Thursday, April 21, 2016

“தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்”



1968ம் ஆண்டு தண்ணீரூற்றில் “தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்” என்னும் பெயரில் சமூகசேவை தொடர்பான நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அப்போது எனது வயது பதினைந்தாகும்..இதன் தலைவராக மீராலெவ்வை முகைதீன் தமபி அவர்களும்,செயலாளராக உசனார் மரைக்கார் அப்துல் சுபைர் அவர்களும்,பொருளாளராக அப்துல்லா லெவ்வை முஹம்மது றஷீத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் நானும் சாதாரண உறுப்பினராக விளங்கினேன். அன்றைய தண்ணீரூற்றில் சுமார் முப்பத்தி ஐந்து முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தோம் இச்சங்கத்தில் தண்ணீரூற்றிலுள்ள அனைத்து இளைஞர்களும் மிகவும் அக்கரையுடன் அங்கம் வகித்தனர்.காரணம் அன்றிருந்த முஸ்லிம் பிரதேச குடும்ப ஆட்சி முறை காரணமாக தண்ணரூற்றுக் கிராம மக்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தனர்..எனவே எமது கிராமத்தை அபிவிருத்தியடைய செய்வதற்காகவே இவ்வமைப்பு தொடங்கப் பட்டதாகும்.எமக்கு வழிகாட்டிகளாகவும் தேவையான உணவு,தேனீர்,பணம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியவர்களாக ஜனாப் அசனா லெவ்வை கோசு முஹம்மது. இவரது சகோதரர் ஜனாப் அசனா லெவ்வை அயினியப் பிள்ளை ஆகியோர் உதவினார்கள்.(இவர்கள் ஊரில் வயது கூடியவர் களாக இருந்த போதிலும் இளைஞர்களைப் போன்று செயற்பட்டவர்கள்) இவர்கள்தான் ஊரில் ஓரளவு தனவந்தர்களாகவும் ஈகை உள்ளம்,சமூகப்பற்று கொண்டவர் களாகவும் விளங்கினார்கள்.அள்ளாஹ் இவர்களுடைய பர்ஸக்குடைய வாழ்வை இலகு படுத்திக் கொடுப்பானாகவும் ஆமீன்.யாப்பில் ஆலமீன்.
இதன் முதற்பணியாக தண்ணீரூற்று ஜூம்ஆப் பள்ளிவாசலின் முன்னா லுள்ள காணியை மீட்கும் பணியாக விளங்கியது.அன்று இக்காணி பாராபரிப்பாளரின்றி காணப்பட்டதுடன்,அன்றைய சமூகத்தின் மலசல கூடப் பிரதேச மாகவும் விளங்கியது.இதனை அபகரிப்பதற்கு சிலர் தயாரான நிலையில் எமது சங்கத்தின் மூலமாக அக்காணியிலுள்ள நாகதாளி.வெரளி, அணிஞ்சில், பூமத்தை,பூவரசு எருக்கலை போன்ற செடி,மரங்கள் போன்றவற்றை அழித்து துப்பரவு செய்யப்பட்டு பொதுக் காணியாக பிரகடனம் செய்தோம்.இதற்கு வேலி அடைப்பதற்காக கம்பிக் கட்டை தேவைப்பட்டது.அதற்கான அனுசரணையை தண்ணீரூற்று தருமு அண்ணர் அவர்களின் உழவு இயந்திரம் சலுகை கட்டணத்தில் தரப்பட்டது.. சங்கத்தின் ஆலோசகர்களது உணவு அனுசரனையுடன் குமுழமுனை விதியில் கணுக்கேணி குளத்தின் பள்ளப் பீலி அருகிலுள்ள காட்டில் கம்பிக்கட்டைகளை போதிய அளவில் தறித்துக் கொண்டுவந்து  அழகிய வேலி போட்டோம்.அதற்கான கம்பியை ஜனாப் அசனாலெவ்வை கோசு முஹம்மது அவர்கள் வழங்கியது குறிப்பிடத் தக்கது.பின்னர் இக்காணில் நெல் விதைத்தோம்.அக்காலத்தில் பெயர்போன மொறுங்கன் என்ற நெல்லினம் நல்லபடி விளைந்தது.ஊர்க்கோழி, கானாங் கோழி, அணில் மற்றும் சிறு குருவி   போன்றவற்றிலிருந்து பாதுகாத்து பொதுக் கிணற்றுக் காணியான மாவடிக் கிணற்றடியில் கதிர்களைச் சேகரித்து சூடடித்தோம்.அது சிறுவர்கள் குட்டாஞ்சோறு சமைப்பதைப் போன்ற அனுபவம். அந்த மாவடி பொதுக் கிணறு பகலில் தண்ணீரூற்று ஆண்களும், சிறுவர்களும், இரவில் பெண்களும் குளிக்கும் இடம் அது இன்று மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேல் வீடு காணப்படுகிறது.
அடுத்து இஸ்லாமிய கலாச்சார இயக்கத்தினால் எமது கிராமத்தில் மாபெரும் மீலாத்துன்நபி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக பிரபலமான பேச்சாளர்களாக சம்மாந்துறை டி.ஆர்..ஓ மக்பூல் அவர்களும்,யாழ் ஒஸ்மானியாக் கல்லாரியின் பிரபல பேச்சாளர்களான இரண்டு மாணவர் களும் வருகை தந்தனர். பெயர் சரியாக ஞாபகமில்லை. இருப்பினும் ஒருவர் இமாம் என்பவராக இருக்கலாம். என எணுகின்றேன்( குறித்த விழாவிற்கான துண்டுப் பிரசுரமும் யாழ்ப்பாணத்தில் அச்சடிக்கப்பட்டது. அது என்னிடமிருந்து 1990ம் ஆண்டு இடம் பெயர்வின் போது காணாமல் போய்விட்டது)
அன்றைய ஜாஹிலியத்தான நிகழ்வையும் கூறத்தான் வேண்டும். அன்றைய விழா நிகழ்சிகளுக்காக தண்ணீ7ற்று ஜூம்ஆப் பள்ளிவாசலிருந்து முல்லைத்தீவு பிரதான வீதி வரையிலும் கோலாகலமான சோடனை ஒலி,ஒளி அமைப்புக்கள் செய்யப் பட்டிருந்தது.
விழா நிகழ்வில் முன்னிரவு நிகழ்வு தற்பொதைய பொது நோக்கு மண்டப காணியில் அமைக்கப்பட்ட மேடையில் கிறாஅத்,மார்க்க பிரச்சாரங்களும்,சொற் பொளிவுகளும்  இஸ்லாமிய கீதங்கள் ஸலவாத் என நிறைவானது.பின்னிரவு நிகழ்வாக முல்லைத்தீவு பிரதான வீதி சந்தியில் கம்பளம் விரித்து கலைவாணி இசைக் குழுவின் இன்னிசை விருந்தும் தொடங்கியது. அன்றைய அமுத கானங்கள்.  என்னையாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். , காலங்களில் அவள் வசந்தம் ,கல்லாயாண சமையல் சாதம் காய்கறி போன்ற பாடல்கள் ஓங்கி ஒலித்து முடிந்தது அடுத்த பாடல் மீண்டும் தண்ணீரூற்று ராஜகோபால் கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்தக் கொளரவம் எனக்குச் சரிபாதி சரி..பாதி…. அமோகமான கைதட்டலுடன் முழங்கிக் கொண்டிருந்தது. நேரம் நல்லிரவை தாண்டியிருக்கும் திடீரென நிப்பாட்டடா பாட்ட என்ற ஒரு சத்தம் கேட்டது பாடலுட்பட வாத்தியங்களெல்லாம் மயங்கமடைந்து விட்டது. ரசிகர் பெரு மக்களும் கிட்டத்தட்ட மயக்க நிலைதான் அந்தப்பக்கம் பார்த்தால் செய்யது முஹம்மது ஆசிரியர் (அதிபர்) இப்ப அவருடைய மீலாத் பயான் நேரம் ……….கொண்டாடுறது மீலாத் விழா பாடல் என்னடாண்டா கடவுளும் நானும் ஒரு ஜாதி  என்று தொடங்கி  தேவையான வகையில் திட்டித் தீர்த்து விட்டு அவர் போய்விட்டார். அதற்குப் பிறகுதான் நம்ம மரமண்டைகளுக்கு உறைத்தது.அப்போ நாமலெல்லாம் ரியூப் லைட்தான்.
அதன் பின் விழாக் குழுவினரில் சிலருக்கு சூடாகி பெரியதொரு அசம்பாவிதம் நடக்க இருந்த நிலையில் அது தடுக்கப்பட்டு விழாவும் இனிதே நிறைவேறியது. ஆனால் இன்று மீலாத் விழா தேவையில்லை என்ற நிலைமைக்கு முன்னேறியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.