Thursday, August 25, 2011

புத்தளம் நிலை குறித்து வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா மாவட்டச் செயலாளருடன் பேச்சு


Posted by admin on Aug 25, 2011 in News, Regional News | 0 comments
புத்தளத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல் குறித்து மிகவும் வேதனையும், கவலையும் அடைவதாகவும், அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர தயார் என்றும் தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, இவ்வாறு ஒரு சிலர் செய்த படுபாதகச் செயலுக்காக வேண்டி முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் விடயங்களைத் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எம். கி்ங்ஸ்லி பெர்ணான்டோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,
புத்தளத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற விரும்பத்தகாத செயல் குறித்து புத்தளம் முஸ்லிம்கள் மிகவும் வேதனையடைகின்றனர். அந்தச் சம்பவத்தின் போது இடம்பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் கொலையினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதற்காக வேண்டி சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராய் இருக்கின்றோம். ஆனால் இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலரே அன்றி முழு முஸ்லிம் சமூகமும் அல்ல. இதற்காக வேண்டி இன்று முழு புத்தளம் முஸ்லிம்களையும் எதிரிகளாகப் பார்க்கும் விடயம் வேதனைக்குரியது.
இந்த ரமழான் நோன்பு காலத்தின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்கள் இருகின்றனர். அடுத்த வாரம் பெருநாள் இருக்கின்றது. இந்நிலையில் புத்தளம் முஸ்லிம்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இரவு நேரங்களில் தமது ரமழான் மாத இறுதி நேர வணக்க வழிபாடுகளில் அவர்கள் ஈடுபடுவது பாதிக்கப்பட்டுள்ளது. பெருநாளுக்கான பொருட்கள் கொள்வனவு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு புத்தளத்தில் இயல்பு நிலையை உடன் ஏற்படுத்த சகல நடவடிக்கையினையும் எடுக்குமாறு மாவட்டச் செயலாளரிடம் கேட்டுள்ளேன். நான் தெரிவித்த விடயங்களை கவனமாகச் செவிமடுத்த மாவட்ட செயலாளர் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும், இன்று மாலைக்குள் சுமுக நிலையினை ஏற்படுத்த ஏற்பாடு செய்வதாகவும் என்னிடம் உறுதியளித்தார்.
அத்துடன் நான் புத்தளம் இராணுவ பிரிகேடியர், கடற்படை கமாண்டர், பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோரையும் இன்று சந்தித்து இது விடயமாகப் பேசவுள்ளேன் என்றார்.
நன்றி புத்தளம் ஒன்லைன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.