Thursday, June 30, 2011

மரண வலி வந்து விட்டால்......... -எம்.எம்.ஏ.பிஸ்தாமி (நளீமி)


உயிர் மூச்சு காலாவதிஆவதன்ஆரூடம்தான் மரணவலி.உலகிலுள்ள அத்தனை மொழிகளைத் துணைக்ழைத்தாலும் அதன் வலியை மொழி பெயர்க்க முடியாது.இரத்த ஓட்டத்தால் துடித்த உறுப்புக்கள் இன்றோடு ஓய்வெடுக்கப்போகின்றன.கடிவாளமிடப்படாத ஆசைகளுக்கு இப்போதுதான் சாவுமணி.மனித வாழ்வில் அந்திமப்பொழுதுகளில் அகச்சுவாசமும்,புறச் சுவாசமும் இத்துணை பெறுமதி வாய்ந்த்தாவென்பதை உணரும் தருணம்.இதுவரை இலவசமாகவே நுகர்ந்துவந்த ஒட்சிசனைஇப்போது எத்தனை கோடி டொலர் பெறுமதி செலுத்தியும் தருவிக்க முடியாது.
சூரிய அஸ்தமனம் இல்லாமலே அவனது உள்ளம் காரிருளை அப்பிவிடுகிறது. அவன் மரணிக்கப்போகின்றான்.
மரணம் வருவதால்கடைசி அடையாளம்தான் ஸகராத்வேதனை.அதுவே கடினமான சோதனையாகவும்மாறும்.தப்பித்து நழுவ முடியாதபடி அதனதுபிடி இறுக்கமானதாகவும்,நெருக்கமானதாகவும் அமையும்.இதுவரைக்கும் அந்னியமாகவிருந்த மலகுல்மௌத் அனுமதி கேளாமலேயெ அந்னியொன்னியமாக நெருங்கி வருகின்றார்.சொல்லி அழ வார்த்தையுமில்லை.சோகம் தீர்க்க சொந்தக்காரர்களாலும் முடியாத நிலை.ஆடி ஓடிக்கழித்த வாழ்வுக்கான முற்றுப்புள்ளி நெருங்குகிறது. எதனை விட்டும் நீ வெருண்டோடிக் கொண்டிருந்தாயோ அந்த மரணவலி உண்மையாகவே வந்துவிட்டது.(ஸூரா அல்காஃ-19) தப்பித்துச்செல்லவே முடியாத வேதனைதான்.அது என்கிறது அல்குர்ஆன்.
படைத்தவன் சொன்ன நோக்கத்தை மறந்து பம்பரமாய்ச்சுழன்ற ஆத்மா இன்று அஞ்சி நடுங்குகிறது.கெட்டைக்கால்கள் ஒன்றோடுஒன்றுஉராய்கின்றன. விழிகள் இரண்டும் ஏதோ பயங்கரமான  ஒரு காட்சியை பீதியோடு உற்று நோக்குகின்றன. தொண்டைக்குழியின் வரட்சி ஓய்ந்த்தாக இல்லை. தடம்புரளாமல் பயணம்செய்த நாவு வார்த்தைகளின்மையால் தடம்மாறி தடுமாறுகிறது.உலகையே சுற்றிவந்த பாதங்களால் ஊன்றிக் கொள்ளவும் முடியவில்லை.உறவுகளுக்கு எதோ புரிந்தது போல ஓய்வின்றிப் புலம்பல் பாடுகின்றன.உழைக்துக் கொடுத்தமைக்கான அந்திமப்பரிசு ஒப்பாரியோடு முடிகிறது.எல்லா ஆத்மாக்களையும் போல அவனும் மரணத்தை சுவைத்துப் பார்க்கப்போகின்றான்.அனைத்து உயிர்களும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்” (அல்குர்ஆன்)
“நீ விரண்டோடும் மரணம் நிச்சயம் துரத்தி வந்து சந்திக்கும்”(அல்குர்ஆன்) அந்த நாள்தான் இது.உனது உலக வாழ்வின் அந்திம நாள். உலகிற்கு பிரியாவிடை சொல்லும் நாள்.உறவுகளைப் பிரியும் நாள். மண்னுக்கு இரையாகும் நாள்.நீ வழமைபோன்று இன்று தாமதிக்கவே முடியாது.கெஞசுவாய்,கதறுவாய்,மலகுல் மௌத்தின் காதுகளுக்கு கேட்டாலும் பயனில்லை.“அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்து விட்டால் இறைவா (உலகிற்கு) மீளவும் திருப்பி அனுப்பிவிடு.நான் மீதம் வைத்து வந்த்தில் நற்கருமங்களைச் செயவேன் என்பான்.அவ்வாறன்று(தப்பித்துக் கொள்வதற்கான) வெற்று வார்த்தைகள்தான் அது” (அல்முஃமினான்-99.100) எந்த வேண்டுதலும் பயணளிக்காது..மரணத்திற்கு முன்னர்தான் எல்லா அவகாசங்களும்.
“உங்களுக்கு மரணம் வருமுன் நாம் அருளியவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்.அப்போது அவன் சொல்வான் மிகக்கிட்டிய தவணைக்கு என்னை  கொஞ்சம் தாமதிக்கச் செய்தால் தான் தருமங்களைச்செய்து நல்லடியார் களோடு இருப்பேன்.எந்த ஆத்மாவையும்அதன் தவணை வந்து விட்டால் பிற்படுத்தவே மாட்டான்.நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறியும் ஞானியாக உள்ளான்(ஸூரா அல்முனாபிகூன்-8)இந்த நிலைமை வரமுன் மரணத்திற்காக தயாராக வேண்டும்.எமது வரவை முன்னிட்டு மலக்குமாரின் சபைகள் அலங்கரிக்கப்பட வேண்டும்.எம்மை வேகமாக வருமாறு அழைக்க வேண்டும்.எம்வரவால் அங்கு நறுமணம் கமழவேண்டும்.
எமது உடம்பிலிருந்து வரும் துர்வாடையை நுகரமுடியாமல் சபிக்கப்படக் கூடியவர்களாக நாம் மாறக்கூடாது.உறவுகளால்கைவிரிக்கப்படும் நிலைக்கா னாலும் உயிர்ப்புமிக்க உள்ளத்தோடு அவனைச்சந்திக்க வேண்டும்.“அந்நாளில் செல்வமோ,குழந்தை கட்டிகளோ எப்பயனும் அளிக்காது.மாசற்ற அண்மாக்களுக்கு மட்டுமே விமோசனம் கிடைக்கும்”(அஷ்ஷூரா 88,89) அப்படியான ஆண்மாக்களைசுமந்தவர்களாக அவனைச்சந்திப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படவேண்டும்.ஷைத்தானிய உணர்வுகள் குருதியில் உறைந்து விடாமல் கவனமாக இருக்கவேண்டும்.அவன் எமது பகிரங்க விரோதி.எனவே முடிவு நல்லதாய் மாற அதிகம் பிரார்த்திப்போம்.
“இறைவா எனக்கு சிறந்த முடிவைத்தருமாறு உன்னை நான் பிரார்த்திக்கின்றேன்.என நபியவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள்.நபிவழி பேணி எமது தொழுகையின் பின்னும் இந்த துஆவை சேர்த்து மரணவலியை இலகுவாக்கிக் கொள்வோம்.
நன்றி- அல்ஹஸனாத் (ஜூன்,2011)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.