Friday, July 29, 2011

கடத்தப்பட்ட பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் காவத்தமுனையில் மீட்பு _


   
7/29/2011 12:18:53 PM
  பொலனறுவையில் வைத்து கடந்த வருடம் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் நேற்றுக் காலை ஓட்டமாவடி காவத்தமுனை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம். றியாழின் உத்தரவின் பேரிலேயே சடலத்தின் எச்சங்கள் பொலிசாரினால் தோண்டி எடுக்கப்பட்டன.

இதன் போது நீதிபதி ஏ.எம். றியாழ், மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையின் சட்ட வைத்திய ஆலோசகர் டாக்டர் குணதிலக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.ரகுமான் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். 2010.02.11 அன்று புத்தளத்திலிருந்து பொலனறுவைக்குச் சென்ற வேளையில் ஓய்வு பெற்ற கிராம சேவகரும் சமூக நம்பிக்கை நிதியம் (சீ.ரி.எப்.) எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் முகாமையாளருமான பட்டாணி ராசிக் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்திலும் பொலனறுவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பட்டாணி ராசிக் கடத்திச் செல்லப்பட்டு பல மாதங்களாகியும் பொலிசாரினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததையடுத்து புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைமையிலான சமூக நிறுவனங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்ததுடன் இக் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் வலியுறுத்தி வந்தன.

புத்தளத்தில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்விலும் இக் கடத்தல் தொடர்பில் சாட்சியமளிக்கப்பட்டிருந்ததுடன் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே கடந்த 8.7.2011 அன்று இக் கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்பட்ட சஹாப்தீன் நௌஷாத் என்பவரை இரகசிய பொலிசார் கிளிநொச்சியில் வைத்து கைது செய்துள்ளனர். அவர் வழங்கி தகவல்களுக்கமைய இக் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு நபரான ஓட்டமாவடி காவத்தமுனையைச் சேர்ந்த இஸ்மாயில் முஸ்தீன் என்பவர் கடந்த 16.7.2011 அன்று கொழும்பில் வைத்து இரகசிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே பட்டாணி ராஸிக்கின் சடலம் காவத்தமுனையில் உள்ள வீடு ஒன்றினுள் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேக நபர்களுள் ஒருவரான இஸ்மாயில் முஸ்தீன் நேற்றுக் காலை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் காவத்தமுனைக்கு அழைத்து வரப்பட்டார். ராஸிக்கின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டியதையடுத்து அவ்விடம் தோண்டப்பட்டது. ராஸிக்கின் உடல் படுக்கை விரிப்பு ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் ஆறு அடி ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்ததுடன் அவரது எலும்புகள் கருகிய நிலையிலும் காணப்பட்டன.

சடலம் பட்டாணி ராசிக்கினுடையதுதான் என்பதை அவரது மகன் ராசிக் முகம்மது ரிஸ்கான் அடையாளம் காட்டியதையடுத்து மீட்கப்பட்ட சடலத்தின் எச்சங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் எதிர்வரும் ஆகஸ்ட 2 ஆம் திகதி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் நீதிபதி றியாழ் உத்தரவிட்டார்.

சடலம் தோண்டி எடுக்கப்பட்ட காவத்தமுனை கிராமத்தில் நூற்றுக் கணக்கான பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ___ E-mail to a friend    நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.