Tuesday, October 30, 2018

வடமாகாண முஸ்லிம்கள் மறுக்கப்படும் ஓர் சமூகம்



2018.10.30ம் திகதிய விடிவெள்ளி ஈ பத்திரிகை நன்றி


கே.கான்

உலக அர­சியல் அரங்கில் நாடு­களின் வர­லாற்றில் ஒரு இனம் அதன் உரி­மைகள் அபி­லா­ஷைகள் தொடர்ந்தும் மறுக்­கப்­பட்டு வரு­கி­ற­தென்றால் அது இலங்­கையில் வாழும் வட­மா­காண முஸ்­லிம்­க­ளா­கத்தான் இருக்க முடியும். மிக நீண்ட கால­மாக பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு உட்­பட்டு இன்­று­வரை தமது தாயக மண்ணில் குடி­யேறி சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான அடிப்­படை வச­திகள் அற்ற நிலையில் எதிர்­காலம் பற்­றிய ஏக்­கத்­துடன் வாழ்ந்து வரும் சமூ­க­மாகும். இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­களின் இரத்­தக்­கறை படிந்த பல அத்­தி­யா­யங்­க­ளுக்குச் சொந்­த­மான ஆண்­டாக 1990 விளங்­கு­கி­றது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­களால் வேர­றுக்­கப்­பட்ட இவ்­வாண்­டினை வட­புல முஸ்­லிம்கள் இல­குவில் மறந்து விட முடி­யாது.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் முஸ்­லிம்கள் அதிக சிரத்தை கொண்ட பல கொடு­மை­களை அனு­ப­வித்து அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளான காலப்­ப­கு­தி­யாக ஒல்­லாந்தர் காலப்­ப­கு­தியைக் குறிப்­பி­டலாம். ஆம் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை முடக்கும் நோக்கில் அவர்­க­ளது வாழ்­வி­டங்­களில் இருந்து வெளி­யேற்­றினர். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலப்­ப­கு­தியை விடவும் மோச­மான ஒரு நிலை. புலி­களின் காலத்தில் முஸ்­லிம்கள் அனு­ப­வித்­துள்ள துன்­பங்கள், இழப்­புக்கள் கறை­ப­டிந்த வர­லா­றா­கவே வடக்கு முஸ்­லிம்­களின் மனங்­களில் பதிந்­துள்­ளது. இந்த உண்­மையைத் தமிழ்த்­த­ரப்பு நியா­ய­வா­திகள் மறுக்­க­மாட்­டார்கள் என்­பது இவ்­வி­டத்தில் எனது பணி­வான கருத்­தாகும்.

1990 களின் பிற்­ப­கு­தியில் இலங்கை வர­லாற்றில் குறிப்­பாக வட­பு­லத்தில் முஸ்­லிம்கள் உள, உட­லியல், பொரு­ளா­தார, சமூக, அர­சியல் ரீதி­யாக தாக்­கப்­பட்டு பாதிப்­புக்­குட்­ப­டுத்­தப்­பட்­டனர். இந்­நி­கழ்வு உல­க­ளவில் விடு­தலைப் புலி­களை மட்­டு­மல்ல தமி­ழர்­க­ளையும் தலை­கு­னிய வைத்­தது. ஆனால் இந்த வர­லாற்று உண்­மையை விடு­தலைப் புலி­களும் ஒரு­சில தமிழ் அர­சியல் தலை­மை­களும் ஏற்க மறுத்­தாலும் தமிழ் புத்­தி­ஜீ­விகள் மற்றும் சாதா­ரண தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்­வது ஆறுதல் தருகிறது. அதன் ஒரு அங்­க­மா­கவே மிக நீண்ட கால­மாக தமிழ் மக்­க­ளுடன் ஒன்­றித்து வாழ்ந்த முஸ்­லிம்கள் தொடர்ந்­தேர்ச்­சை­யாக புலி­களால் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டனர். புலி­களின் கெடு­பி­டிக்குள் சிக்­குண்­டாலும் தமிழ் சமூ­கத்தின் உரி­மைக்­காக குரல் கொடுத்து ஒத்­து­ழைப்பு வழங்­கிய போதும் நாஸிஸ பாணியில் இர­வோடு இர­வாக விரட்­டி­ய­டித்த சோக வர­லாறு நாஸிஸப் படை­களை விட தாம் ஒன்றும் தரத்தில் குறைந்­த­வர்­க­ளல்லர் என்­பதை மனிதப் படு­கொலை மூலம் நிரூ­பித்துக் காட்­டினர். இந்­நி­கழ்வு கறை­ப­டிந்த வர­லா­றா­கவே இன்­று­வரை பேசப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

இரு­பத்­தெட்டு வரு­டங்கள் கடந்தும் கசப்­பான நினை­வு­க­ளுடன் காலத்தை கழித்து வரு­கின்­றனர். காலங்கள் கடந்து கொண்டு செல்­கின்­றதே தவிர மாறி மாறி வரும் அர­சாங்­கங்­களும் வட­புல முஸ்­லிம்­களைக் கண்டு கொள்­ள­வில்லை. முஸ்லிம் கட்சித் தலை­மை­களும் அம்­மக்­க­ளுக்­கான சரி­யான தீர்வை இது­வரை பெற்­றுத்­த­ர­வு­மில்லை. எம்மை தலை­நி­மிர்ந்து வாழ­வைக்­கவும் இல்லை. உலக அரங்கில் நீதிக்கும் சமா­தா­னத்­திற்­கு­மாக உரு­வாக்­கப்­பட்ட ஐ. நாவும் இது­வரை வட­புல முஸ்­லிம்கள் விட­யத்தில் நியா­ய­மாக நடந்து கொள்­ள­வில்லை. சர்­வ­தேச சமூ­கமும் மௌனித்து விட்­டது. மூன்று தசாப்தம் கடக்­கப்­போ­கி­றது. ஆனால் அவர்­க­ளது உரிமைப் பிரச்­சினை கிடப்­பிலே கிடக்­கி­றது.

2002 இல் சமா­தான ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்ட புலிகள் முஸ்­லிம்­களை பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யது ஒரு துன்­பியல் நிகழ்வு எனக் கூறி சாது­ரி­ய­மாக தப்­பித்­துக்­கொண்­டனர். இருந்­தாலும் இதனை நம்பி மீண்டும் தமது தாயகம் நோக்கித் திரும்­பிய முஸ்­லிம்­களை புலிகள் அம்­மக்­களை வர­வேற்­ப­தற்குப் பதி­லாக புரோக்­கர்­களை வைத்து அவர்­க­ளது சொத்­துக்­களை விலை­பே­சினர். முழு வடக்­கையும் தமி­ழர்­களின் தாயகப் பூமி­யாக மாற்­று­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை மறை­மு­க­மாக செயற்­ப­டுத்­தினர். தமி­ழீ­ழத்தில் தமி­ழர்­களைத் தவிர மற்­றைய இனங்கள் விரோ­தி­களே என அடை­யா­ளப்­ப­டுத்­தினர். இது வட­புல முஸ்­லிம்­களை மேலும் வேத­னைக்­குட்­ப­டுத்­தி­யது மட்­டு­மல்ல மீண்டும் உள ரீதி­யான பாதிப்­புக்­குட்­ப­டுத்­தி­யது.

2009 இல் விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்டு அவர்­களின் பூரண கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சங்கள் அரச படைகள் வச­மா­கின. இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்கள் தமது தாயக பூமியில் சுதந்­தி­ர­மாக வாழலாம் என்ற எண்­ணத்­துடன் தங்கள் பிர­தே­சங்­களில் குறிப்­பிட்ட தொகை­யினர் குடி­யே­றினர். ஆனால் அவர்­க­ளுக்கு அங்கு ஏமாற்­றமே காத்­தி­ருந்­தது. அங்­கி­ருந்த அரச உய­ர­தி­கா­ரிகள் இவர்­க­ளது மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் இறுக்­க­மான கட்­டுக்­கோப்பைப் போட்டு முஸ்­லிம்­களைக் குடி­யேற விடாமல் தொடர்ந்தும் தடுத்து வரு­கின்­றனர். வட­மா­காண சபை­யி­னூ­டாக விமோ­சனம் கிடைக்கும் என்­றி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கு அதுவும் ஏமாற்­ற­ம­ளித்­தது. முற்­று­மு­ழு­தாக இந்­திய அரசின் செயற்­திட்­டத்­திற்கு அமை­வா­கவே இச்­சபை இயங்கி காலத்தைக் கடத்­தி­ய­துடன் முஸ்­லிம்கள் விட­யத்தில் கரி­சனை காட்­டப்­ப­ட­வில்லை என்­ப­துதான் உண்மை.

முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் கூட வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் கூடிய கரி­சனை காட்­ட­வில்லை. தமது அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றிக்­கொள்ளும் செயற்­திட்­டங்­க­ளி­லேயே காலத்தைக் கழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. மாறி­வரும் அர­சாங்­கங்­களில் தமது கட்சி சார்ந்த நலன்­க­ளையும் அமைச்சுப் பத­வி­க­ளையும் வெளி­நாட்டு வசதி வாய்ப்­பு­க­ளையும் பத­வி­க­ளையும் மையப்­ப­டுத்­தி­ய­தாவே அமைந்­துள்­ளதைக் காணலாம். ஆனால் தேர்தல் காலங்­களில் ஏமாற்று அர­சி­யலை மிக லாவ­க­மாக நீலிக்­கண்ணீர் வடித்து மக்­களை ஏமாற்றி வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­கின்ற கபட அர­சி­ய­லையே தொடர்ந்தும் செய்து வரு­கின்­றனர். இவர்கள் இம்­மக்­களை வைத்து அர­சியல் வியா­பாரம் நடாத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசைப் பொறுத்­த­வரை முஸ்­லிம்­களின் அதிக வாக்­கு­களைக் கொண்ட கட்சி என்றும், முஸ்­லிம்­களின் ஏக­போக கட்சி என்றும் அதன் உரி­மைக்­கான கட்சி என்றும் கோஷம் எழுப்­பு­வது மட்­டுமே அதன் உரி­மைக்­கான குர­லாக இருந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இக்­கட்­சியின் வளர்ச்­சிக்கு வட­மா­காண முஸ்­லிம்­களின் பல­வந்த வெளி­யேற்­றமும் ஒரு கார­ண­மாக அமைந்­தது என்­பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அறிந்­தி­ருந்­தார். ஆனால் தற்­போ­தைய தலைவர் இது விட­யத்தில் வெறும் வார்த்தை ஜாலங்­களால் காலத்தைக் கழித்துக் கொண்டு செல்­கிறார். முஸ்­லிம்­களின் உரி­மைக்­காக வளர்த்­தெ­டுக்­கப்­பட்ட இக்­கட்சி இன்று சலு­கைக்குள் கட்­டுண்டு கிடக்­கின்­றது. அதனால் வட­புல முஸ்லிம் சமூ­கத்தின் தாகம் தணி­யாத பிரச்­சி­னை­யா­கவே இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.

அதே­நேரம் 2009 – 2011 வரை வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்குக் கிடைத்த அரு­மை­யான சந்­தர்ப்­பத்­தையும் தமது சுய­நல அர­சி­லுக்­காக நழு­வ­விட்ட காலத்தை நினைக்­கும்­போது வட­புல முஸ்­லிம்கள் வேத­னைப்­பட்டவர்­க­ளாகவே வாழ்ந்து வரு­கின்­றனர். அந்­நேரம் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரா­கவும் மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு அமைச்­ச­ரா­கவும் இருந்த ரிஷாத் பதி­யுதீன் தனக்கும் தான் சார்ந்த முஸ்லிம் சமூ­கத்­திற்கும் கிடைத்த அந்த வரப்­பி­ர­சா­தத்தை அம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் கவனம் செலுத்­தா­த­தினால் இன்று அச்­ச­மூகம் கைகட்டி, மௌனித்த மறு(றை)க்கப்­பட்ட சமூ­க­மாக மாறு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­து­விட்டார். ஆனால் தற்­போது அங்­க­லாய்த்து கருத்­துக்கள் தெரி­விப்­பதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

2013 ஆம் ஆண்டு நடந்து முடிந்த வட­மா­காண சபைத் தேர்தல் ஓர­ளவு வட­புல முஸ்­லிம்­க­ளுக்கு ஆறுதல் தரும், அவர்­க­ளது உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் தமது வாழ்­வி­டங்­களில் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான வழி­வ­கை­களை மேற்­கொள்ளும் என்ற நம்­பிக்­கையும் ஏமாற்­ற­ம­ளித்­தது. அத்­தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி விக்­னேஸ்­வரன் நீதி­யாக நடந்து கொள்வார். பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் நியா­ய­மான உரி­மை­க­ளையும் தேவை­க­ளையும் பெற்­றுக்­கொ­டுப்பார் என்­றி­ருந்த முஸ்­லி­க­ளுக்கு ஏமாற்­றமே அளித்­தது. அன்று விடு­தலைப் புலிகள் ஆயுத முனையில் முஸ்­லிம்கள் மீது செய்­த­வற்றை இன்று வட­மா­காண சபை அதி­காரத் தொனியில் சாதித்­தனர். அர­சி­யலில் தான் புதி­தென்­றாலும் அர­சியல் சாக்­க­டையில் தானும் விதி­வி­லக்­கல்ல என்­பதைத் தனது ஐந்து வரு­ட­கால பத­வியில் வடக்கு முத­ல­மைச்சர் நிரூ­பித்து விட்டுச் சென்­று­விட்டார்.

அதே­நேரம் வட­மா­காண சபையில் வடக்கு முஸ்­லி­ம்களை பிர­தி­நி­தித்­துவப் படுத்­திய முஸ்லிம் கட்சி சார்ந்த உறுப்­பி­னர்கள் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக எந்­த­வொரு ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொள்­ள­வில்லை. குறைந்­தது ஒரு பிரே­ரணையேனும் சபையில் முன்­வைக்­க­வில்லை. அம்­மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளான காணிப்­பி­ரச்­சினை, உட்­கட்­ட­மைப்பு வச­திகள், வாக்குப் பதிவு, மீள்­கு­டி­யேற்­றத்தில் உள்ள தடை­களைக் களைதல் போன்ற விட­யங்­களில் கவனம் செலுத்­தாது நடந்து முடிந்த ஒவ்­வொரு சபை அமர்­விலும் கதி­ரையைச் சூடாக்கிக் கொண்டு தமக்­கு­ரிய வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­றுக்­கொண்டு நம்பி வாக்­க­ளித்த மக்­களை ஏமாற்றி காலத்தை கழித்த வர­லாற்று நிகழ்­வையே காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வரை வட­, கி­ழக்கில் அதி­கா­ர­முள்ள கட்சி என்­ற­வ­கையில் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் இதய சுத்­தி­யோடு ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வொரு முன்­ந­கர்­வு­களும் இது­வரை மேற்­கொள்­ள­வில்லை. அக்­கட்­சியில் இருக்­கக்­கூ­டிய ஒரு­சிலர் முஸ்­லிம்கள் சார்­பான கருத்­துக்­களை வெளி­யிட்ட போதும் அதி­லுள்ள பெரும்­பா­லா­ன­வர்கள் முஸ்லிம் விரோதப் போக்­கையே மறை­மு­க­மா­கவும் பகி­ரங்­க­மா­கவும் கடைப்­பி­டித்து வந்­தனர். மேலும் அப்­பாவி தமிழ் மக்­க­ளையும் வீதிக்கு இழுத்து தாம் சார்ந்த விரோதப் போக்கை நியா­யப்­ப­டுத்த முயல்­வ­தா­னது வட­புல முஸ்­லிம்கள் விட­யத்தில் அவர்­க­ளது இரட்டைப் போக்கைக் காட்­டு­கி­றது மட்­டு­மல்ல வெட்­கக்­கே­டான விட­ய­மு­மாகும்.

சர்­வ­தேச சமூ­கத்தின் கண்ணில் மண்ணைத் தூவி­விட்டு தமது காரி­யங்­களை கன­கச்­சி­த­மாகக் கையா­ளு­கின்­றனர். தெற்கில் சிங்­கள பேரி­ன­வாதம் செய்­கின்­றதைப் போன்ற ஒரு கபட நாட­கத்தை வடக்கில் தமிழ் பேரி­ன­வாதம் செய்­து­வ­ரு­கின்­றது. அதா­வது வெளி­நாட்டுத் தூது­வர்கள் உய­ர­தி­கா­ரி­களின் வரு­கையின் போது முஸ்லிம் மத­குரு ஒரு­வரை அழைத்து அந்த இடத்தை சமா­ளிப்­பது மட்­டு­மல்ல இங்கு தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் நாம் ஒற்­று­மை­யாக ஒன்­றி­ணைந்து வாழ்­கின்றோம் என்ற ஒரு மாயை­யைக்­காட்டி தமது ஆதிக்க சக்­தியை தொடர்ந்தும் தக்­க­வைத்துக் கொள்­கின்­றனர். கட்சி நல­னுக்கு அப்பால் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளையும் அணுகி முஸ்­லிம்­களின் விவ­காரம் தொடர்­பாக பேசி அவர்­க­ளுக்­கான நியா­ய­பூர்­வ­மான உரி­மை­களை வழங்க சந்­தர்ப்பம் வழங்­காது ஒரு மறை­முக அர­சியல் நிகழ்ச்சி நிரலைச் செய்து வரு­கின்­றனர்.

இன்று 28 வரு­டங்கள் கடந்தும் அகதி என்ற நாமத்­துடன் அநா­த­ர­வாக முக­வ­ரி­யற்ற நிலையில் ஜன­நா­யக நாடொன்றில் ஒரு சமூகம் வாழ்ந்து வரு­கி­ற­தென்றால் அது இலங்­கை­யா­கத்தான் இருக்­க­மு­டியும். வட­மா­காண முஸ்­லிம்­களின் பல­வந்த வெளி­யேற்­றத்தின் பின்­ன­ரான மாறி மாறி வரும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் வேத­னை­ய­ளிக்­கின்­றது. 2009 இல் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் மிகக்­கு­று­கிய காலத்தில் அரசின் செயற்­திட்­டத்­துடன் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டது போன்று மூன்று தசாப்த கால­மாக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட வட­புல முஸ்­லிம்­களை அர­சாங்கம் கண்டு கொள்­ளா­தது அர­சொன்றின் ஜன­நா­யக விரோதப் போக்­கையே சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

எனவே வட­புல முஸ்­லிம்கள் இது­வரை காலமும் மறு(றை)க்கப்­பட்ட சமூ­க­மா­கவே தொடர்ந்து இருந்து வரு­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. அவர்­க­ளது உரி­மைகள் மட்­டு­மல்ல உணர்­வு­களும் மறுக்­கப்­பட்ட நிலையே காணப்­ப­டு­கின்­றது. வட­புல முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு 28 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இன்­று­வரை நீறு­பூத்த நெருப்­பா­கவே அவர்களது பிரச்சினை இருந்துகொண்டிருக்கிறது. நல்லாட்சியை நம்பி வாக்களித்தும் அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. தற்போது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிகாரமாற்றமா? அல்லது மக்கள் நலன் சார்ந்த மாற்றமா? எது எப்படி இருப்பினும் வடபுல முஸ்லிம்களின் நிலை தொடர்ந்தும் கேள்விக்குறிதான்? இதுதான் எமது சமூகத்தின் தலைவிதியா? என அம்மக்கள் அங்கலாய்த்து வினா எழுப்புகின்றனர்.

இந்த நாட்டில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆணைக்குழுவை நியமித்து அதிலும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்து இழப்பீடுகளையும் நஷ்டஈடுகளையும் வழங்கிய அரசாங்கங்கள் வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் சுமார் 28 வருடங்கள் எந்தக் கரிசனையும் காட்டாது மௌனம் காப்பதன் இரகசியம்தான் என்ன? இந்த நாட்டின் உயர்மட்ட குழுவால் தயாரிக்கப்பட்டு அரசாலும் மற்றும் சர்வதேச சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) வினால் பரிந்துரைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு துரித மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான இழப்பீடு இன்னும் நடைமுறைப்படுத்தாததன் இரகசியம்தான் என்ன? முஸ்லிம் தலைமைகளே! அரசாங்கமே! வருகிற தேர்தல்களில் எங்களிடம் வாக்கு கேட்பதற்கு முன்னர் எமது பூர்வீக இடங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுத்தாருங்கள்.

இது வடக்கு முஸ்லிம்களின் மனக்குமுறலாகும்.
-Vidivelli

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.