Tuesday, January 18, 2011

இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். - அறிஞர் அண்ணா

கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?"
என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.

தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.

மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.

ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.

இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.

ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.

ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.

இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.....!






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.