Thursday, November 4, 2010

CTF ராசிக் கடத்தல் விவகாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடாத்துவதற்கென மிகவும் ஆவலாக புத்தளம் மக்களினால் எதிர்பார்க்கப்பட்டு வந்த கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இன்று காலை சுமார் 9.00 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அவரது வருகையை எதிர்பார்த்து காலையில் இருந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலின் நிர்வாக சபை அங்கத்தவர்கள் மற்றும் புத்தளத்தின் சமூக விவகாரங்களில் பங்கேற்கும் பலரும் காத்திருந்தனர்.
புதிய மண்டபத்தின் மேல் மாடியில் கூட்டம் ஆரம்பமானது. தலைமை உரையை பள்ளி நிர்வாக சபைத் தலைவர் நிகழ்த்த அதனைத் தொடர்ந்து ஜனாப் ராசிக் அவர்கள் கடத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினர் கடந்த எட்டு மாதங்களாக அவரை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள், இந்த விவகாரம் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முறைப்பாடாக எவ்வாறு முன்வைக்கப்பட்டது போன்ற விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை ஏன் புத்தளம் பெரிய பள்ளி கையாள்வதற்குத் தீர்மானித்தது – அதன் நியாயங்கள் என்ன என்ற விடயத்தை ஜனாப் முஸம்மில் தனது உரையில் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் புத்தளம் சமூகத்தின் நலன்விரும்பிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட செயற்குழுவின் இன்று வரையிலான தொடர்ச்சியான செயற்பாடுகள் அமைச்சருக்கும் அவருடன் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இந்த விடயத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி பரப்பப்பட்டுவரும் அவதூறுகளுக்கு பெரிய பள்ளி நிர்வாகமும் உலமா சபைத் தலைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிரடியாகக் கூறினார். பொலிசாரால் தேடப்பட்டுவரும் கடத்தல் சந்தேக நபர் நவ்ஷாதை தான் பாதுகாப்பதாகவும், ராசிக் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் பொலிஸ் தரப்புக்கு அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் பரப்பப்படும் வதந்திகளை தான் முற்றாக மறுப்பதாக கூறிய அமைச்சர் அவ்வாறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதில் ராசிக் அவர்களை மீட்பதற்காக உழைக்கும் செயற்குழு முனைப்புடன் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அவ்வேளை காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து உரையாற்றிய அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் கடத்தப்பட்ட ராசிக் அவர்களை மீட்கும் பணியில் பள்ளியின் செயற்குழு எதிர்கொள்ளும் சவால்களை விலாவாரியாக விபரித்தார். தானோ அல்லது பள்ளி நிர்வாகிகளோ அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் கருத்துக்களை வெளியிடவில்லை. மாறாக அமைச்சரை சந்தித்து இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நல்ல முடிவுகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வமுடன் இருந்ததாகவும் கூறினார். பள்ளி நிர்வாகம் அமைத்த செயலணியின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திரிபு படுத்தி அமைச்சரிடம் கூறிய விஷமிகளை அவர் கடுமையாகக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. “‘எமது இந்த முயற்சிகள் இடம்பெயர்ந்த சகோதரர்களுக்கு எதிரானதோ அல்லது அமைச்சருக்கு எதிரானதோ அல்ல. இரண்டு தரப்புகளிலும் இருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில விஷமிகளின் சதி முயற்சியே இந்த முரண்பாட்டுக்கு காரணம்” என அவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.
கடந்த இரு வாரங்களாக வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் ஜூம்ஆ நடைபெறும் வேளையில் பெரிய பள்ளிவாசலின் முற்றத்தில் விஷமிகளால் வைக்கப்பட்டிருந்தன. புத்தளம் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் அவற்றின் உள்ளடக்கம் அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டார். (இந்த இணையத் தளத்தில் 27.10.2010 அன்று வெளியான உண்மைகள் ஏன் மறைக்கப் படுகின்றன.. யாரைக் காப்பாற்றுவதற்காக? என்ற ஆக்கம் கடந்த 29.10.2010 வெள்ளிக்கிழமையன்று மஞ்கள் நோட்டீஸ் வடிவில் ஆயிரக் கணக்காக அச்சிடப்பட்டு ஜூம்ஆ முடியும் தறுவாயில் கடத்தலில் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அவர்களின் அல்லக்கைகள் சிலரால் பள்ளிவாசல் முற்றத்தில் நின்றிருந்த சின்னஞ்சிறார்களிடம் கொடுக்கப்பட்டிருந்தன. உரிய நேரத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டு அந்த நோட்டீஸ் வினியோகம் தவிர்க்கப்பட்டது.)
சுமார் இரு தசாப்தங்களாக பிட்டும் தேங்காய்ப்பூவும் போல சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழும் சமூகங்களை பிரித்து அதில் இலாபம் காணும் எத்தர்களை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். நாம் ஒன்றுபட்டு இவ்வாறான விவகாரங்களை கையாளும்போது அவ்வாறான பிரித்தாளும் சூழ்ச்சிகள் பயனற்றுப் போகும் என்பது அவரது வாதமாக இருந்தது. அப்துல்லா ஹஸரத் அவர்களின் அழுத்தம் திருத்தமான உரையினை அமைதியாக அமைச்சர் ரிஷாத் செவிமடுத்துக் கொண்டிருந்தார். ராசிக் குற்றம் செய்தவராக இருக்கும் பட்சத்தில் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமே ஒழிய அதற்கு கடத்தலும் கப்பம் கேட்பதும் தீர்வல்ல. எனவே இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் இந்த கடத்தலுக்கு பின்னணியில் உள்ள காரணிகளை கண்டறிந்து இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இந்த சமூகத்தில் நடைபெறாமல் பாதுகாப்பதே எம் அனைவரினதும் குறிக்கோளாகும் என்று அவர் தனது உரையை முடித்துக் கொண்டார்.

ராசிக் கடத்தப்பட்ட பின்னர் அவரை மீட்கும் விடயத்விடயத்தில் சீ.டீ.எப். நிறுவனம் மெத்தனப் போக்குடன் செயற்பட்டு வருவதும் அந்த நிறுவனத்தின் நம்பிக்கையாளர்களுடன் பெரிய பள்ளி நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அவர்களிடமிருந்து ராசிக் தொடர்பாக உருப்படியான எந்த தகவல்களும் பெறப்படவில்லை என்ற விடயம் அமைச்சருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. குறிப்பாக தற்போது உலக உணவுத் திட்டம் (WFP)ல் பணியாற்றும் நிஃமத் என்ற CTFஇன் முன்னாள் நம்பிக்கையாளர் பள்ளியில் நடந்த பேச்சுவார்த்தையில் “ராசிக் கடத்தப்படவில்லை அவர் காணாமல் தான் போய் இருக்கிறார்” என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்த கருத்தை அறிந்து கொண்ட அமைச்சர் தனது புருவங்களை உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் ராசிக் கடத்தல் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பாக விசாரித்த பல்வேறு உள்ளூர் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் மேற்படி நிஃமத் “ராசிக் கடத்தப்படவில்லை. அவர் பெருந் தொகைப் பணத்தோடும் – ஒரு பெண்ணோடும் தலைமறைவாகி விட்டார். எனவே இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வது பயனற்றது” என்று கூறிய பல சம்பவங்கள் அவரது குடும்பத்தினரால் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டன. அதன் உச்ச கட்டமாக ராசிக்கின் மனைவியிடமே நிஃமத் சென்று ராசிக் ஒரு பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டதாக கூறியது தெரிவிக்கப்பட்டதும் சபையில் சலசலப்பையும் சபையோர் மத்தியில் பலத்த விசனத்தையும் தோற்றுவித்தது.

அவ்வேளை கருத்து தெரிவித்த அமைச்சர், மக்கள் சேவைக்கென பெற்றுக் கொண்ட கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொண்டு CTF நிறுவன நம்பிக்கையாளர்கள் தத்தமது பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அந்த நிறுவனம் தொடர்பாக மேல்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், ராசிக் மீட்பு விடயமாக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதற்கு தயாராய் இருப்பதாகவும், பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த இருப்பதாகவும் அதன் அடுத்த கட்டமாக புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் பாதுகாப்பு செயலாளரை சந்திப்பதற்கு கூட ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

கடந்த 30.10.2010 அன்று ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம்களின் இடப்பெயர்வு இருபது ஆண்டு பூர்த்தி நிகழ்வில் ராசிக் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாகி இருக்கும் பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் நவ்ஷாத் கலந்து கொள்கிறார் என புத்தளத்தில் பரபரப்பாக செய்தி ஒன்று உலாவியது. அது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் தான் இந்தியாவில் இருந்து வரும் வழியில் விமான நிலையத்திலிருந்து நேராக வைபவத்துக்கு வந்ததாகவும் அங்கு நவ்ஷாதைக் கண்ட போது கோபத்துடன் “நீர் தேடப்படும் ஒரு சந்தேக நபர். உடனடியாக பொலிசில் சரணடையும்” என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சூடான வாதப் பிரதிவாதங்களுடன் ஆரம்பித்த கூட்டம் அவ்வாறே தொடர்ந்து, இறுதியில் பரஸ்பர உடன்பாடுகளுடன் முடிவுக்கு வந்தது. எந்த ஒரு விவகாரமாயினும் வதந்திகளை நம்பாது உரியவர்களுடன் நேரடியாகக் கலந்து பேசி உளச் சுத்தியுடனும் உயரிய சமூக நோக்குடனும் செயல்படும்போது அந்த செயல்பாட்டின் மேல் இறைவனின் அருட்கரங்கள் இருக்கும் என்ற அப்துல்லா மவ்லவியின் அருள்வாக்கு அனைத்து தரப்பினரதும் கவனத்துக்கு உரியது! அமைச்சரின் வாக்குறுதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளைப் பார்க்க புத்தளம் சமூகம் காத்திருக்கிறது. இன்ஷா அல்லாஹ் ராசிக் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்போடு அவரது குடும்பம் காத்திருக்கிறது!

நன்றி -puttalam.net16.net.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.