Wednesday, March 21, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -3

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் மீண்டும் எழுத்துருவில் சந்திக்கின்றேன். ஆம் அன்று 1986.01.07ம் திகதி செவ்வாய்க்கிழமை இப்படி நடக்குமென நானும் எதிர் பார்க்க வில்லை.அன்று இரவு சுமார் பத்து மணியளவில் அண்ணே என்று அழைத்தவாறு எமது நான்கு ஏக்கர் விஸ்தீரணமுள்ள தோட்டத்தின் நடுவே உள்ள வீட்டுடன் கூடிய கடையை நோக்கி இருவர் வந்தார்கள்.இரவில் வீட்டிற்கு யார் வந்தாலும் நான் டோர்ச் லைட்டுடன் முன்னே செல்வது வழக்கம். அன்றும் நானே முன்னே சென்று வந்தவர்களை நோக்கி வெளிச்சத்தைப் பாச்சினேன்.
வந்தவரில் ஒருவன் லைட்டை நிறுத்தச் சொன்னான்.நான லைட்டை நிறுத்திவிட்டு என்னவெனக் கேட்டேன். வந்தவன் திரும்ப உன்னுடைய பெயரென்ன என்று கேட்டான்.வந்தவர்கள் ஏதோ இயக்கத்தைச் சார்ந்தவர்களென்று புரிந்து கொண்டேன்.அது மட்டுமல்லாமல் நான் தெருவில் செல்லும் போது கடந்த சில நாட்களாக அடிக்கடி காணும் ஒருவன் வந்தவர்களின் நிற்பதையும் கண்டு கொண்டேன்.நான் எனது பெயரைக் கூறியதும் தங்களில் ஒருவனுக்கு பாம்பு தீண்டிவிட்டதாகவும் அவனைக் கொண்டு செல்ல எமது கரத்தையைக்(இரண்டை மாட்டு வண்டி) கொண்டு வரும்படியும் கூறினான். அந்நேரத்தில் இராணுவம் கண்டபடி ரோந்து வருவதுமுண்டு.இதனை நான் மனதில் எண்ணியவனாகவும்,பாம்பு தீண்டிய நோயாளியை வண்டியில் கொண்டு செல்வது பொருத்தமில்லை.காரணம் வண்டி வேகமாகவும் செல்ல முடியாது.மற்றும் குலுக்கவும் செய்யுமென்பதால் நான் நிலைமையைச் சொன்னேன்.அப்படியென்றால் நீ வந்து சொல்லு அங்க அவன் பெரியவன் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறான் என்று கூறியதும் நானும் புறப்பட்டு முன்னே லைட்ருடன் முன்னே செல்ல பின்னே வந்தவர்கள் இருவரும் என்னை பின்தொடர அவர்கள் குறிப்பிட்ட இடத்தை நோக்கி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் து-ரத்தை நோக்கி நடக்க தொடங்கினேன்.செல்லும் வழிகளிலுள்ள ஒவ்வொரு சந்திகளிலிருந்தும் ஒருவர் வீதம் ஆட்கள் அதிகரிப்பதை என்னால் உணர முடிந்தது.மழை காலம் ஆனதினால் எனக்கு சரியான குளிராகவும் இருந்தது.கொஞ்சத்து-ரம் சென்றதும் அதிலொருவன் கடந்த கிழமை எமது தோட்டத் தின் பின் பிரதேசத்திலுள்ள எனது நண்பர்களிலொருவனான வைத்திலிங்கம் ஈஸ்வரன் என்னும் இளைஞன் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொணடது பற்றிக் கேட்டான்.நான் தொடர்ந்தேன் ஓம் தம்பி ஈஸ்வரன் நல்ல பிள்ளை என்னுடைய கூட்டாளியும் கூட,அதோடு அவருக்கு தொய்வு நோயும் இருந்தது. எனக்கு அவர் இயக்கமென்று தெரியாது.சுட்டுக் கொண்டு அவரது உடலை லேண்ட்மாஸ்டர் மெசினிலை கொண்டு போனதாக அறிந்தேன்.என்று கூறினேன்.நீங்கள் என்ன தொழில் செய்கிறியள் என்றான்நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றுவதாக்க் கூறினேன்.அவன் மீண்டும் அந்த வருமானம் உங்களுக்குப் போதுமானதா? என்றான். போதாத படியாலதான் நான் விவசாயமும் செய்வதாக்க் கூறினேன்.அப்போது அவன் வேறு எங்கோ வேறு பாதையால போறியள் என்றான்.இல்லைத்தம்பி நீங்கள் சொன்ன இடத்தக்கு கொண்டு போறன் என்றேன்.அப்போது அவன் சொன்னான் இடத்திற்கு கிட்ட போகும் போது சிக்னல் போட்டுப்போக வேண்டும் சொல்லும்படிணயும் கூறினான்.நான் இடம் வந்ததும் ஞாபகப் படுத்தினேன். உடனே அவன் தன்னிடமுள்ள டோர்ச் லைட்டை குறித்த இடத்தை நோக்கி ஒளியைப் பாய்ச்சி விட்டு இப்ப போங்க என்றான்.அப்ப அவன் ட்ராக்ரர் வந்திருக்குது போல நீங்க வந்து சொல்லிப் போட்டுப் போங்க என்றான்.
நான் ட்ராக்ரரை நெருங்கியதும் கைகளை உயர்த்தடா என்று என்னுடன் பேசிக் கொண்டு வந்தவன் சொன்னான்.நான் திரும்பிப் பார்த்தேன் இருபக்கங்களிலுள்ள வர்களின் கைகளில் ரைபில்கள் என்னை நோக்கி உயர்த்தியபடி இருந்தது.நானோ கையை உயர்தவில்லை. முன்னாலிருந்து வந்த ஒருவன் எனது இரு கன்னங்களிலும் கடுமையாக பல முறை தாக்கினான்.என்னுடன் வந்தவர்களிலொருவன் அடிக்காதடா எனத்தடுத்தான்.உடனே எனது இரு கைகளையும் பின்னால் சேர்த்து கட்டினான் ஒருவன்,என்னால என்ன பிரச்சினை எனக்கேட்டேன்.அதற்கு ஒருவன் இவன் சொல்லித்தான் உன்னைக் கொண்டு போறம்.விசாரணை முடிந்ததும் விடுவம் என்றான். ஏற்கனவே ட்ராக்ரர் பெட்டியினுள் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஒருவனை சுட்டிக் காட்டி கூறினான். கூறினான்.யார் இவன்யார்? என நான் கேட்டேன்.ஒரு முஸ்லிம் பெயரை குறிப்பிட்டனர்.இவன் எம்முடன் பேசுவதில்லை. எனறேன். அதெல்லாம் விசாரணையில பார்க்கலாம்.என்றவன் எனது இரு கால்களையும் ஒன்று சேரக்கட்டி  நாலு பேராத்சேர்ந்து து-க்கி இறைச்சிக்கு கொண்டு போகும் மாட்டை ஏற்றுவது போல் து-க்கி பெட்டியினுள் எறிந்தார்கள்.அப்போதுதான் புரிந்தது இவர்கள் புலிகள் என்று காரணம் அவர்களின் செயற்பாடுகள் மிருகத்தனமாக இருந்தது.மெசின் புறப்பட்டது. போன வேகத்தில் இருநு-று மீட்டர் போனதும் பெட்டி கொக்கி உடைந்து பெட்டி வேறு மெசின் வேறாகியது.உடனே ஒருவன் மெசின் ஓட்டியவனை திட்டினான்.அப்போது மீண்டும் அவர்கள் இருவரின் கால் மற்றும் கண் கட்டுக்களை மட்டும் அவிழ்த்து விட்டுச சொன்னார்கள். நீங்கள் இருவரும் இவனோட உந்த காட்டில இருங்க தாங்கள் போய் வேறு வாகனம் கொண்டு வருவதாக.நான் சொன்னேன்.இல்ல எங்கள இதுல வைத்து விசாரித்து விட்டு விடும்படி கூறினேன். அப்போது ஒருவன் சொன்னான் நீதவான் கிளிநொச்சியில இருந்து வந்துதான் விசாரிக்க வேண்டுமாம்.அப்போது நான் சொன்னேன் எங்களை மெசின் மட்காட்டில் ஏற்றி கொண்டு போகும்படி சரியென மட்காட்டிலேற்றி மீண்டும் இருவரின் கையையும் மெசினுடன் கட்டி கணுக்கேணிக்கு கொண்டு போனார்கள். பிறகு இங்கு வெண்டாமென அவர்களே தீர்மானித்து மாமூலையூடாக வ்வுனியா பிரதான வீதிக்கு கொண்டு வந்தார்கள் இவ்வீதியில் கயட்டை(சுடலை)ப்பகுதியில் மெசினை நிறுத்தி உங்களது கண்களைக் கட்டப்போறம் என்றார்கள்.எனது கழுத்தில் தொங்கிய முன்னர் கண்கட்டிய துண்டை எடுத்து எனது கண்ணைக் கட்டினார்கள்.அடுத்தவருக்கு கண்கட்ட துண்டு இல்லை.உடனே அவரது சாரத்தில் கத்தியால் ஒரு குத்துப் போட்டு கிழித்து அத்துண்டால் அவரது கண்ணையும் கட்டினார்கள்.அப்போது ஒருவன் சொன்னான் அவரைப் போட்டிடுவம்,உங்களை விசாரித்துவிட்டு விட்டிடுவம்.எனது உள்ளத்தில் இனம் தெரியாத வேதனை ஏற்பட்டது.எப்படி எனது பகைவராக இருந்தாலும் அவரும் ஒரு முஸ்லிம்தானே ஆனால் நான் பயம் கொள்ளவு மில்லை.புலிகளை நம்பத்தயாராகவுமில்லை.ஆனால் என்னை எமது இறைவன் அல்லாஹ் பாதுகாப்பான் என்று மட்டும் நம்பினேன்.நான் எந்தத்தவறும் செய்யவில்லை. ஆனாலும் மற்றவரைப் பற்றி நான் மிகமிக வேதனையடைந்தவனாக இருந்தேன்.அவர்கள் எனது கண்களை கட்டியிருந்த போதிலும் அவர்களால் எனது மனக்கண்ணை கட்ட முடியவில்லை. அவர்கள் எம்மை முள்ளியவளைப் பகுதி வீடு ஒன்றிற்கு கொண்டு சென்றனர்.அவ் வீடு முள்ளியவளை பிரதேச சபை அலுவல கத்திலிருந்து  சுமார் அரைக்கிலோ மீட்டர் தொலைவில் அதன் பின் புறமாக விருப்பதை பல ஒலிகளின் சப்த ஊகங்களை வைத்து தீர்மானித்துக் கொண்டேன். இப்போது நேரம் நல்லிரவு சுமார் பன்னிரண்டு மணியாகவிருந்தது.இரவு உணவு உண்ணாததினால் சரியான பசியாகவிருந்தது. குடிப்பதற்கு நீர்கூடத் தரவில்லை. இருவரையும் தனித்தனியான இடத்தில் வைத்திருப்பார்கள் போலும். என்னை ஒரு மனிதனாக எண்ணவில்லை.அடிமாடாகத்தான் கருதினார்கள். கைகளை பின்புற மாகவும், இருகால்களையும் கயிற்றினால் கட்டி கண்களையும் துணியினால் கட்டி ஒரு சாக்கின் மீது போட்டு விட்டார்கள்.காலை நீட்டினால் புளுங்கள் நெல் காயப் போட்டிருப்பது புரிந்தது. அப்படியென்னால் இது ஒரு தனி நபர் வீடு என்று எண்ணிக் கொண்டேன்.து-க்கம் வரவில்லை.அடிக்கடி ஒண்ணுக்குப் போக வேண்டிய நிலைமை. காரணம் கடும் மழை,குளிர் என்பனவாகும். நான் நின்று சிறுநீர் கழிப்பதில்லை. ஆனால் நான் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் புலிகளை அழைக்க வேண்டும் ஒருவன் வந்து எனது கால் கட்டுகளை மட்டும் அவிழ்த்து என்னை அழைத்துச் சென்று எனது சாறத்தை மட்டும் து-க்கிப்பிடிப்பான். நான் எனது வேலையைப்பார்க்க வேண்டியதுதான்.இப்படி விடியும் வரை பலமுறை நடந்தது. ஆனால் எனது சிந்தனை சிறகடித்துப்பறந்தது.ஆனால் என்னை புலிகளால் கொல்ல முடியாது. என்று மட்டும் எண்ணிக் கொண்டேன்.அல்லாஹ்வின் நாட்ட மின்றி அணுவும் அசையாது என்று திடமாக நம்பினேன்.
தொடரும்






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.