Monday, August 1, 2011

பட்டாணி ராசிக் படுகொலையின் மர்மம் என்ன? _


   
வீரகேசரி இணையம் 7/30/2011 1:39:29 PM Share
  புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவகர் பட்டாணி ராசிக்கின் கொலைச் சம்பவத்தில் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பட்டாணி ராசிக்கின் குடும்பத்தார் கோரிக்கை விடுக்கின்றனர்.


பணத்திற்காகவும் பதவி மோகத்திற்காகவும் தனது தந்தையாரான பட்டாணி ராசிக் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவருடைய மகன் ராசிக் முஹம்மது ரிஸ்கான் தெரிவித்தார். குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:

""1955 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி பிறந்த எனது தந்தை பல்வேறு சமூக பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்து வந்தார். தபால் அதிபர், கூட்டுறவு கடை முகாமையாளர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகிய பதவிகளையும் வகித்து வந்ததுடன் 1993 ஆம் ஆண்டு சமூக நம்பிக்கை நிதிய (சீ.ரி.எப்.) என்ற அரச சார்பற்ற நிறுவனத்தை தோற்றுவித்தார்.

அந்த நிறுவனத்தின் முகாமையாளராகவும் செயற்பட்டு வந்தார். 1993.12.23 அன்று குறித்த அரச சார்பற்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்ததுடன் அதன் செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் செயற்பட்டு வந்தார். சீ.ரி.எப். நிறுவனத்தின் அடுத்த தலைவராக வரும் வாய்ப்பு எனது தந்தைக்கே இருந்தது. இதுவே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு காரணமாகும்.

எனது தந்தை குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவராவதையும் அவருக்கு கீழ் செயல்படுவதையும் சிலர் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் 2010 பெப்ரவரி 11 ஆம் திகதி எனது தந்தை குறித்த நிறுவனத்தின் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றபோது பொலனறுவையில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.

அவர் கடத்தப்பட்டு இரண்டு தினங்களுக்கு பிறகு அவருடைய கையடக்க தொலைபேசியிலிருந்து குறித்த அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களுக்கு குறுஞ் செய்தியொன்று வந்ததுடன் (மிஸ்) கோலும் வந்துள்ளது. குறித்த குறுஞ் செய்தியில் தான் பொலனறுவையில் இருப்பதாகவும் விரைவில் வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எனது தந்தையின் கையடக்க தொலைபேசிக்கு காரியாலயத்தில் உள்ளவர்களும் எமது உறவினர்களும் தொடர்பு கொண்டபோது தொலைபேசி இயக்கப்பட்டதுடன் மறுமுனையிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. பின்னர் அந்தத் தொலைபேசியிலிருந்து கதைத்தவர்கள் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தில் உள்ள சொத்துக்கள் விடயத்தில் தலையிடாமலிருந்தால் ஒரு பிரச்சினையுமில்லை என்றும் இந்த விடயத்தை பெரிதுபடுத்தாது விட்டு விடுமாறும் கூறினார்கள்.

இவ்வாறான பதில்கள் மற்றும் செயற்பாடுகளினால் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டது. இது தொடர்பில் நாம் முந்தல் மற்றும் பொலனறுவை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தோம்.

கடத்தப்பட்ட எனது தந்தையின் கையடக்க தொலைபேசியிலிருந்து கடத்தல்காரர்கள் அவ்வப்போது எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தி வந்த போதிலும் ஏப்ரல் மாதத்துடன் அந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வேறு ஒரு தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பொன்று வந்தது. அதில் புறக்கோட்டை குணசிங்கபுரவிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குள் பொதி ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எடுத்துச் செல்லுமாறும் கடத்தல்காரர்கள் எம்மிடம் தெரிவித்தனர். அதனை எடுத்துப் பார்த்தபோது தந்தையின் அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் அவருடைய மூக்குக் கண்ணாடி என்பன இருந்தன. அவற்றை பின்னர் நாம் பொலிசில் ஒப்படைத்தோம். இது நடந்து ஒரு வாரத்தின் பின்னர் கடத்தல்காரர்களிடமிருந்து மற்றுமொரு அழைப்பு வந்தது. அதில் வத்தளை மாபோல பகுதியில் ஓர் இடத்தில் இரண்டு சிம் காட்கள் இருப்பதாகவும் அதனை எடுக்குமாறும் கடத்தல்காரர்கள் கூறினர்.

கடத்தல்காரர்கள் கூறியதற்கு இணங்க நாங்கள் கொழும்புக்கு சென்றோம். அங்கிருந்து கடத்தல்காரர்கள் தொலைபேசி வழியாக தொடர்பினை ஏற்படுத்தி எந்த இடத்தில் சிம் காட் வைக்கப்பட்டுள்ளது எப்படி போக வேண்டும் என்று வழி நடத்தினார்கள். அதனடிப்படையில் வத்தளை மாபோல பகுதியில் ஒரு தென்னை மரத்திற்கு அடியில் இரண்டு எயார்டெல் சிம்கள் இருந்தன.

அந்த இரண்டு எயார்டெல் சிம்களில் ஒன்றை பாவிக்குமாறும் மற்றையதை குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவரிடம் வழங்குமாறும் கடத்தல்காரர்கள் கூறினர். அந்த இரண்டு சிம்காட்களுடன் கடத்தல்காரர்கள் புதிதாக பயன்படுத்தும் சிம் காட்டும் எனது தந்தையின் பெயரிலேயே எடுக்கப்பட்டுள்ளமை பின்னர் கண்டறியப்பட்டது. ஏப்ரல் 11 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் இறுதி வரை இப்புதிய சிம்காட் தொடர்பிலிருந்தது. பின்னர் எனத தந்தையின் பழைய இலக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இவ்வாறு 2010 ஜூலை மாதம் வரை அந்த இலக்கம் செயல்பட்டதுடன் மீண்டும் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு சில காலம் சென்று அம்பாறை பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றிலிருந்து தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு தொடர்பு கொண்டவர்கள் உமது தந்தையை விடுவிக்க வேண்டுமென்றால் இரண்டு கோடி ரூபா பணம் வேண்டும் என்று எம்மிடம் கேட்டனர். இரண்டு கோடி ரூபா பணத்தை எம்மால் தரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்று நாம் சொன்ன போது குறைந்தது ஒரு கோடி ரூபாவாவது வழங்கிவிட்டு தந்தையாரை விடுவித்துக் கொள்ளுமாறு கூறினார்கள். கடத்தல்காரர்களின் கோரிக்கையினை தொடர்ந்து எமது நண்பர்களிடமும் அயலவர்களிடமும் விடயத்தை கூறினோம். குறித்த அரச சார்பற்ற நிறுவனத்திடமும் இது பற்றிக் கூறிகோம். யாருடைய உதவிகளைப் பெற்றாவது பணத்தை திரட்டி தந்தையாரை கடத்தல் காரர்களிடமிருந்து மீட்டுவிட வேண்டுமென்பதே எமது நோக்கமாக இருந்தது.

நாம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் கடத்தல்காரர்களிடம் 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் வாரம் ஒரு கோடி ரூபா பணத்தைத் தருவதாகவும் தந்தையாரை தங்களிடம் பேச விடுமாறும் கேட்டோம். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் தந்தையின் குரலை ஒலிப்பதிவு செய்து அந்த ஒலிநாடாவையாவது அனுப்பி வைக்குமாறு நாம் கேட்டோம். அன்றைய தினத்திலிருந்து கடத்தல்காரர்கள் எதுவித தொடர்பினையும் எம்முடன் ஏற்படுத்தவில்லை'' என்றார்.

இந்நிலையில்தான் கடத்தல்காரர்களின் தொடர்பு 2010 செப்டம்பர் மாதம் முதல் முழுமையாக துண்டிக்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்கு பிறகு அதாவது 2011 ஜூலை 8 ஆம் திகதி முதலாவது சந்தேகநபரான சஹாப்தீன் நௌஷாத் என்பவர் இரகசிய பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 13 ஆம் திகதி மற்றுமொரு சந்தேகநபரான இஸ்மாயில் முஸ்தீன் என்பவர் கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இரண்டாவது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை ஓட்டமாவடி காவத்தை முனை வீடொன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. ஆறு பிள்ளைகளின் தந்தையான பட்டாணிக் ராசிக் கடத்தப்பட்டு ஒருவருடமும் ஐந்து மாதங்களின் பின்னர் எலும்புக் கூடாக மீட்கப்பட்டுள்ளமையானது அவரின் குடும்பத்தாரை மாத்திரமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பட்டாணி ராசிக்கை போல நூற்றுக் கணக்கானவர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காணாமல் போனவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றார்கள் அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள் என காணாமல் போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பட்டாணி ராசிக்கின் கடத்தல் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் தொடர்ந்ததை அடுத்து புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் புத்தளம் ஜம்மியத்துல் உலமா என்பன இவ்விடயத்தில் தலையிட்டன.

இதனைத் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுடன் புத்தளத்தில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்விலும் இது தொடர்பில் பல சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. அத்துடன் அண்மையில் கொழும்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டதுடன் பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புக்களும் ராசிக்கின் கடத்தல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தன.

இவ்வாறு பல்வேறு தரப்புகளாலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதையடுத்தே இக் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சந்தேகநபர்களை கைது செய்யுமாறு அழுத்தங்களை வழங்கியவர்களுக்கும் பொலிஸார் உட்பட ஜனாதிபதிக்கும் நன்றி கூறும் பட்டாணி ராசிக்கின் மகன் இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றார். ___ E-mail to a friend 
நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.