Saturday, April 16, 2011

ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கம் முஹர்ரம்.-(இஸ்லாமியப்புத்தாண்டு)

December 16, 2010
இப்பூமியில் வாழக்கூடிய மக்கள் காலத்தை கணக்கிடுவதற்கு பல்வேறு மாதங்களையும் நாட்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
ஜனவரியை துவக்கமாக கொண்ட ஆங்கில வருடபிறப்பு, சித்திரையை துவக்கமாக கொண்ட தமிழ்வருட பிறப்பு போன்று பலவருடபிறப்புகள் நடைமுறையில் உள்ளன
.
நபி(ஸல்) அவர்களது ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. அனைவரிடத்திலும் ஓராண்டுக்கு 12 மாதங்கள் என்ற அளவிலேயே கணக்கிடப்படுகின்றன.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவு) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 9:36)
எனவே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது மனிதன் கண்டுபிடித்ததல்ல. இந்த உலகை படைக்கும்போதே இறைவன் வரையறுத்துவிட்டான் என்பதையே மேற்படி இறைவசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்கு ஆரம்பகாலம் முதல் அரேபியர்கள் முஹர்ரம் மாதத்தை புனித மாதங்களில் ஒன்றாகவே கருதி வந்தனர். முஹர்ரம் என்ற சொல்லுக்கு ‘விலக்கப்பட்டது’ என்றொரு பொருளும் உண்டு.
முஹர்ரம் – ஹராம், ஹரம், ஹுரும், தஹ்ரீம், இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிருந்து பிறந்ததாகும்.
பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, என்றும் புனிதம் காத்தல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
உதாரணமாக தொழுகைக்கு முன் செளிணியப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் ‘தக்பீர் தஹ்ரீம்’ என்றும் உம்ரா, ஹஜ்ஜுக்கு முன் அனுமதிக்கப்படுபவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் இஹ்ராம் என்றும் ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் விலக்கப்பட்டவை ஹரம் எல்லைக்குள் தடுக்கப்படுவதால் ஹரம் (புனித எல்லை) என்றும் மஸ்ஜிதுல் ஹராம் புனிதமான பள்ளிவாசல் என்றும் சொல்லப்படுகிறது.
முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா என்றழைக்கப்படும் சிறப்பான ஓருநாள் உண்டு. ஆம்! அது முஹர்ரம் 10ம் நாளாகும். ‘நானே கடவுள்’ என்று கூறிய ஆணவக்கார ஃபிர்அவ்னிடமிருந்து இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களையும் அவர்களை பின்பற்றியோரையும் அல்லாஹ் தனது வல்லமையால் காப்பாற்றிய நாள்.
ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்த நாள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்றிருந்ததை கண்டார்கள். அவர்களை நோக்கி ‘நீங்கள் இன்று நோன்பு நோற்பதின் நோக்கம் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்களோ, இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா(அலை) அவர்களை ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடிக்கச் செய்தான். அதற்கு நன்றி செலுத்துவதற்காக நபி மூஸா (அலை) அன்றைய தினம் நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நபிமூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய) நாங்கள்தான் (யூதர்களான) உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டுவிடட்டும் எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா(ரலி), ஆயிஷா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
ரமலானுக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதம் நோன்பாகும். கடமையான தொழுகைக்கு பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்.
யூதர்களின் வழிமுறைக்கு மாற்றமாக ஆஷ§ரா நாளுக்கு முந்தைய தினமான 9ம் நாளும் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இனிவரும் காலங்களில் நான் உயிருடனிருந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் நான் நோன்பு நோற்பேன்’ என நபி(ஸல்) கூறினார்கள். நூற்கள்: புகாரி, முஸ்லிம்.
ஆனால் நபி(ஸல்) அவர்கள் அடுத்தவருடம் உயிருடன் இல்லை. அந்த வருடமே மரணித்து விட்டார்கள். ‘ஆஷுரா நோன்பு நோற்பதால் எதிர் வரும் வருடத்தின் பாவங்களுக்கு அது பரிகாரமாகும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம்.
ஆகவே நாம் முஹ்ரம் 9ம், 10ம் நோன்பு நோற்போம்.
ஆஷுராவும் கர்பலாவும்
முஹ்ர்ரம் 10ம் நாள்தான் நபி(ஸல்) அவர்களின் பேரன் ஹுசைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சோகச்சம்பவமான கர்பலா நிகழ்ச்சி நடைபெற்றது. நபி(ஸல்) அவர்கள் மரணித்து கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு கலீஃபாவாக யஜீது பொருப்பேற்கிறார். அப்போது யஜீதுக்கும் ஹுசைனுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போரில் ஹுசைன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 63ல் கொல்லப்படுகிறார்கள்.
இதனை அடிப்படையாகக் கொண்டு சிலர் ஹுசைன்(ரலி) அவர்களின் மரணத்தை நினைவு படுத்தி ஒப்பாரி வைப்பது, மாரடித்துகொள்வது, பஞ்சா எடுப்பது, தீமிப்பது, ஊர்வலங்கள் நடத்துவது, ஹுசைன் மவ்லிது ஓதுவது என தேவையற்ற மார்க்கத்திற்கே முரணான பற்பல அனாச்சாரங்களை செய்து வருகின்றனர்.
கன்னத்தில் அறைந்து கொண்டும், சட்டையை கிழித்து கொண்டும் அறியாமைகாலத்து (ஒப்பாரி) க் கூப்பாடு போடுபவன் நம்மை சார்ந்தவனில்லை என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ.
சிலர் இம்மாதத்தை பீடை மாதமென்று நினைத்து இம்மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்வது கிடையாது, தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கிடையாது. இம்மாதத்தில் உருவாகும் குழந்தைகள் ஹுசைன்(ரலி) போல இரத்த காயம்பட்டு சாகும் என்ற மூட நம்பிக்கையில் உள்ளனர். அதற்காகவே தலை, கை போன்ற வடிவங்களில் கொழுக்கட்டை செய்து பாத்திஹா ஓதுவது, பித்தளை, இரும்புபோன்ற உலோகங்களில் தலை, கை போன்ற வடிவங்களை அமைத்து கொண்டு பஞ்சா என்று தூக்கிகொண்டு ஊர்வலம் வருவது, தீ குண்டங்களை மாற்று மதத்தவர்கள் போல உண்டாக்கி தீ மிதிப்பது போன்ற தேவையற்ற, மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வின் கோபத்திற்குரிய காரியங்களை செய்து வருகின்றனர். இவைகள் யாவும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவைகளே.
முஹர்ரம் மாதத்தில் ஹிஜ்ரத்தை நினைவு கூர்ந்து, 9 மற்றும் 10ம் நாட்களில் ஆஷுரா நோன்பை நோற்று பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்பாய் அதனை பயன்படுத்து கொள்வோமாக!
- அபுஅதீ & மெளலவி யூசுப்.எஸ்.பி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.