஆய்வாகும்.)
அடக்குமுறை நிறைந்த கலவரங்களும் யுத்தமும் இயற்கை அனர்த்தங்களும் போன்ற சூழ்நிலைகளில் அரசாங்கம் என்பது மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கும்.
அரசிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அடக்குமுறைகளுக்கு உட்பட்டு எதிர்ப்பு நிலையில் இருக்கின்றபோது சிவில் சமூகத்திற்குப் பாரிய பொறுப்பு இருக்கிறது. சிவில் சமூகம் என்பதில் அரசியற் சார்பில்லாத என்று கூறுவதைவிட அரசியல் கட்சிகளின் சார்பில்லாத மக்களின் உரிமைகளில் அக்கறையுள்ள பொதுநலன் சார்ந்த புத்திஜீவிகள் புலமை சார்ந்தவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மதத்தலைவர்கள் போன்றோர் உள்ளடங்குவர். இவர்களினால் அரசியற் கட்சி சாராது நின்று மக்கள் சார்பாக அமைப்புக்களைக் கட்டியெழுப்பி நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயல்பட முடியும். இவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலாக நின்று செயற்படுவதேயன்றி மக்களின் சார்பாக நின்று சுதந்திரமாக செயற்பட்டு அமைதியற்ற சூழலை களைவதற்கு பெரும் பங்காற்றக் கூடியவாறு சிவில் சமூகம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல. சமூக நீதியை நிலைநாட்டச் செயற்படுவதாகும்.
சிவில் சமூக அர்த்தம்
விரிந்த பார்வையில் சிவில் சமூகம் என்பது சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்புக்களையும் யுத்த எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு, பெண் விடுதலை, இன உரிமை போன்றவற்றுக்கான அமைப்புக்களையும் தேசிய நீரோட்டத்திற்குள்ளடங்காத மாற்று அமைப்புக்களையும் சிவில் சமூகம் என்று கூறலாம். இந்த அமைப்புகள் பலமாக இருக்கின்ற போது எந்த சூழ்நிலையிலும் மக்களின் மனித உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதனைக் கம்யூனிஸ்ட்டுகள் கட்சிக்கு வெளியிலான பரந்த மக்கள் தளத்தைக் கொண்ட வெகுஜன அமைப்புகள் என்று கூறுவர். இவை கட்சியின் விரிவாக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இன்றைய சூழ்நிலையில் அதிகமான புத்திஜீவிகள் அரச சார்பற்ற நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டுள்ளதால் அரச சார்பற்ற நிறுவனங்களையே சிவில் சமூகம் என்று குறுகியவாறு அர்த்தம் கற்பிக்கும் ஆபத்து இருப்பதை அவதானிக்க முடியும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தோற்றத்தில் அரசின் அடக்குமுறைகளுக்கும், அதிகாரத்துவத்திற்கும் எதிராகச் செயற்படுவதாகத் தெரிந்தாலும் உள்ளார்ந்த அர்த்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கும், அடக்குமுறை அரசுகளுக்கும் எதிராக செயற்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வதன் மூலம் அவை சிவில் சமூகமா என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அடிப்படையில் சிவில் சமூகம் என்பது அரசாங்கத்திற்கும் அதனுடன் முரண்படுகின்ற அரசியல் அமைப்புகளுக்கிடையில் தரகராகவன்றி மக்களின் நலன் சார்ந்து மக்களின் பக்கம் நின்று செய்படுவதாகும். அதன் மூலம் பல சந்தர்ப்பங்களில் அரசுடன் முரண்படுகின்ற அடக்குமுறை, யுத்த, கலவர இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில் இயங்கிக் கொண்டு அரசாங்க நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அரச சார்பற்ற நிறுவனம் சிவில் சமூகமாகாது.
அரசசார்பற்ற நிறுவனம்
வெகுஜன அமைப்புக்களை மக்களின் பலத்தின் மீது தங்கியிராமல் அந்நிய நாட்டு நிதியிலும், அந் நிதியை வழங்குபவர்களின் கொள்கைக்கும் கட்டுப்பாட்டிற்கும் ஏற்ப இயங்குமாறு செய்வதும், வெகுஜனப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவது அரச சார்பற்ற நிறுவன வேலை ஆகும். இருக்கின்ற அமைப்பிற்குள் திட்டங்களை தீர்வுகளை சற்றுத் திருத்துவது போல் பேண்தகு முறைகளைச் செயலூக்கமுள்ள முறைகள், சாத்தியமான வழிமுறைகள் என்று கூறி நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வகையில் உதவுவதையே அந் நிறுவனங்கள் செய்கின்றன. அதாவது அரசாங்கம் முன்வைக்கும் திட்டங்களை மக்கள் எதிர்க்கின்ற போது மக்களுடன் சேர்ந்து செயற்படுவதாகப் பாசாங்கு செய்து அத் திட்டங்களை நிறுத்துவதற்கோ மாற்றுவதற்கோ முன்வருவதில்லை. பதிலாகச் சாத்தியமான பேண்தகு மாற்றங்களைச் செய்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இருந்து கொண்டு மக்களின் சார்பாக செயற்படுவது போன்று காட்டிக் கொண்டு சிற்சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்துவதற்காக உண்மையில் அரசாங்கத்திற்கு உதவுகின்ற அனுசரணையை மக்களிடமிருந்து பெற்றுக் கொடுப்பதனையே அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்கின்றன. மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது போன்றும் போராட்டங்களை சமரசத்திற்கு கொண்டு செல்லும் கருவியாகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. அவைகள் மக்களுக்கன்றி அவற்றுக்கு நிதியை வழங்குபவர்களுக்கே பொறுப்புக்கூறக் கடமைப்பட்டனவாகும்.
வெகுஜன அமைப்புகள்
இலங்கையில் சூரியமலர் இயக்கம், வடக்கில் சிறுபான்மையோர் மகாசபை, தீண்டாமைக்கு எதிராக வெகுஜன இயக்கம், மனித உரிமைகளுக்கான வெகுஜன இயக்கம், மலையகத்தில் மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம், கொழும்பில் சேது சமுத்திரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் போன்றவற்றை அரச சார்பற்ற, நிறுவன ஆதிக்கமில்லாத வெகுஜன இயக்கங்களுக்குச் சில உதாரணங்களாகக் கொள்ளலாம். இவ்வியக்கங்கள் இடைநடுவே விட்டுக் கொடுப்போ சமரசமோ இன்றிச் செயற்பட்ட இயக்கங்களாகும்.
முதலாம் உலக யுத்தத்தின் போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டாம் உலக யுத்தத்தின்போது பாசிசத்திற்கும் நாசிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகவும் சிவில் சமூகம் பாரிய பங்களிப்பை செய்துள்ளது. மார்டின் லூதர் கிங் போன்றவர்களின் சிவில் உரிமைப் போராட்டங்களும் குறிப்பிடத்தக்கன.
இலங்கையில் 1980களிலும் 1990களிலும் யுத்தத்திற்கு எதிரான இயக்கங்களில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு இருந்ததெனலாம். யுத்த எதிர்ப்பு இயக்கத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் கையேற்றப் பிறகு, யுத்த எதிர்ப்பு என்பது அந் நிறுவனங்களில் செயல் திட்ட அறிக்கைக்கு வரையறுக்கப் பட்டதுடன் பெரும்பான்மை (கட்டப்படாமல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்ள முயற்சித்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை) யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிவில் அமைப்பொன்று, மக்கள் மத்தியில் இருந்த யுத்த எதிர்ப்பு குறைவடைந்த பின்னர் இல்லாமல் போய்விட்டது.
இவ்வாறு அரசசார்பற்ற நிறுவனங்கள் சிவில் சமூகத்தின் இடத்தை நிரப்புவதாக செயற்பட்டு மக்கள் போராட்ட இயக்கங்கள் பல இருந்த இடமே தெரியாது போயுள்ளன.
கம்யூனிஸ சோசலிச வேலைத்திட்டங்களை முறியடிக்கும் நோக்கில் ஏகாதிபத்தியத்தினால் ஏற்படுத்தப்பட்டதே அரச சார்பற்ற அல்லது தொண்டு நிறுவனங்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
காலனியாதிக்க காலத்திற்கு முன்பிருந்தே சமூக அபிவிருத்தி சமூக வளர்ச்சித் திட்டங்கள் போன்ற பெயர்களில் பல தன்னார்வ அமைப்புகள் இயங்கின. திருச்சபைகள், சமூகநல கழகங்கள் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ள முடியும். உலகத் திருச்சபை ஏகாதிபத்திய எதிர்ப்பை கொண்டியங்க பல இடதுசாரி குழுக்களும் நிதியுதவி செய்தன. அவை சரியான திசை வழியில் இயங்காமல் தடம் புரண்டன.
நவகாலனித்துவம்
பின்னர் நவகாலனித்துவ, உலகமயமாதல், சூழ்நிலையில் .நாவும் அதன் முகவரமைப்புகளும் முற்றாகவே அரச சார்பற்ற நிறுவனங்களாகவே இயங்குகின்றன. 1980களில் உலகைச்சிவப்பு அபாயத்தில்இருந்து காப்பாற்றும் செயல் திட்டங்களாக முன்வைக்கப்பட்ட யோசனைகளில் மனித நேய நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்களை உருவாக்கி வளர்த்தல் என்பன முக்கிய இடம்பெற்றிருந்தன. இரண்டாம் உலக மகா யுத்தத்தை அடுத்து அமெரிக்கா ஃபோர்ட் அறக்கட்டளை, வேல்ட் விசன், கெயர் போன்ற தன்னார்வ அல்லது தொண்டு நிறுவனங்களை உருவாக்கியது 1950களிலும் 1960களிலும் நலன்புரி அரசுகள் என்ற பேரில் சோசலிச நாடுகளில் செய்யப்பட்ட சமூக நலன்புரித் திட்டங்களை முதலாளித்துவ அரசுகளும் முன்னெடுத்தன. ஏகாதிபத்தியங்கள் அவற்றில் சுரண்டலை விரிவுபடுத்தவும் மூடி மறைக்கவும் சோசலிசப் பாதையை மக்கள் நாடாது தடுக்கவும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை அரச சார்பற்ற அல்லது தொண்டு நிறுவனங்களினூடாக முன்னெடுத்தன. அவற்றுக்கு பெருந்தொகைப் பணத்தை இனாமாக கொடுக்கலாயின. சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம், முன்னேற்றத்துக்கான கூட்டணி, கனடா சர்வதேச வளர்ச்சி நிறுவனம், பொருளாதார கூட்டுறவு ஜெர்மனிய அமைச்சு, பிரிட்டன் தொலைதூர வளர்ச்சி அமைச்சு. ஐரோப்பிய சமூக வளர்ச்சிக்கான கமிட்டி ஆகியவற்றை உதாரணமாக கூறமுடியும். இவை நேரடியாக சில நாடுகளில் இயங்குகின்றன. சில நாடுகளில் வேறு பெயர்களில் அரசசாரா நிறுவனங்களை அமைத்து அவற்றுக்கு நிதியுதவி செய்து வருகின்றன.
1960ஆம் ஆண்டு அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் சர்வதேச தன்னார்வ அல்லது தொண்டு நிறுவனங்களின் கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் தலைமையகம் ஜெனிவாவில் இருக்கிறது. அத்துடன் ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும், தனிநபர்களும் சர்வதேச வலைப்பின்னல் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளன.
நவகாலனித்துவம் பல வழிகளிற் செயற்படுகிறது. அதில் அரச சார்பற்ற நிறுவனங்களை அமைத்து அவற்றுக்கு நிதியுதவி வழங்குவது ஒரு வழியாகும். உலகமயமாதல் சூழ்நிலையில் உலக மூலதனம் பன்னாட்டு கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்ததுடன் சுரண்டலை தீவிரப்படுத்தியதுடன் பன்னாட்டு கம்பெனிகள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்தும் வருகின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்கள் கல்வி, சமூக அபிவிருத்தி, மனித உரிமைகள், ஜனநாயக சிவில் உரிமைகள், சிறுவர்கள் முதியோர் சூழல் பாதுகாப்பு போன்ற பல துறைகளுக்குமானதாக இயங்குகின்றன. தொழிற் சங்கங்களின் வேலைத் திட்டங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அல்லது நிதியின் செல்வாக்கு ஊடுருவி உள்ளது. பல அரசியல் கட்சிகளின் விரிவாக்கங்களாக அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குவதுடன், நிதிவழங்கும் நிறுவனங்களாகவும் இருக்கின்றன.
பெயர்களைக் கவனியுங்கள்
ஜேர்மனியின் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொழிற்சங்க, அரசியற் கட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்துவனவாக இருக்கின்றன. ஃபிரட்ரிக் ஈபேர்ட் மன்றம் என்பது உலக நாடுகளிலுள்ள தொழிற் சங்கங்களுக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கி வருகிறது. ஈபேர்ட் என்பவர் முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் ஜேர்மனின் தலைவராக இருந்து அடக்குமுறை ஆட்சி நடத்தியவராவார். அவரின் ஆட்சிக்காலத்திலேயே ரோசா லக்சம்பேர்க், கால் லீப்னெஹ்ட் உட்பட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பெயரிலான நிதியமே உலக நாடுகளில் தொழிற்சங்க உரிமைகளுக்காக நிதியுதவி வழங்குமென்பது கேலிக்கு உரியதாகும். அதேபோன்று GTZ என்ற ஜேர்மனிய அமைப்பினூடாக கல்விக்காக நிதியுதவி செய்யப்படுகின்றது. ஹிட்லரினுடைய தளபதிகள் சிலரின் பெயர்களிலும் (அவர்கள் செய்த பாவங்களை கழுவுவதற்காகவோ) பல தன்னார்வ நம்பிக்கை நிதியங்கள் இயங்குகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை நாடுகளின் கூட்டமைப்பாக அமைக்கப்பட்டபோதும், நாளடைவில் அது ஏகாதிபத்தியங்களின் சொத்துடைமையாகி அதுவும் அதன் கீழ் இயங்கும் முகவர் அமைப்புகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களாகவே இயங்குகின்றன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புகள் வளர்முக நாடுகளை ஆட்டிப்படைக்கின்ற சர்வதேச நிறுவனங்களாக இருக்கின்றன.
இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்துத் தொடக்கப்பட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனிதாபிமான அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களாகவே இயங்குகின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்களை .நா.சபையுடன் இணைந்துள்ளவை, நாட்டு எல்லைகள் கடந்து செயற்படும் சர்வதேச நிறுவனங்கள், உள்நாட்டு அரச சார்பற்ற நம்பிக்கை நிதியங்கள், தொண்டு நிறுவனங்கள் என வகைப்படுத்தலாம். இவை அரச சார்பற்ற அல்லது தொண்டு அல்லது நம்பிக்கை நிதியங்கள் அல்லது தன்னார்வ குழுக்கள் என்று அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் அவை நிவாரண நிறுவனங்களாக இயங்குகின்றன எனலாம். உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களினது அல்லது சர்வதேச தனிநபர்களின் நிதியையும் வேலைத்திட்டங்களையும் கொண்டே இயங்குகின்றன.
அவை தத்துவார்த்த ரீதியாக இருக்கின்ற சமூக அமைப்பை ஒப்பீட்டு ரீதியில் இன்னொரு அமைப்பை அல்லது எதிலும் மாற்று தேவை என்று கூறினாலும் இருக்கின்ற சமூக அமைப்பிலே சிறப்பான வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவனவாக செயற்படுகின்றன.
அரசிற்கு வெளியில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நிவாரண கேந்திரங்களாக நலன்புரி நிறுவனங்களாக மாற்றுக் கொள்கைத் திட்டங்களை பிரேரித்து, பிரசாரம் செய்பவைகளாக இயங்குகின்றன. வர்க்க ரீதியாக அடக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராடவோ சமூகத்தை மாற்றியமைக்கவோ தேவை இல்லை என்ற அடிப்படையிலேயே அவற்றின் செயற்பாடுகள் இருப்பதை அவதானிக்க முடியும்.
நிவாரண மையங்கள்
இன்று வளர்முக நாடுகளில் அரசாங்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் இல்லாது செயற்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனலாம். இயற்கை அனர்த்தம், போர்க் காலம், போருக்கு பிந்தியகாலத்தில் கண்ணிவெடி அகற்றுவது, மீள் குடியேற்றம் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் தேவையாக இருக்கின்றன. சிலவேளை அரசாங்கம் நிதிவளத்தைக் கொண்டிருந்த போதும் அரச சார்பற்ற நிறுவனங்களினூடாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதற்கு காரணம் அரசிடம் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருக்கின்ற கட்டமைப்பு இல்லாதிருக்கலாம். அல்லது நிதியை கொடுக்கின்ற உலக நாடுகள் அல்லது நிறுவனங்கள் அந் நிதிக்கான நடவடிக்கைகளில் அரச சார்பற்ற நிறுவனத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென நிபந்தனை விதிக்கலாம்.
பல அரசாங்கங்களின் கொள்கைகள், செயற்திட்டங்களையும் அரச சார்பற்ற நிறுவனங்களே வரைந்து கொடுக்கின்றன. இதனால் நிதியுதவி செய்பவர்களின் திட்டங்களையே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பல மத நிறுவனங்களும் கூட வெறும் பிரசார நிறுவனங்களாகவன்றி நிவாரண மையங்களாகி அரச சார்பற்ற நிறுவனங்களாக இயங்குகின்றன. அதாவது மக்கள் நலன்புரி அமைப்புகளும் கூட அரச சார்பற்ற பொறிமுறைக்குள் அவற்றின் சித்தாந்தங்களை உள்வாங்கிய நிலையில் செயற்படுவதை அறிந்து கொள்ள முடியும்.
மக்களின் கூட்டு வாழ்விற்கு நலன்புரி அமைப்புகள் தேவை. நலன்புரி அமைப்புகள் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்ட அந்நிய நிதியுதவியுடன் செயற்திட்டத்துடனும் இயங்கும் நலன்புரி அமைப்புகள் உண்மையான நலன்புரி அமைப்புகளல்ல. அவை அரச சார்பற்ற வகையிலடங்குவதுடன் அரசிற்கு மக்கள் மீதிருக்கும் பொறுப்பை குறைத்து மதிப்பிட மக்களை பழக்கப்படுத்திவிடுகிறது. நலன்புரி கொடுப்பனவுகள் கொடுக்கப்படுகின்ற போது அவர்கள் சமூக சேவையாளர்களாக அன்றிச் சமூக வேலையாளாக மாறுகிறார்கள். நலன்புரி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் மக்களுக்குப் பணம் வழங்கப்படும் போது நலன்புரி விடயங்கள் அல்லது பிறருக்கு உதவுதல் சேவை செய்தல் போன்றனவெல்லாம் செல்லுபடியற்ற விடயங்களாகின்றன. ஒருவர் தனக்காக உழைத்ததுடன் பிறருக்காகவும் உழைக்க வேண்டுமென்ற பொது நோக்கு கேலிக்குரியதாக்கப் படுகிறது. எதையுமே விட்டுக் கொடுக்காமல் மனிதன் வாழமுடியாது. அந்த விட்டுக் கொடுப்புடன் கூடியதே பொது வாழ்வும் சமூக சேவையுமாகும். எவரோ கொடுக்கும் பணத்தில் பிறருக்கு உதவுதல் அல்லது சமூக சேவை செய்வதென்பது மக்களுக்கு பணிந்த சேவகர்களாகவன்றி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையையே ஊக்குவிக்கும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.