Thursday, January 12, 2012

தமிழ் புத்திஜீவிகளின் அறிக்கைக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் வரவேற்பு _


ஏ.ஆர்.ஏ.பரீல்/வீரகேசரி தேசிய நாளேடு 1/12/2012 2:26:28 PM Share
  இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உள்ளீர்ப்பதுடன் தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புத்திஜீவிகள் 71 பேர் வெளியிட்டுள்ள அறிக்கையை பெரிதும் வரவேற்பதாக முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்முஸ்லிம் உறவைப் பலப்படுத்தவும் தீர்வு முயற்சிகளில் இரு சிறுபான்மை சமூகங்களும் கருத்தொருமித்து செயற்படவும் இவ்வறிக்கை உந்துசக்தியாக அமைந்திருப்பதாகவும் முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவித்தனர்

.

இது தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எம்.எல்.ஏ.காதர், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனீஸ் மற்றும் "மீள்பார்வை' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகள் முஸ்லிம்களின் பிரச்சினைக்குப் பரிகாரம் காணப்பட வேண்டுமென அறிக்கை விட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். இது வரவேற்கக் கூடியது என தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எம்.எல்.ஏ.காதர் தெரிவித்தார்.

வடக்கில் முஸ்லிம்கள் தமிழ் சமூகத்துடன் இணைந்து அன்னியோன்னியமாக ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்களிடம் சுமூகமான உறவு நிலவியது. தமிழர்களின் உரிமைகளை நியாயப்படுத்தினார்கள். இந்நிலையில் அவர்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டமை தமிழ் சமூகத்தை சேர்ந்த பலருக்கு வேதனையாக இருந்தது. அவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட முடியாத சூழலில் இருந்தார்கள். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இன்றைய சமாதான சூழலில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தமிழ் சமூகம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துவது நல்ல விடயமாகும்.

தமிழ் புத்திஜீவிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று முடிந்த சம்பவங்கள் தொடர்பாக இணக்கத்துக்கு வருகிறார்கள் என்பதை அவர்களது அறிக்கை தெளிவுபடுத்துகிறது. எனவே முஸ்லிம் புத்திஜீவிகளும் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளும் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனீஸ், தமிழ் சமூகத்தினுடைய அகிம்சை ரீதியான மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்கள் தோல்வியடைந்தமைக்கு பிரதான காரணம் இந்நாட்டின் சிறுபான்மையினரின் பிரச்சினை என்பது தனியே தமிழ் சமூகத்தின் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்பட்டு இந்தப் போராட்டங்களை தமிழ் சமூகம் மாத்திரம் முன்னெடுத்து நடத்தியதாகும்.

தமிழ் புத்திஜீவிகள் முதன் முறையாக ஏகோபித்த குரலில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக இவ்வாறான ஒரு யதார்த்தமான மனிதம் என்ற அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக வெளியிட்டுள்ள இந்த பகிரங்கமான அறிக்கையை நானும் இதில் பாதிக்கப்பட்ட ஒருவன் என்ற அடிப்படையிலும் நாட்டின் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவன் என்ற அடிப்படையிலும் தேசிய ஒருமைப்பாட்டினை வேண்டி நிற்பவன் என்ற அடிப்படையிலும் முழுமையாக வரவேற்கிறேன். நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த அறிக்கையானது ஒரு காலம் தாழ்ந்த அறிக்கையாகக் கருதப்பட்டாலும் கூட கடந்த கால அரசியல் சூழ்நிலைகள் இவ்வாறான புத்திஜீவிகளுடைய செயற்பாடுகளை முழுமையாக ஆயுத முனையில் கட்டுப்படுத்தியிருந்ததென்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

"மீள்பார்வை' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் கருத்து வெளியிடுகையில், நாட்டின் இனப்பிரச்சினைக்கு தாமதியாது தீர்வு வழங்கப்பட வேண்டிய இக்காலக்கட்டத்தில் தமிழ் புத்திஜீவிகள் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் உள்ளடக்கி அறிக்கை வெளியிட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியதே.

தமிழ் அரசியல் தலைமைகள் இவ்வாறான செயற்பாடுகளில் இறங்கியிருக்க வேண்டும். என்றாலும் சிவில் தரப்புகளின் இந்த முன்னெடுப்பினை இங்கு முக்கியமானதாகக் கருத வேண்டும். தமிழ் முஸ்லிம் உறவுகளை ஆதரிப்பவர்கள் பொதுவான நிலைப்பாட்டுக்குள் வருவது ஆரோக்கியமானதாகும்.

இரு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளுக்குத் தீர்வுகள் என்று வரும்போது பேச்சுவார்த்தை என்பது முக்கியமான ஓர் ஆரம்பப்படியாகும். தமிழ் புத்திஜீவிகளின் அறிக்கையை நோக்கும்போது இது போன்ற நல்லெண்ண சமிக்ஞைகள் ஆரோக்கியமானவையாகும்.

வடக்கு முஸ்லிம்களின் பாரிய இழப்புகளுக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் ஒரு முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும் இரு சமூகங்களுக்கிடையில் உறவுகள் ஏற்பட வேண்டும் என்ற ரீதியில் இவ் அறிக்கை முக்கியமானதாகும். இதன் மூலம் வடக்கு, கிழக்கில் இணக்க அரசியலை உருவாக்கி அதனை தேசிய ரீதியில் விரிவுபடுத்த முடியும் என்றார்.
___


நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.