Saturday, June 25, 2011

இலங்கை முஸ்லிம்கள் தமிழரல்ல! தனித்துவமானவர்கள்! : த ஜெயபாலன்


Jan  26
≡ 
இனத்துவம் என்பது மனிதகுல வாரலாற்றுக் காலம் முதல் இருந்து வருகின்றது. ஆனால் மாற்றமடையாதது என்று எதுவுமே இல்லை என்பதால், வரலாற்று நகர்வில் இனத்துவம் என்பதும் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போய் உள்ளன. இன்று இருக்கும் இனக் குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக் குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம்.
புதிய இனக் குழுக்கள் உருவாக்கம், இனங்களுக்கு இடையே இணைவு, இனக் குழுக்கள் மறைவு என்பது சமூகத்தின் இயங்கியலில் தவிர்க்க முடியாதவை.
சமூக ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக இந்த இனத்துவம் இனக் குழுக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். காலத்துக்குக் காலம் இனத்துவத்தை வரைவிலக்கணம் செய்யவும் இனக் குழுக்களை வரையறுக்கவும் சமூக ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் வேறுவேறு அணுகுமுறைகளைக் கையாண்டு உள்ளனர். ஒரு சடப்பொருளை வரையறுப்பது போல், ஒரு பொறியியல் சமன்பாட்டை நிறுவுவது போல் மனித சமூகத்தை வரையறுக்கவும் முடியாது. நிறுவவும் முடியாது.
சடப்பொருள் அல்லாமல் உயிரினங்களான தாவரங்கள், விலங்குகளை அடையாளப்படுத்தும் போது அவற்றின் புறத்தோற்றத்தையும் புறச்செயற்பாடுகளையும் புறச்சூழலையும் அடிப்படையாகக் கொண்டு அடையாளப்படுத்த முடிகிறது.
ஆனால் மனித சமூகத்தின் அடையாளப்படுத்தல் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. மனிதகுலத்தின் அடையாளப்படுத்தல் புறத்தின் அடிப்படையில் மட்டும் வரைவிலக்கணப்படுத்தக் கூடியதல்ல. அது மனிதனுடைய அகம் சார்ந்த அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றது. மனிதகுலத்தின் உள்ளுணர்வுகள் மனிதகுலத்தை அடையாளப்படுத்துதலில் மிக முக்கிய அம்சமாக அமைகிறது. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட இனக் குழுக்கள், இனத்துவம் பற்றிய சமூக விஞ்ஞான ஆய்வுகளை பார்க்கும் போது உள்ளுணர்வின் அம்சங்கள் வலுவடைந்து வருவதைக் காணலாம். இந்த உள்ளுணர்வே மனிதகுலத்தின் குறிப்பிட்ட பிரிவு தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதனைத் தீர்மானிக்கும் குறிப்பிடத்தக்க காரணியாகிறது.
”ETHNIC CLASSIFICATION IN GLOBAL PERSPECTIVE”  என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையினால் பிரசுரிக்கப்பட்டது. United Nations Statistical Division இனால் 141 நாடுகளில் அவற்றின் இனக் கணக்கெடுப்புக்கு கையாளப்பட்ட முறையை இக்கட்டுரை ஆய்வுசெய்துள்ளது. இதன்படி 90 வீதமான நாடுகளில் ethnicity, nationality, indigenous group, and race என்ற பதங்களின் கீழ் வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றைவிடவும் வேறு பதங்களும் இணை பதங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. உதாரணமாக  “Caste/Ethnicity” (Nepal); “cultural and ethnic background” (Channel Islands/Jersey); “grupo étnico (pueblo)” (Guatemala); “Ethnic/Dialect Group” (Singapore); “Ethnic nationality” (Latvia); and “race or ethnic group” (Jamaica) என்ற பதங்கள் - இணைபதங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவை இனத்துவ வகைப்படுத்தல் அடையாளப்படுத்தலில் உள்ள சிக்கல்கலைக் காட்டி நிற்கின்றது.
ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினை தனித்துவமாக (இனக் குழுவாக) அடையாளப்படுத்துவதற்கான வரைவிலக்கணங்கள் எண்ணற்றவை உள்ளன. Ethnic Group or Ethnicity என்பது கிரேக்கத்தில் இருந்து வந்த சொல். இது Nation என்பதாகவே மொழிபெயர்க்கப்பட்டது. Ethnic என்ற சொல்லும் அதனை ஒத்த சொற்களும் 14ம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அன்று அவற்றிற்கான விளக்கம் முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்தது. இந்தச் சொல்லாடல்களின் நவீன பரிமாணம் 20ம் நூற்றாணடின் நடுப்பகுதியில் 1950க்களில் ஆரம்பமாகியது. ஒக்ஸ்போர்ட் டிக்சனரியில் Ethnic Group என்பது 1972 இலேயே சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனிதகுல வரலாறு முதல் இருந்து வருகின்ற ஒரு விடயத்தை விளக்குவதற்கான பதம் 1950க்களின் பின்னரேயே மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இன்றும் இந்த இனத்துவம் தொடர்பான சமூக விஞ்ஞானச் சொல்லாடல்கள் தமிழில் மிகப் பற்றாக்குறையாகவே உள்ளது. உள்ள சொல்லாடல்களும் வரையறுக்கப்படவில்லை.
இனத்துவம் தொடர்பான ஆய்வுகள், இனத்துவத்தை வரையறை செய்வது பற்றிய விளக்கங்கள் ஏராளம் உள்ளன. இன்றும் இது எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே செல்கின்றது. இவற்றில் கொம்யூனிஸ்ட் தலைவரான ஜே வி ஸ்ராலின் இன் தேசிய இனம் பற்றிய வரையறை குறிப்பிடத்தக்கது. தேசம் என்பது வரலாற்றுரீதியாக கூர்ப்படைகின்றது, உறுதியான சமூகம் மொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு மற்றும் உளவியல் உருவாக்கத்தில் சமூகக் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும். - A nation is an historically evolved, stable community of language, territory, economic life, and psychological makeup manifested in a community of culture.” (J. V. Stalin, 1913, from Davis, p. 163).
ஜே வி ஸ்ராலினுடைய இந்த வரையறை உறுதியான தொடர்ச்சியான சமூகம், பொதுவான மொழி, குறிப்பிட்ட நிலப்பரப்பு, சமூகத்தை இணைக்கின்ற பொருளாதாரம், பொதுவான பண்புகள் என்ற ஐந்து அம்சங்களை வலியுறுத்துகின்றது. இந்த அம்சங்கள் உடைய மக்கள் பிரிவு வரலாற்றின் குறிப்பிட்ட காலச்சூழலில் தேசமாக உருவாகும் என்கிறார் ஜே வி ஸ்ராலின். இதிலிருந்து தேசத்தை உருவாக்கக் கூடிய இனங்களே தேசிய இனம் என்ற வாதம் பரவலாக இன்றும் வைக்கப்படுகின்றது.
ஜே வி ஸ்ராலினுடைய இந்த வரையறையின் அடிப்படையில் இலங்கை முஸ்லீம்கள் (மொகமட் நிஸ்தார் - சோனகர்’) தொடர்ச்சியான நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, சமூகத்தை இணைக்கின்ற பொருளாதாரம் (இவர்கள் ஏனைய சமூகங்களிலேயே தங்கி நிற்கின்றனர்.) என்பன இல்லையென்றும் அதனால் அவர்கள் ஒரு தேசத்தை கட்டமைக்கக் கூடிய தேசிய இனம் அல்ல என்றும் வாதிடப்படுகிறது.
ஆனால் ஜே வி ஸ்ராலினுடைய இனத்துவ வரையறைகளுக்கு முன்னும் பின்னும் ஏராளமான வரையறுப்புகளும் ஆய்வுகளும் வந்துள்ளன. பெனடிக்ற் அன்டர்சனின் கற்பனைச் சமூகம் (ஒரு மக்கள் பிரிவு தாங்கள் ஒரு அரசியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களைத் தனித்துவமானவர்களாக்கும்.) உட்பட இன்னமும் வரையறைகள் வந்துகொண்டு உள்ளன.
உறுதியான சமூகம், பொதுவான மொழி, குறிப்பிட்ட நிலப்பரப்பு, தனித்துவமான பொருளாதாரம், பொதுவான பண்புகள், பொதுவான வரலாறு, பொதுவான கலாச்சாரம் (மதம்), பொதுவான பாரம்பரியம் (பரம்பரை), குழுசார்ந்த உள்ளுணர்வு, பிறரால் குறிப்பிட்ட குழுவினராக அடையாளம் காணப்படல் என்பன இனத்துவத்தை வரையறை செய்வதற்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான அம்சங்களாகக் காணப்படுகிறது.
இவ்வாறான அம்சங்களை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கொண்டு தனித்துவமான இனமாக ஒரு மக்கள் பிரிவு தங்களை அடையாளப்படுத்த முற்படுகின்ற போக்கு இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீவிரமாகியது. 1991ல் நடைபெற்ற 37 பாரிய யுத்த முரண்பாடுகளில் 35 யுத்தங்கள் உள்நாட்டு யுத்தங்கள். இலங்கை முதல் வட அயர்லாந்து வரை நடந்த உள்நாட்டு யுத்தங்கள் இனமுரண்பாடுகளாகவே இருந்துள்ளது. இவ்வாறான ஆயுத முரண்பாடுகளில் பல பத்து பத்தாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டு உள்ளது. இவற்றைவிடவும் கனடாவில் கியூபெக் போன்ற பல முரண்பாடுகளும் இனங்கள் தொடர்பாக இருந்து வருகின்றது. இந்த இனத்துவ வகைப்படுத்தலும் இனத்துவ அடையாளமும் 1960க்களின் பின் மிக முக்கியமான அம்சமாக இருந்து வருகிறது.
அரசியல் அதிகாரம், வளங்கள், நிலம், அந்தஸ்து என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் ரீதியாக தங்கள் தனித்துவத்தை நிறுவ வேண்டிய அவசியம் இனத்துவ அடையாளத்தையும், இனத்துவ வகைப்படுத்தலையும் முன்தள்ளுவதற்கு காரணமாக உள்ளது. அதிகாரத்தையும் வளங்களையும் காணியையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லாமல் அல்லது பகிர்ந்துகொள்வதால் தாங்கள் இதுவரை அனுபவித்து வந்தவற்றை இழக்க நேரிடும் என்று அஞ்சுபவர்கள் இனத்துவ அடையாளங்களை மறுக்கின்றனர். நிராகரிக்கின்றனர். இதனையே நாம் இலங்கையில் காண்கிறோம்.
இலங்கை என்பது ஒரு தேசம். அதில் வாழும் எல்லோரும் இலங்கையர் என்பதும், அவர்களுக்கு சம உரிமை உண்டென்பதும் பெரும்பான்மைச் சிங்கள அரசியல் தலைமைகளின் முடிவாக உள்ளது. இலங்கையில் தமிழ், சிங்களம் என்ற இரு தேசிய இனங்கள் உண்டென்பதும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு பிரிந்து செல்கின்ற சுயநிர்ணய உரிமை உண்டென்பதும் தமிழ் தேசிய அரசியல் தலைமைகளின் முடிவாக உள்ளது. இத்தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் முஸ்லீம் மக்களை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதே கருத்து சில இடதுசாரிகளிடமும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு மக்கள் பிரிவின் அகம்சார்ந்த உணர்வுகளை முற்றாக நிராகரித்து, ஒரு மக்கள் பிரிவை நீங்கள் இவ்வாறு தான் அடையாளப்படுத்த முடியும் என்று விதிமுறைகளை யாரும் திணிக்க முடியாது. அதேசமயம் கவர்ச்சியான அரசியல் சொல்லாடல்கள் மட்டும் பிரச்சினைகளின் தீர்வுக்கு உதவமாட்டாது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் குறைந்தபட்சம் நான்கு மக்கள் பிரிவினர் வாழ்கின்றனர். சிங்களர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர். இவர்களில் சிங்களவர் தவிர்ந்த ஏனைய மக்கள் பிரிவினர் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட போதும் இவர்களை இணைத்து பொதுத்தமிழ் அடையாளம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் முன்னெடுக்கப்பட்டு இருக்கவில்லை. அல்லது அவ்வாறான முயற்சிகள் பலவீனமானதாகவே இருந்துள்ளது. மாறாக யாழ் சைவ வேளாள ஆண் ஆதிக்கச் சிந்தனையில் உருவான தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் அடையாளத்தை ஒருமுகத்தன்மை உடையதாகவும் யாழ் சைவ வேளாள சமூகம் சாராதவர்கள் இரண்டாம் தரமானவர்களாகவும் கணித்தனர். (விதிவிலக்கு கல்வித் தகiமையில் உயர்ந்திருந்த உயர்சாதிக் கிறிஸ்தவர்கள்.)
தொடர்ச்சியான இந்தப் புறக்கணிப்பு ஆனது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையையும் மீறி தமிழ்பேசும் சமூகங்கள் பிளவுபடுவதற்குக் காரணமானது. தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்ற முரண்பாடுகளுடன் சாதிய முரண்பாடுகளும், பிரதேச முரண்பாடுகளும் தமிழர்கள் மத்தியில் கூர்மையடைந்து உள்ளது. தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக இவ்வாறான முரண்பாடுகள் இல்லை என்று நிராகரித்து, அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை மறுத்து வந்தமையால் பொதுத் தமிழ் அடையாளத்தினுள் தங்களை அடையாளம் காண முடியாத நிலைக்கு ஏனைய தமிழ் சமூகங்கள் தள்ளப்பட்டு உள்ளன.
1910ல் படித்த இலங்கையருக்கான தேர்தலில் கராவா சாதியைச் சேர்ந்த மார்க்கஸ் பெர்னான்டோ என்ற மருத்துவ கலாநிதி போட்டியிட்டார். மார்க்கஸ் பெர்னான்டோவின் வெற்றியை விரும்பாது கோவிகம உயர்சாதி சிங்களவர்கள், யாழ் சைவ வேளாளரான சேர் பொன் ராமநாதனை தேர்தலில் நிறுத்தி வெற்றியடையச் செய்தனர். ஆனால் பிற்காலத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மாறாக சிங்கள இனம் தனக்குள் இருந்த அக முரண்பாடுகளை மெல்ல மெல்ல களைந்து வருகின்றது. மேலும் கரையோரச் சிங்களவர்களுக்கும் கண்டிச் சிங்களவர்களுக்கும் இடையே புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றது. இந்த உறவு சிங்கள அரசியல் தலைமைகளால் மிகுந்த விழிப்புணர்வுடன் மிகவும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு விருகின்றது.
ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் இனத்தின் அகமுரண்பாடுகளைத் தீர்ப்பது பற்றி தமிழ் அரசியல் தலைமைகள் அசமந்தமாக இருந்தது மட்டுமல்ல அக முரண்பாடுகளைத் தூண்டு வகையிலேயே நடந்துகொண்டுள்ளன. சேர் பொன் ராமநாதன் முதல் தவிபு தலைவர் வே பிரபாகரன் வரை தமிழ் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் தமிழ் சமூகத்தின் பன்மைத்துவத்தை நிராகரிப்பதாகவே இருந்து வருகிறது.
”…..தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ, அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான், தேசிய இன விடுதலையை, இனங்களின் தனித்துவத்தை, அம் மக்களின் அபிலாசையை மதிப்பவர்களின் கடமையுடன் கூடிய அரசியல் நேர்மையுமாகும்என்ற அபு நிதால் உடைய வாதம் இலங்கை முஸ்லீம்களுக்கு பொருத்தமானதாக அமைந்தாலும் அதனை பொதுமைப்படுத்த முடியுமா என்பது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டியது.
பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத குறும்தேசிய சக்திகளும் ஒடுக்குமுறையை மேற்கொள்கின்ற அரசும் இலங்கை முஸ்லீம்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் உள்ள அக முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அவர்களையும் தனித்தனி மக்கள் பிரிவுகளாகப் பிரிப்பதன் மூலம் சிறிய சிறய இனக் குழுமங்களை, கற்பனைச் சமூகங்களை காலப்போக்கில் உருவாக்க முடியும். இது அரசு ஒடுக்குமுறையை லாவகமாகத் தொடர்வதற்கு அனுகூலமாக அமையும். பிரித்தாளும் தந்திரத்திற்காக ஜேர்மன் - பெலிஜிய காலனியாதிக்க நாடுகள் ருவான்டாவில் ஹற்ரு - ருட்சி இனக்குழுக்களை கட்டமைத்தமை இதற்கு சிறந்த ஒரு உதாரணமாகலாம். ஆகவே கிழக்கு முஸ்லீம்கள், யாழ் முஸ்லீம்கள், தெற்கு முஸ்லீம்கள், கிழக்கு தமிழர்கள், வன்னித் தமிழர்கள், சிறுபான்மைத் தமிழர்கள் ….. என்ற புதிய இனக்குழுக்கள் உருவாக்கப்படுவது அல்லது அவர்களை தனி மக்கள் பிரிவாக அங்கீகரிப்பது எவ்வாறு பிரச்சினைக்கு தீர்வாகும், ஆரோக்கியமானதாக அமையும் என்பது விவாதிக்கப்பட வேண்டியது.
ஆயினும் தொடர்ச்சியான அக முரண்பாடும் அதனாலான ஒடுக்குமுறையையும் சமூகங்கள் தொடர்ச்சியாக சகித்துக்கொள்ள முடியாது. வரலாற்றுச் சூழல் நிர்ப்பந்திக்கும் போது அவர்கள் தங்களுக்கான தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்க முற்படுவார்கள். தமிழரல்லாத அடையாளத்தை முதலில் உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் இலங்கை முஸ்லீம்கள். இவர்கள் மீதான தொடர்ச்சியான காழ்ப்புணர்வும், புறக்கணிப்பும் அவர்கள் தனித்துவமான மக்கள் பிரிவாக உருவாவதற்கான சூழலை ஏற்படுத்தியது.
உயிர்ப்பு சஞ்சிகையின் முஸ்லீம் தேசம் பற்றிய இதழ் இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்கத்தை (prejudice) வெளிக்கொண்டு வந்திருந்தது. இலங்கையில் காணப்பட்ட முஸ்லீம் எதிர்ப்புணர்வு மேற்கு ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுடன் கைகோர்த்து, தற்போது இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.
ஆகவே இந்த முஸ்லீம் எதிர்ப்பு உணர்வு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் நடவடிக்கை அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாத அமைப்புகளிலும் தங்களை இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரிடமும் இத்தகைய முஸ்லீம் எதிர்ப்புணர்வு மலிந்து காணப்பட்டது. அதனாலேயே தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இன்றி வடபகுதி முஸ்லீம்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்ற முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த முஸ்லீம் எதிர்ப்பு உணர்வுக்கு ஸ்தாபன வடிவம் கொடுத்திருந்தனர்.
தொடர்ச்சியான இந்த முஸ்லீம் எதிர்ப்பு உணர்வின் விளைவாகவும் இலங்கைப் பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளாலும் முஸ்லீம் மக்களிடையே தமிழ் எதிர்ப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டது. இவ்விரு எதிர்ப்பு உணர்வுகளின் வெளிப்பாடுகள் ஈவிரக்கமற்ற வன்முறையில் முடிவடைந்ததுடன், இரு சமூகங்களையும் இரு துருவங்களை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்த எதிர்ப்பு உணர்வுகளின் விளைவாக இடம்பெற்ற ஆட்கடத்தல், கொள்ளை, கப்பம், படுகொலைகள் என்பன இரு சமூகங்களினாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளே மிகத் திட்டமிட்ட முறையில் ஸ்தாபனமயப்படுத்தி இனச்சுத்திகரிப்பை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர்.
தற்போது முஸ்லீம் மக்கள் தங்களைத் தனித்துவமானவர்களாக உணர்வதுடன் முஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்ததன் மூலம் தமிழர்கள் முஸ்லீம்களை அவர்கள் தமிழரல்ல வேறொரு மக்கள் பிரிவினர் எனபதனை நிறுவியும் உள்ளனர். அவ்வாறே சிங்களவர்களும் முஸ்லீம்களை சிங்களவர்களாக அடையாளம் காணவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் கிறிஸ்தவர்களை தங்களில் இருந்து மாறுபட்டவர்களாகக் காணாமல் முஸ்லீம்களை தங்களில் இருந்து வேறுபட்டவர்களாகக் காண்கின்றனர். அதனால் முஸ்லீம்களுடைய மதம் உட்பட அவர்கள் தனித்துவமானவர்களாகின்றனர்.
தமிழர்கள் தங்களுக்கு தேவைப்படும் போது, முஸ்லீம்களும் தமிழர்களே என்றும் தங்களுக்கு வேண்டாத போது அவர்கள் தமிழரல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் சேர் பொன் ராமநாதன் முதல் வே பிரபாகரன் வரையான இரட்டைவேச அரசியலை இனியும் தொடர முடியாது.  இவ்வாறான நிலையில்முஸ்லீம்களுக்கு தமிழே தாய்மொழி அவர்களும் தமிழர்களே. அவர்கள் தனித்துவமானவர்கள் அல்லஎன்ற வாதம் அர்த்தமற்றது.
ருவான்டாவை எடுத்துக்கொண்டால் பல மில்லியன் மக்களைப் பலிகொண்ட இனமுரண்பாட்டு வரலாறு அவர்களுடையது. ஹற்ரு, ருட்சி இனங்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனர். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். பரம்பரையியல் கூறுகளிலும் ஒரே தன்மையைக் கொண்டுள்ளனர். ஆனால் ருட்சி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று உயரமானவர்கள், மெல்லியவர்கள், சற்று நிறம் குறைந்தவர்கள். இனப்படுகொலைகளின் போது தவறுதலாக தங்கள் இனத்தவர்களையே படுகொலை செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. பிரித்தாளும் தந்திரத்திற்காக ஜேர்மன் - பெலிஜிய காலனியாதிக்க நாடுகள் இந்த வேற்றுமையை கட்டமைத்ததாகக் சொல்லப்படுகிறது. பெனடிக்ற் அன்டசனின் கற்பனைச் சமூகம் என்பதற்கான உதாரணமாகவும் ஹற்ரு - ருட்சி இனங்கள் அமைகின்றன.
இலங்கை முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களை மதக்குழுவிற்கும் அப்பால் தனித்துவமான மக்கள் பிரிவாகக் கொள்கின்றனர். இலங்கை முஸ்லிம்கள் தனியான தேசிய இனம்!”  என்ற அபு நிதால் உடைய வாதம் வலுவானதே. இது அபு நிதால் உடைய வாதம் மட்டுமல்ல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடாகவும் உள்ளது. அவர்களைத் தமிழ்பேசும் மக்கள்அல்லது இஸ்லாமியத் தமிழர்கள்என்ற தமிழ் அடையாளத்துடன் இணைப்பதையோ அல்லது தமிழ் அடையாளத்தின் ஒரு துணைப்பிரிவாக கொள்ளப்படுவதையோ இலங்கை முஸ்லீம்கள் முற்றாக நிராகரிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்களை முஸ்லீம்கள் ஆகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். மாறாக நிஸ்தார் மொகமட் சோனகர்என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தச் சொல்லாடல் பெரும்பாலும் இலங்கை முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே உள்ளது. இது முஸ்லீம் சமூகத்தினுள் மேற்கொள்ளப்பட வேண்டிய விவாதம். முடிவு எடுக்க வேண்டியவர்கள் முஸ்லீம்களே.
முஸ்லீம் என்ற பொது அடையாளப்படுத்தலை ஏற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை முஸ்லீம்கள்சர்வதேச அங்கீகாரத்தையும் அடையாளப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நிஸ்தார் மொகமட் குறிப்பிட்டது போல் சோனகர்என்ற அடையாளப்படுத்தல் அந்த அங்கிகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்கப் போவதில்லை. மேலும் இது ஒரு விவாதத் தளத்தைக் கூட எட்டாத ஒரு விடயமாகவே முஸ்லீம் சமூகத்தில் இன்மும் உள்ளது. இலங்கை அரசாங்கம் தனது பதிவுகளில் சோனகர்என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்தாலும் அது வெறும் பதிவு என்ற அளவிலேயே உள்ளதே அன்றி, அந்தச் சொல்லாடலுக்கு ஒரு அரசியல் பலம் இருக்கவில்லை. இச்சொல்லாடலுக்கான அரசியல் வலுவை நிஸ்தார் மொகமட் மற்றும் அவர்சார்ந்த கருத்தாளர்களர்களால் கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குரியதே.
சோனகர்என்ற சொல்லாடல் மூலம் இனத்தையும் மதத்தையும் வேறுபடுத்தும் முயற்சி சுவாரசியமானதே. ஆனால் முஸ்லீம் அல்லாத ஒருவர் சோனகராக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு இருந்தால் அவர் எப்படி சிங்களவர்களில் இருந்தும் தமிழர்களில் இருந்தும் முஸ்லீம்களில் இருந்தும் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டிருப்பார்? அல்லது சோனகர் என்பது இலங்கை முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் ஒரு மாற்றுச் சொல்லா? என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.
முஸ்லீம்களுடைய தனித்துவம் பற்றிய விவாதத்தில் அவர்களுடைய மத அடையாளத்தை வைத்துக்கொண்டு காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் போக்கு தமிழர்கள் மத்தியில் எல்லை மீறியதாக உள்ளது. மதங்கள் மனிதர்களால், பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால் அவர்களுடைய தேவைக்காக உருவாக்கப்பட்டவை. மதமும் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமே. அரசு ஒடுக்குமுறையை நேரடியாக மேற்கொள்ளும் போது மதம் அந்த ஒடுக்குமுறையை சமூகத்தின் மேற்கட்டுமானங்னளான கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றினூடாக மேற்கொள்கிறது. துரதிஸ்ட வசமாக இதனை உணராத மனிதகுலம் மதங்கொண்டு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆயினும் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாங்கள் எண்ணும் நல்ல அம்சங்கள் மதத்தில் இருப்பதாக எண்ணி மதப் பிரிவுகளாகவே வாழ்கின்றனர். ஒருவர் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமை அவருக்கு உண்டு. இன மத அடிப்படையில் வன்மத்தை கொட்டுவது மேற்குலக நாடுகளில் குற்றமாகிறது (hate crime). ஆயினும் இணையங்களில் சில கருத்தாளர்கள் வன்மத்தை வெளியிட்டு இன மத குரோதங்களைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். நாஸிகளின் கருத்துகளுக்கு ஒத்ததான கருத்துடையவர்களும் தமிழ் சமூகத்தின் மத்தியில் வாழ்கின்றனர் என்பது துரதிஸ்டமானது. அதனால் இவ்வாறான வன்மக் கருத்துக்களுக்கு (hate crime) எதிராக காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்கத்திற்கு (prejudice) எதிராக  தமிழ் சமூகம் போராட வேண்டியது அவசியம். இவ்வாறான கருத்துக்களை தமிழர்கள் இனியும் சகித்துக்கொண்டு செல்ல முடியாது.
தமிழ் மக்கள் பிரிவின் பன்முகத்தன்மையை நிராகரித்ததன் ஒரு விளைவே தமிழ் - முஸ்லீம் முரண்பாடு. தமிழர்கள் தொடர்ந்தும் தங்கள் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் பன்முகத்தன்மையின் பிரதிநிதித்துவத்தை மறுப்பதும் தமிழர்கள் மத்தியில் முரண்பாடுகள் இல்லையென்று வாதிடுவதும் முரண்பாடுகள் கூர்மையடைவதற்கே வழிவகுக்கும். முரண்பாடுகளை அடையாளம் கண்டு தீர்க்க முற்படாதபட்சத்தில் இன்று தமிழ் - முஸ்லீம் முரண்பாடுகள் பின்நாளில் பிரதேச, சாதிய முரண்பாடுகள் என இவை வளர்ச்சியடையும் ஆபத்து உள்ளது. கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போகலாம். இன்று இருக்கும் இனக் குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக் குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம்.

நன்றி தேசம் நெ

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.